ஆன்ம உணர்வே அறிவுக்கு அணி – அணியறுபது 54
நேரிசை வெண்பா
ஆன்ம உணர்வே அறிவுக்(கு) அணிஇனிய
பான்மை உயர்வே பதியணி; - நோன்மை
உறுவது மேன்மைக்(கு) உயரணி; அல்லல்
அறுவது நல்லோர்க்(கு) அணி. 54
- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
அறிவுக்கு அழகு ஆன்ம உணர்வே: உயர்ந்த தலைமைக்கு அழகு இனிய பான்மையே; மேன்மைக்கு அழகு நோன்மையே; நல்லவர்க்கு அழகு அல்லல் அறுவதே ஆகும்.
உத்தம உணர்வு உய்த்துணர உற்றது. அறிவை மருவிய அளவே எல்லா இனங்களும் பெருமை அடைந்து வந்துள்ளன. பலவகை நிலைகளில் அறிவு பரவியுளது. உலக அறிவு, வணிக அறிவு, தொழில் அறிவு, கலை அறிவு, கணித அறிவு, இயல் அறிவு, இசை அறிவு, பயிர் அறிவு, உயிர் அறிவு என இன்னவாறு துறைகள் தோறும் அறிவு ஒளிபுரிந்து வருகிறது.
இந்த வகையில் எந்த வழிகளில் தொழிலாற்றி வரினும் அந்த அறிவு பந்தம் உடையதே. தன் சொந்த நிலையை உணர்ந்த போதுதான் அந்தமில்லாத ஆனந்தத்தை அடைகிறது.
தன்னை அறிய நேர்ந்த போது அந்த அறிவு இன்னல் நீங்கி இன்பம் மிகப் பெறுகிறது. தனது உண்மை ஒளியான ஆன்மாவை உரிமையுடன் மருவிய அளவே அறிவு பெருமகிமை யுறுகிறது.
அறிவு அறிவென்றங்(கு) அரற்றும் உலகம்
அறிவு அறியாமையை யாரும் அறியார்;
அறிவு அறியாமை கடந்து அறிவானால்
அறிவு அறியாமை அழகிய வாறே. 1
அறிவு வடிவென்(று) அறியாத என்னை
அறிவு வடிவென்(று) அருள்செய்தான் நந்தி;
அறிவு வடிவென்(று) அருளால் அறிந்தே
அறிவு வடிவென்(று) அறிந்திருந் தேனே. 2 – திருமந்திரம்
அறிவே வடிவம்; ஆன்மா: இதனை அறிவதே உண்மையான அறிவு: அதுவே தெய்வ ஒளியாய் எழில் மிகப் பெறுகிறது. இன்பம் நிறைகிறது. பரம யோகியான திருமூலர் இவ்வாறு ஆன்ம உணர்வை யாரும் அறிய அருளியுள்ளார்.
இன்பமயமான பரம்பொருளே உயிரென உன்னுள் ஒளி செய்துளது. இந்த உண்மையை உரிமையுடன் உணர்க, உணரின் உயிர் உய்தியுறும். இதனை உணராதது உணர்வாகாது.
இயலறிவ(து) இசைஅறிவ(து) இனமறிவ(து) உளதாம்
அயலறிவ(து) அறிவதல; அறிவறிவ(து) அறிவே. (1)
நவிலுகலை அறுபத்து நாலும் உணர்வாரும்
பவலயம தறுசுத்த பரமம் அறியாரே. (2)
ஆகஅறி. வாளர்அறி வார்இவை அனைத்தும்
ஏகஅறி. வாளர்இவை யாவும் அறியாரே. (3)
ஐயறிவு அறிந்தவை அடங்கினவர் ஏனும்
மெய்யறிவு இலாதவர்கள் வீடது பெறாரே. (4) (மோகவதம்)
அறிவு நிலையைக் குறித்துத் தத்துவராயர் இவ்வாறு வித்தக விநயமாய் நன்கு விளக்கியிருக்கிறார்.
அறிவுமயமாயுள்ள ஆன்மாவை அறிவதே அறிவாம்: அதுவே பிறவித் துயரங்களை நீக்கிப் பேரின்பங்களை அருளும் என்பதை இங்கே அறிந்து கொள்கிறோம். மெய்யறிவை உறுவதே உயிர்க்கு உய்தி, அஃது உறாதவரையும் பிறவி அறாது பேரிடரே விளையும் என்னும் உண்மையைத் தெளிந்து கொள்கிறோம்.
அறிவை அறிவதுவே ஆகும் பொருள்என்(று)
உறுதிசொன்ன உண்மையினை ஓரும்நாள் எந்நாளோ?
மெய்யறிவைக் குறித்துத் தாயுமானவர் இவ்வாறு கருதியுள்ளார். மெய்யான ஞானமே பொய்யான புலையிருள்களை ஒழித்து தெய்வ நிலையான இன்பத்தை அருளுகிறது.
நோன்மை – பொறுமை, தவம்; மேன்மையான தலைமை நோன்மையால் அமைவதால் அதற்கு இது அழகு என வந்தது. பொறுமை மருவி வரப் பெருமை பெருகி வருகிறது. அதிசய நிறைவுகள் யாவும் பொறையிடமே பொருந்தியுள்ளன. அதனை மருவி வருபவர் மாதவர் ஆகின்றார்.
எல்லா உயிர்களுக்கும் இரங்கி நன்மை செய்பவர் நல்லவர் ஆகின்றார். ஆகவே அவர் அல்லல் யாவும் நீங்கி எவ்வழியும் இனியராய் எல்லா இன்பங்களையும் எ்ளிதே எய்துகின்றார்.
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை. 245 அருளுடைமை; பொருள் பொதிந்து வந்துள்ள இந்த அருள் மொழியை வேத மந்திரம் போல் நாளும் ஓதி வரின் ஏதம் நீங்கி ஒழியும்; இன்பம் ஓங்கி வரும்.