எனக்காய் பிறந்தால்

பிரம்மனவன் சிந்தையதை என்னவென்று சொல்வதடி
உன்னையவன் படைத்ததுதான் அதிசயத்தின் எல்லையடி
பிஞ்சுவிரல் தென்றலதன் மென்மையினைத் தருகிறதே
பிறந்தவுடன் மழலைமொழி மனம்முழுதும் வருடியதே

அஞ்சனங்கள் தேவையில்லை அழகுவிழி படைத்தவளே; நான்
கொஞ்சுகின்ற வரிகளெல்லாம் அன்பில்வரும் உளறல்களே
நெஞ்சமதில் நிலைக்கின்றாய்; நினைவுகளை விதைக்கின்றாய்;
மங்கையென மலர்ந்துஇன்று மயக்கங்கள் கொடுக்கின்றாய்

விஞ்சுகின்ற பிள்ளைகுணம் உன்னில் கண்ட விந்தையடி
விடுக்கென்று என்விரலும் கவிபுனைய விழையுதடி
என்னவென்று சொல்வதடி உன் பிள்ளைமுகம் யானறியேன்
இன்னனமே யானுணர்ந்த அத்தனையும் வரிசெய்தேன்

மேன்மையுறு சித்திரமே; மேதினியின் அற்புதமே;
மண்ணில்பூத்த புதுமலரே மங்கையே இதழ்சிரிப்பாய்
என்ன சொல்லி வாழ்த்துவதோ எதை பரிசாய் மாற்றுவதோ
சின்னவரிகள் யான்தந்தேன் சிலையவளை கவிபடைத்தேன்

பிறந்துவந்த பூவையரில் சிறந்துவந்த பூமகளே; நீ
பிறந்த இந்நாள் போதுமடி சிறந்த நன்னாள் ஆகுமடி
நிரந்தரமாய் உன்னுடனே நிலைக்கஎண்ணி வேண்டுகிறேன்
வரம்தருவான் நம்மிறைவன் வாழவேண்டி உன்னோடு

எழுதியவர் : வேத்தகன் (11-Dec-18, 7:07 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 817

மேலே