சித்தத்தின் சுத்தியே தெய்வம்நேர் சேரவணி – அணியறுபது 57
இன்னிசை வெண்பா
சித்தத்தின் சுத்தியே தெய்வம்நேர் சேரவணி;
பத்தி வலையே பரமனைப் பற்றவணி’
தத்துவ ஞானமே தன்னைத் தலைவனைச்
சத்தியமாய்க் காண அணி. 57
- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
தெய்வத் திருவருளை நேரே சேர்தற்குச் சித்த சுத்தியே அழகு: பரம்பொருளை எளிதே பிடித்தற்குப் பத்தி வலையே அழகு; தன்னையும் தலைவனையும் தெளிவாக அறிதற்கு தத்துவ ஞானமே அழகு ஆகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தன்னை - உயிரை. தலைவனை - இறைவனை.
மனம் மாசு படிந்துவர மனிதன் நீசம் அடைந்து இழிகிறான். அது தூய்மை தோய்ந்த பொழுது அதிசய மகிமைகள் அவனிடம் பெருகி வருகின்றன.
பெறலரும் பேறாக மனிதப் பிறப்பைப் பெற்று வந்துள்ளவனாதலால் பெறவுரியதை விரைவில் பெறவேண்டும். அரிய இந்தப் பிறவிக்கு உரிய பெரிய பேறு யாது? எனின் மீண்டும் பிறவாமையே. பிறவா நிலையில் பிறந்த பிறவியே பேரின்பப் பிறவியாம்.
பிறந்தும் இறந்தும் ஓயாமல் உழந்து திரிகிற அவலப் புலைகளே பிறவிகள் என்று பேர் பெற்றிருக்கின்றன. இந்த அல்லல்கள் அறவே ஒழியவேண்டுமானால் உள்ளம் தூயதாய் உணர்வு தெளியவேண்டும். மாசற்ற மனமே ஈசனுக்கு இனிய நிலையமாகிறது. ஈசனாக உரிய மருமம் இனிது அறிய வந்தது.
தீய எண்ணங்கள் ஆகிய அழுக்குகள் மனத்தில் படியாமல் எவன் பாதுகாத்து வருகிறானோ, அவன் துாயனாய் உயர்கின்றான். மாசில்லாத அந்த மனத்தை யுடையவன் மாசில்லாமணியாகிய ஈசன் இனத்தனாய் இன்பம் மிகப் பெறுகின்றான்.
யாவர்க்கும் அரியனாயுள்ள பரமன் அன்பர்க்கு எளியனாய் அருள் புரிகின்றான். பத்தி வலையிற் படுவோன் என ஆண்டவனுக்கு ஒரு பெயர் வித்தகமாய் அமைந்துளது. அன்பினில் விளைந்த ஆரமுதே என்று ஈசனை மணிவாசகப் பெருமான் அனுபவித்துத் துதித்திருக்கிறார்.
எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடில்புகும் அரசே!
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே!
அன்பெனும் கரத்தமர் அமுதே!
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே!
அன்புரு வாம்பர சிவமே! (அருட்பா)
நேரிசை வெண்பா
கற்றதனால் தொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுலம்
பெற்றதனால் போமோ பிறவிநோய் - உற்றகடல்
நஞ்சுகந்து கொண்டருணை நாதனடித் தாமரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி. - அருணகிரியந்தாதி
இறைவனை நினைந்து கரைந்து உள்ளம் உருகி வரின் பிறவி நோய் தீர்ந்து பேரின்பம் பெருகிவரும் என இவை குறித்துள்ளன. பிறவாத பேரின்பப் பொருளை ஆர்வம் மீதூர்ந்து அடைந்தபோதுதான் அவலத் துயரங்கள் யாவும் அழிய நேர்கின்றன.
தன்னை என்றது உயிரை. தலைவனை என்றது உயிர்க்கு உயிராயுள்ள பரமனை. சீவனை அறிய நேர்ந்தபோதே சிவமும் தெரிய வருகிறது. வரவே அதிசய ஆனந்தம் அடைய நேர்கிறான்.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
தன்னையும் தனக்(கு)ஆ தாரத்
தலைவனை யுங்கண் டானேல்
பின்னையத் தலைவன் தானாய்ப்
பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்;
உன்னைநீ அறிந்தாய் ஆகில்,
உனக்கொரு கேடும் இல்லை;
என்னைநீ கேட்கை யாலே
ஈதுப தேசித் தேனே. (கைவல்யம்)
தன்னை அறிபவன் தத்துவ ஞானி
முன்னை அறிபவன் முத்தன்மெய்ஞ் ஞானி
பின்னை அறிபவன் பித்தனஞ் ஞானி
அன்னை அறிவன் அளப்பில் பிறப்பனே.
இவை ஈண்டு எண்ணி உணர வுரியன. தத்துவ ஞானம் எத்தகைய மகிமை வாய்ந்தது என்பதை இங்கு உய்த்துணர்ந்து கொள்கிறோம்.
சூரியன் ஒளி தோன்றியவுடன் உலக இருள் அடியோடு மாய்ந்து போகிறது. அதுபோல் ஞானஒளி தோன்றிய பொழுது உயிரைச் சூழ்ந்திருந்த அஞ்ஞான இருள் முழுதும் அழிந்து ஒழிகிறது.
ஒரு வீட்டுள் எவ்வளவு காலம் இருள் மண்டியிருந்தாலும் விளக்குப் புகுந்தவுடன் அது விரைந்து விலகி ஒழிகிறது; ஒளி எங்கும் பரவி மிளிர்கிறது.
மாய மையலான தீயஇருள்கள் ஊழிகாலமாய் உயிரைத் தொடர்ந்து படர்ந்து அடர்ந்துவரினும், ஞானம் உதயமானால் அப்பொழுதே அவை யாவும் அடியோடு அழிந்து ஒழிந்து போகின்றன.
பொய்யான ஈன மயல்கள் கடல்போல் பொங்கியிருந்தாலும் மெய்யான ஞான ஒளியின் எதிரே அவை விரைந்து விலகி மறைந்து ஒழிகின்றன.
ஞானம் என்னும் சொல் விரிவான பொருளையுடையது. என்றும் உண்மையாயுள்ள பரம் பொருளை உரிமையுடன் தெளிவாக உணர்வதே மெய்ஞ்ஞானமாம்.
அரிய பரமான்மாவை உரிய சீவான்மா நேரே அறிய நேர்ந்த அளவே அதிசய ஒளியாகிறது. ஆகவே வழிவழியாய்த் தொடர்ந்து வந்துள்ள இழிவுகள் எல்லாம் ஒளி கண்ட இருள் என ஒருங்கே ஒழிந்து போகின்றன,
எங்கும் நிறைந்து எல்லாம் அறிந்து என்றும் பரிபூரண சோதி மயமாயுள்ள இறைவனை உரிமையுடன் அறிவது பெரிய ஒரு ஞான பூசனையாம்.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
எப்பொருள் களும்தான் ஆகி
..இலங்கிடப் படுவான் ஈசன்;
அப்படி விளங்கு கின்ற(து)
..அறிதலே அவன்ற னக்கு
மெய்ப்படு பூசை; வேறார்
..செயலினால் அன்று மெய்யே;
இப்படி ஞானம் தன்னால்
..இறைஞ்சிடப் படுவான் ஈசன். (ஆனந்தத் திரட்டு)
கலி விருத்தம்
(மா விளம் விளம் விளம்)
ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனே நானும் தொழுவனே. (அப்பர் தேவாரம்)
கலி விருத்தம்
(விளம் விளம் மா விளம்)
சரியைவொண் கிரியைகால் தடுக்கும் யோகிவை
புரிபவர் தம்மையப் புரியும் செய்கையால்
தெரிதரல் ஆகுமோர் செயலும் இன்றிவாழ்
அரியநல் ஞானியை அறிய லாகுமோ? (1)
நலமுறும் ஓர் சிவ ஞானி இல்லில்வாழ்
நிலையறம் ஆகினும், நீத்து நிற்குமோர்
தலையறம் ஆகினும், தரித்து ஞாலமேல்
இலைமறை காயென இருக்கும் என்பவே. (2) - பிரபுலிங்க லீலை
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
ஈசனை அறிந்த அந்த
..இடத்திலே என்றும் எல்லாப்
பாசமும் நசித்தல் தானும்
..பணியறப் பவத்தின் தீர்வும்
காசுறும் அகில மாய
..கங்குலின் கழிவும் தானே
ஆசுறும் அகண்ட ரூபி
..யாகையும் அனைத்தும் எய்தும். (பிரமகீதை}
நேரிசை ஆசிரியப்பா
மங்கை பங்க! கங்கை நாயக!நின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையும் கண்டேன்; காண்டலும்,
என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன்;
நின்னிலை அனைத்தையும் கண்டேன்; என்னை!
நின்னைக் காணா மாந்தர்
தன்னையும் காணாத் தன்மை யோரே. - பட்டினத்தார்
ஞானக் காட்சியின் மாட்சிகளை இவை நன்கு விளக்கியுள்ளன. பொருள் நயங்களைக் கூர்ந்து ஓர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் கவிராஜ பண்டிதர்.