கடவுளுக்கோர் கடிதம்
இல்லாத ஒருவனுக்கு
இருப்பதாய் ஒர்கடிதம்!
இருந்திருந்தால் நிகழ்ந்திருக்காது
வன்முறைகளும் கலவரங்களும்
அவன் பெயரால்!
இறைவா
கோடிகள் சேர்ப்பதற்கு
கேடிகளின் மந்திர
வார்த்தை நீ!
இங்கு
இருப்பவனுக்கு மட்டுமே
உன் தரிசனம்!
நீ எங்களை
காத்தது போதும்!
உம்மை காத்துக்கொள்
முதலில் எங்களவரிடத்திலிருந்து!
குடும்பக் கட்டுப்பாடு
கண்டிப்பாகத் தேவை
உமக்குத் தான்!
மாளிகையில் நீ
தெருக்களில் நாங்கள்!
பாதகர்களின் பாவங்களை
மன்னித்துவிடு! இல்லையேல்
நீயும் தெருவில்தான்!
உம்மை பேசியும்
கலைப் பொருளாக்கியும்
காட்சிப் பொருளாக்கியும்
காசு சம்பாதிக்கிறார்கள்
இவற்றை கண்டும்
காணாமல் இருப்பதால்
கண்ணில்லை என்னலாமோ?
நீ லஞ்சப்பிரபுக்களின்
கூட்டாளியானது எப்போது?
தவறாமல் விழுகிறது
உண்டியலில் கறுப்புப்பணம்!
இருப்பவன் இல்லாதவன்
என்கின்ற பேதங்கள்
இன்று உன்னிலும்!
விடியலை அறியாதவர்கள்
விடியும் என்று
நம்புகிறார்கள் உன்னை!
முரண்பாடுகளின் வடிவமே
நான்
உன்னிடம் வேண்டுவது
ஒட்டிய வயிறுடன்
வீதியில் ஒருநாள்
உலா வரவேண்டுமென!