கதிரவனுக்கும் வந்தது காதல்
கதிரவனுக்கும் வந்தது காதல் ;
காணுகின்ற இயற்கை மீதெல்லாம் - காதலை
சொல்ல நினைத்து நெருங்கி வருகையில்
கொல்ல வருவதாய் அஞ்சி நடுங்கின - அவன்
நெஞ்சில் குடிகொண்ட பிரபஞ்ச உயிரெல்லாம்!
காற்றை மழையை மகரந்த மலரை
கிளியை மயிலை கானக குயிலை
காணும் பொருளை எல்லாம் கலந்து பேசி
கட்டுக்கடங்கா தம் காதலை சொல்லி - இயற்கையை
தம் இணையவளாக்க இயன்றவரை முயன்றான் இளைய கதிரோன் ! - அவன்
அருகில் வந்ததும் கருகி சுருண்டன காண்பவை யாவும்
உறுதி குறைந்து குருதி சிதைந்து விதிர்விதிர்த்து போயின
அழகான யாவும் அழிவதைக் கண்டு
அரண்டே போனான் அகில கதிரோன் !
பொருந்த காதல் இப்புவனத்தை அழிக்கும் - மீண்டும்
முயன்றாலும் பெரும் கெடுதலை கொடுக்கும் என
தயங்காமல் ஒதுங்கி தரணியை விட்டு விலகினான்.
தன்னிகர் இல்லா கதிரவன் எண்ணம்
தாரணி உள்ளோருக்கு தானாக வந்தால்
எல்லாம் நிலையாய் எந்நாளும் வாழும்.