அன்பின் பெருமை

அன்பு – ஒப்புயர்வற்றது, ஈடு இணையற்றது

கொடுத்தால் வளருமேயன்றிக் குறையாதது

விலைமதிப்பற்றது, தன்னலமற்றது, தகுதியைத் தேடாதது,

தரவும் பெறவும் எளிதானது, இழந்தால் தவிப்பது.

மீளப்பெற இயலாதது. நீடுபுகழ் உடையது

கொடுமையயும் மாற்றவல்லது. கோணலை சரி செய்வது.

சிந்தனையில் சிலிர்ப்பை ஏற்படுத்துவது.

இதமானது. புனிதமானது. வலிமை மிக்கது.

பெருங்கவலையை மாற்றிப் பேரின்பம் தரவல்லது.

நித்திரையிலும் நீங்காதது.

இத்தகய அன்பின் அடிப்படையில் தான் இந்த அகிலமே இயங்குகின்றது. இதனை வர்ணிக்க வார்த்தை கிடையாது.
6ஆம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு ஆசிரியர் அன்பு என்ற தலைப்பினை மாணவர்களுக்கு எவ்வாறு போதிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, திடலில் விளையாடிக் கொண்டிருந்த 2-3 வயதுடைய ஒரு சுட்டிப்பெண் திடீரென வகுப்பறைக்குள் ஓடிவந்து அந்த ஆசிரியரின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டுச் சென்றாள். 2 நிமிடம் அப்படியே நின்றிருந்த அந்த ஆசிரியர் மாணவர்களை நோக்கி, “இதுதானடா அன்பு” இதனை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.

உலகப் பொதுமறையாம் தெய்வப் பனுவலில். பொய்யாமொழிப்புலவர் 10 குறட்பாக்களுள் இதனைத் தெள்ளிதின் எடுத்தியம்பியுள்ளார்.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

இந்நிலவுலகில் அன்பற்றவர் தமக்காகவே பாடுபட்டு மாண்டுபோவார். ஆனால் சிறிதளவேனும் அன்புற்றோர் இறக்கும் வரையில் பிறருக்காகவே வாழ்ந்து மடிவர்.

அன்னை தெரஸா தனது 18 வயதில் யுகேஸ்லேவியாவில் இருந்து இங்கு வரும்பொழுது அவரிடம் இருந்த ஒரே சொத்து ‘அன்பு’ மட்டுமே. தன்னலமற்ற சேவயாற்றி இப்பூவுலகையே தன்வயப்படுத்திய அன்னை தெரஸாவை அறியாரும் உளரோ?


அன்பிலாதார் உடல் என்புதோல் போர்த்தியது என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு மெய்யன்றோ!

கோழி தன் குஞ்சுகளை பருந்திடமிருந்து காத்தல் ஒரு வெறி. அது பலவீனமானது. இருப்பினும் தன் குஞ்சுகளின் மீதுள்ள அன்பினால், பாசத்தினால் அந்த பலவீனம் கூட எதிரியத் தாக்கும் வன்மை பெற்றுயர்கிறது.

வீர சிவாஜி இந்தியாவில் முதன் முதலில் இந்துக்களின் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். அவருடைய மதப்பற்றுக்கும், கடமை உணர்ச்சிக்கும் அடிப்படக் காரணமாய் விளங்கியது அவரது அன்பும் பாசமும் மட்டுமேயன்றோ?

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ(து) ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே”

வளர்க அன்பின் பெருமை. ஓங்குக அன்பின் புகழ்.

அன்புடன் ஸ்ரீ. விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோவை.

எழுதியவர் : ஸ்ரீ. விஜயலஷ்மி (23-Jan-19, 6:45 pm)
Tanglish : anbin perumai
பார்வை : 4822

சிறந்த கட்டுரைகள்

மேலே