நல்லனெனத் தீயனென உற்ற பழக்கத்தின் உள்ளளவே பற்றுக நல்ல பரிந்து - பழக்கம், தருமதீபிகை 36
நேரிசை வெண்பா
நல்லனெனத் தீயனென நானிலத்தில் மானிடன்மேல்
ஒல்லை நிலவி ஒளிர்தல்தான் - தொல்லையின்கண்
உற்ற பழக்கத்தின் உள்ளளவே ஆதலினால்
பற்றுக நல்ல பரிந்து. 36
- பழக்கம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தன் உள்ளத்தில் படிந்த பழக்கத்தின்படியே ஒரு மனிதன் நல்லவன் அல்லது தீயவன் என உலகத்தில் வெளிப்பட்டு வருகின்றான்; ஆகவே ஒருவன் நலமுற வேண்டின் முதலிலேயே நல்ல பழக்கத்தை நயந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.
ஆதியில் என்பதைத் தொல்லையின்கண் என்றது.
பிறந்த பிறப்பின் இளமையையும், இறந்த பிறப்புக்களின் பழமையையும் கிழமையாக அது குறித்து நின்றது,
நினைவரும் நிலையில் வினை வயப்பட்டு உயிர்கள் பிறவியில் உழன்று வருகின்றன. அவ்வரவில் மூன்று வாசனைகள் அவற்றைத் தோய்ந்துள்ளன. அவை மூலவாசனை, சூலவாசனை, காலவாசனை எனப்படும். பிறப்பதற்கு முன்னும், கருவுற்றிருக்கும் காலத்தும், பிறந்த பின்னும் என மூவகை நிலைகள் உயிரில் உறைந்திருக்கின்றன. அந்தப் படிமுறைகளில் படிந்துள்ள தொடர்புகளை வாசனை என்பர்.