ஒளிர்பசியே நீயின்றேல் பொன்றுவார் நோய்வாய்க்குட் போய் - பசி, தருமதீபிகை 26
நேரிசை வெண்பா
உன்வரவை நோக்கி உணர்ந்திருந்து வந்தபின்பு
இன்வரவாய் எண்ணியுடன் ஏத்தியுண்டால் - பின்வருநோய்
ஒன்றேனும் உண்டோ? ஒளிர்பசியே! நீயின்றேல்
பொன்றுவார் நோய்வாய்க்குட் போய். 26
- பசி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பசியே! உன் வரவை எதிர்பார்த்திருந்து நீ வந்த பின்பு உணவை உண்டால் உயிர்களுக்கு என்றேனும் பிணிகள் உளவாகுமா? யாதொன்றும் உண்டாகாது; நீ இல்லாமல் உண்டவர் நோய் வாய்ப்பட்டு அல்லலுழந்து அழிவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
நன்றாகப் பசித்தபின் புசித்தால் வாடிய பயிர்க்கு நீர் வார்த்தது போல் உயிர் செழித்து விளங்கும்; பசியாமல் உண்டால் பிணிகள் பல மண்டி அவலமான அழிவுகள் நேரும்.
பசியளவை ஓர்ந்து அறிந்து என்றதை உணர்ந்து என்றது. பசியறியாமல் உண்டால் உண்டவுணவு நஞ்சாய் உயிர்க்கேடு செய்யும்; உண்மையை உணர்ந்து உறுதி காண்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.
வாய்க்குணவே மண்டி வயிறறியா(து) உண்டுவந்தான்
நோய்க்குணவாய் நொந்து படும்.
என்றதனால் பசியின்றி யுண்டவர் படுதுயரம் அறியலாம்.
பசி இல்லையென்றாலே, நோய் உள்ளதன் அறிகுறி யாகும் எனவே; மருத்துவரை உடனணுகி பரிசோதித்துக் கொள்வது நன்று.

