இலக்கியத்தின் வாசல்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,



கடிதத்துக்கு நன்றி



உண்மையில் நான் உடையாமல் இருந்திருந்தால் ஒரு லும்பனாகி இருந்திருப்பேன். தொடர்ந்து தங்களின் எழுத்து என்னை இந்த மிகப்பெரும் பிரபஞ்சத்தில் கனமின்றி உணரவைத்தது. இது என் வாழ்வில் எனக்கு நிகழ்ந்த சிறப்பான தருணம்.





இப்பொழுதும் என்னுடன் பணி புரியும் நண்பர்கள் என்னை low self esteem உடையவனாக நினைக்கிறார்கள். அதை என் குறையாகவும் கூறி அதை நான் சரி செய்ய எத்தனிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.ஆனால் என்னை பொறுத்தவரையில் நான் இப்பொழுதுதான் சிறப்பாக என்னால் என் கடமையை செய்ய முடிகிறதாக நான் நினைக்கிறன்.



“இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ” என்னுடைய எண்ண ஓட்டத்தையே மாற்றியது.சிறப்பான புத்தகம். இந்து ஞான மரபும், அதன் முரணியக்கமும், முரணியக்கத்தின் அர்த்தமும் அற்புதமும் புரிந்தது. யோசித்தால், பெரும்பாலான தருணங்கள் , இரட்டை படையாகவே [ உதாரணமாக, (0 ,1), ( ஆம், இல்லை ), (முடியும், முடியாது), (கிடைக்கும், கிடைக்காது)] யோசித்திருக்கிறேன், செயல்பட்டிருக்கிறேன். இரண்டு நுனிப்புள்ளிக்கு இடையில் உலகமே இருப்பதை உணராமல் இருந்திருக்கிறேன்.





இந்த நுண்ணறிவு, பிறரிடம் வேறுபாடு இருந்தும், வெறுப்பின்றி வாழ பேருதவி செய்கிறது. எடுத்துக்காட்டாக, என் தந்தையின் மீது எனக்கு கடும் கோபம் இருந்தது. அவர் என்னை நடத்தியவிதம் எல்லா சமயங்களிலும் வெறுப்பையே உருவாக்கியது. என்னுடைய குழந்தை பருவத்தில் ஒரு நாள் கூட நான் நிம்மதியாக தூங்கியதாக எனக்கு நினைவில்லை. என் கல்லூரி நாட்களில் நான் கொந்தளிப்பான மன நிலையுடன் , என்னை நானே மெண்டல் abuse செய்து கொண்டிருந்தேன் என்று இப்போது உணர்கிறேன்.





இந்த சமயத்தில் தான் தமிழ் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது என் வெறுப்புக்குரியவர்களாக முன்னால் இருந்தவர்களைப்பார்த்து பார்த்து பரிதாபம் தான் வருகிறது. அவரிடம் வெறுப்பையோ, பழி உணர்ச்சி இயல்பாகவே எழவில்லை. இந்த thinking process என் வேலையில் மிகப் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.





ஆரம்பத்தில் நான் வாசித்த சிறுகதைகள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்பு தான் தெரிந்தது, அவை பின் நவீனதத்துவ வகையைச் சார்ந்தது. அவைகள் மிகவும் abstract ஆக இருப்பவை, அவற்றில் வாசகன் தன் நுண்ணறிவால் கொண்டு கூட்டி பொருள் கொள்ள வேண்டும் என்று அறிந்தேன். இந்த insight வந்த பிறகு புத்தகங்கள் முற்றிலும் புது மாதிரியான அனுபவத்தை தர ஆரம்பித்தது.





இது போல் பலவகைப்பட்ட இலக்கிய வகைகள் (Genre ) குறித்தும், அத்தகைய புத்தகங்களை எப்படி அணுக வேண்டும், முறையான வாசிப்பிற்கு தேவையான நுண்ணறிவு, தொழிநுட்ப வார்த்தைகள் (Literary terms) முதலியவன குறித்து தங்களது படைப்போ அல்லது தமிழில் பிற படைப்புகள் இருப் பின் , பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.





இலக்கியத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், அவற்றில் இருந்து உன்னால் என்ன உணரமுடிகிறதோ, பெறமுடியுமோ பெற்று கோள் என்றும், அதனை dissect செய்ய தேவையில்லை என்றும் சில நண்பர்கள் சொன்னார்கள். இது சரியா ? அல்லது எல்லா வகை இலக்கியத்தையும் பின் நவீனத்துவ பாணியிலே அணுகலாமா ?





இந்த கேள்வியை கேட்க காரணம் , transgressive வகை புத்தகங்கள் என்னை ஓங்கரிக்க வைக்கிறது . இந்த வகை இலக்கியம் எதை நோக்கி பயணிக்கிறது என்று புரியவில்லை. இவை ஒதுக்கபட வேண்டியவை யா ? அதனால் பல வகைப்பட்ட genre -களை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்தால் ஒரு வேலை விளங்குமோ என்ற ஒரு ஐயம்.





நன்றிகளும், அன்பும்,

மணிமாறன்



அன்புள்ள மணிமாறன்



வாழ்க்கையிலிருந்து இலக்கியத்தை அணுகுவதுதான் மிகச்சரியானது. அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். இலக்கியத்தின் மதிப்பையும் சாரத்தையும் பெரிய குழப்பங்களில்லாமல் அதன் வழியாக அறிந்துகொள்ளமுடியும். இலக்கியத்திற்குள் செயல்படுபவராக வாசிக்கையில் மெல்லமெல்ல இலக்கியத்தின் வகைமாதிரிகளுக்குள் சிக்கிக்கொள்வீர்கள். இலக்கியத்தைப்பற்றிய மதிப்பீடு நுட்பங்களைக் கண்டடைதல், புதியவற்றைத் தேடுதல் என்ற கோணத்தில் மாறிவிடும். காலப்போக்கில் அது வெறும் ஆணவச்செயல்பாடாக ஆகி இலக்கியத்திலிருந்தே அகற்றிவிடும்.



இலக்கியத்தின் மெய்யான மதிப்பு என்பதே அது வாழ்க்கைமீதான விமர்சனம், வாழ்க்கையை அறிந்துகொள்வதற்கான முயற்சி என்பதுதான். ஆகவே அந்தத்தளத்தில் உங்களுக்கு வரும் எல்லாக் குழப்பங்களும் உங்களை நீங்கள் அறிந்துகொள்வதற்கான முயற்சியில் விளைவனதான். நீங்கள் இலக்கியத்தை மதிப்பிடவில்லை, இலக்கியத்தைக்கொண்டு உங்களை மதிப்பிட்டுக்கொள்கிறீர்கள். ஆகவே இலக்கியம் புரியவில்லை, பிடிக்கவில்லை என்பதை உங்களுடைய குறைவாகவோ அல்லது இலக்கியத்தின் சிக்கலாகவோ கொள்ளவேண்டியதில்லை. அவை உங்கள் அறிதலின் படிநிலைகளில் சிலவே. மெல்லமெல்ல நீங்கள் உங்களுக்குரிய இலக்கியத்தை அடையாளம் கண்டுகொள்ளவும் அறியவும் பயில்வீர்கள். உங்களுக்குரியவை அல்லாதவற்றை ஒதுக்கவும், அவற்றை ஒதுக்குவதில் குற்றவுணர்வோ தாழ்வுணர்வோ கொள்ளாமலிருக்கவும் செய்வீர்கள்.



இலக்கியத்தை அறியும் வழி ஒன்றே. அது உங்கள் வாழ்க்கையில், நீங்கள் அறிந்த பிறர் வாழ்க்கையில் என்ன வகையான வெளிச்சத்தை உருவாக்குகிறது என்னும் கேள்வியை அதன்மேல் போட்டுக்கொள்ளுதல். அது உங்கள் சமூகச்சூழலை, வரலாற்றுப்பின்புலத்தை நீங்கள் அறியாத கோணத்தில் காட்டி மேலும் தெளிவாக்குகிறதா? வாழ்க்கைசார்ந்த நுண்ணறிதலை அளிக்கிறதா? ஆம் எனில் அது நல்ல படைப்பு. அல்ல என்றால் நல்லபடைப்பு அல்ல, உங்கள் வரையில். அத்துடன் ஓர் இலக்கியப்படைப்பின் வெளிப்பாட்டு நுட்பத்தை, வடிவத்தைப் புரிந்துகொள்ள சற்று முயற்சி எடுக்கவேண்டும். உண்மையில் தொடர்ந்து கதைகளை வாசித்தால், கொஞ்சம் அதைப்பற்றிய விவாதங்களைக் கவனித்தால் மிக எளிதாக அந்த பயிற்சியை அடைந்துவிடலாம்



இலக்கியத்தின் மையமான நுட்பங்கள் இரண்டு. ஒன்று, அது தான் சொல்லவந்த எதையும் நேரடியாகச் சொல்லிவிடாது. ஏனென்றால் அப்படிச் சொன்னால் அது ஒரு கருத்தாகவே இருக்கும். அது ஒரு கருத்தைச் சொல்வதற்கான ஊடகம் அல்ல. ஆசிரியனின் கருத்தை நாம் தெரிந்துகொள்வதல்ல இலக்கியத்தின் நோக்கம். ஆகவே இலக்கியம் தான் சொல்ல வந்ததை சற்று மறைவாகவே வைக்கிறது. வாசகன் தானே தேடிச்சென்று அதைக் கண்டடையவேண்டும் என நினைக்கிறது. ஒரு துப்பறிவாளன் துப்புகளைக்கொண்டு குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுபோல என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்நிலையில் அது ஆசிரியன் சொல்லி இவன் கேட்பது அல்ல, இவனே கண்டடைந்தது என்றாகிறது. இவனே உருவாக்கிக்கொண்டது அது என்பதனாலேயே அவன் அதைச் சென்றடைந்த பாதை முக்கியமாகிறது. அவன் அதைப்பற்றிச் சிந்தனைசெய்கிறான். அச்சிந்தனை வழியாகவே அங்கே சென்றடைகிறான். அப்படிச் சிந்திக்கவைப்பதே இலக்கிய ஆக்கத்தின் முதல் நோக்கம்



இலக்கியப்படைப்பின் இரண்டாவது நுட்பம், அது நிகர்வாழ்க்கையை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு புதிய வாழ்க்கைச்சூழலை கற்பனையால் வாழச்செய்கிறது. அதற்காகவே அந்த நுட்பத்தை அது அளிக்கிறது. அந்த வாழ்க்கையை உண்மையில் நீங்கள் வாழமுடியாது. அதை அந்த ஆசிரியனின் சொற்கள் வழியாக நீங்கள் வாழ்கிறீர்கள். அந்நிலையில் உங்கள் வாழ்வனுபவங்களின் தொகுப்பு பலமடங்காக விரிந்துவிடுகிறது. ஒரு வாழ்க்கைக்குள் கற்பனையால் நீங்கள் பல வாழ்க்கைகளை வாழ ஆரம்பித்திருக்கிறீர்கள். அது இலக்கியத்தின் நோக்கம். ஆகவே ஒருகதையை வாசிக்கையில் அதை உண்மையிலேயே வாழ முயலுங்கள். வாழ்ந்த அனுபவத்தை எப்படி புரிந்துகொள்ள முயல்வீர்களோ அப்படி அக்கதையில் வந்த நிகழ்வுகளையும் செய்திகளையும் புரிந்துகொள்ள முயலுங்கள்



அதைத்தான் கதைவாசகன் கதையைப் பற்றி யோசிக்கும்போது செய்யவேண்டுமே ஒழிய தன்னுனர்வுடன் கதையை ‘ஆராய’ கூடாது. அப்படி கூறுகூறு ஆகப் பகுத்து ஆராய்ந்தால் பெரும்பாலும் எளிமையான கருத்துக்கள்தான் கைக்குக் கிடைக்கும். அதெல்லாம் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் கருத்துக்களாகவே இருக்கும். ஆகவேதான் பகுப்பாய்வு செய்யக்கூடாது என்கிறார்கள். கதைகளை வாழ்ந்து அறியவேண்டும். விலகி நின்று ஆராய்ந்தறியக்கூடாது



ஒருமுறை எனக்குத்தெரிந்த ஒரு பெண் விஷம் அருந்திவிட்டாள். அருகே வயல்வேலை செய்துகொண்டிருந்த பெண்மணி சட்டென்று மலத்தைக்கரைத்து ஊட்டிவிட்டாள். வாந்தி எடுத்து எல்லாம் வெளியே சென்றது. பெண் பிழைத்துக்கொண்டாள். இங்கே மலம் உயிர்காக்கும் மருந்தாகிறது. அமுதாகிறது இல்லையா? அதைப்போல எல்லாவற்றுக்கும் இலக்கியத்தில் ஒரு மதிப்பு உண்டு. உதாரணமாக, வாழ்க்கை மிக இனியது, மிக ஒழுங்கானது, மிக அர்த்தம்கொண்டது என்ற பொய்யான மாயையில் ஒருவர் இருக்கிறார் என்றால் ஒரு கொடூரமான கதை அவரை உலுக்கி மறுபக்கத்தை உணரச்செய்துவிடும். அவர் நடுவே உள்ள உண்மை ஒன்றை நோக்கிச்செல்ல வழிவகுக்கும். எல்லாமே சரியாக உள்ளது என நம்புவது நடுத்தரவர்க்கத்தின் மாயைகளில் ஒன்று. இத்தகைய இலக்கியங்கள் அந்த மாயையை அறைந்து உடைக்க முயல்கின்றன.அந்த இலக்கியங்கள் ஒருவேளை உங்களுக்குத் தேவையாக இல்லாமலிருக்கலாம். இன்னொருவருக்குத் தேவையில்ருக்கலாம்.



தொடர்ந்து வாசியுங்கள். இலக்கியம் துணைவருக



ஜெ
ஜூலை 15, 2016

எழுதியவர் : (7-Feb-19, 8:41 pm)
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே