ஜெயமோகனின் உலோகம் ஒரு பார்வை

கோவை மருத்துவ மனையில் ஹார்ட் அட்டேக் வந்து ஐ.சி.யூவில் சேர்க்கப்பட்ட தந்தை, செய்வதறியாது திகைத்து நிற்கும் உறவுகள் என்ற இறுக்கமான சூழ்நிலையில் உலோகம் நாவலை படிக்கத் தொடங்கினேன். க்ளைமேக்சினை முதலில் காண்பித்துவிட்டு நடைபோடும் நவீன திரைப்பட பாணியில் எழுதப்பட்டது. பல்வேறான கொலைகள் நிகழ்ந்தாலும் ரெஜினா சார்லசை அடைவது வெகுவாக ஈர்த்தது. பெண்களுக்கு ஆண்களை அண்ணன் என்று அழைப்பது ஒரு தற்காப்பு தந்திரம். அவர்களுக்கு பாதுகாப்புணர்வு கொடுக்கும் உதட்டளவு வார்த்தை. எந்தவொரு பெண்ணும் உடன்பிறவாதவர்களை அண்ணன் என மனதளவில் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வார்த்தை தேவைப்படாத சமயத்தில் அதனை புறக்கணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. என்னுடைய அனுபவத்தினை ரெஜினா கதாப்பாத்திரம் பிரதிபளித்ததால், அவள் எனக்கு மிகவும் நெருக்கமாக தோன்றினாள்.( உங்களை சில தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்கு அங்கிள் என்றே அறிமுகம் செய்துவைத்திருப்பதை கவனித்திருக்கின்றார்களா?. இல்லையென்றால் இனி கவனிப்பீர்கள்.)



கரிக்கட்டை எடுத்து கோட்டோவியம் வரைந்தவனை, கவிதை சிறுகதையென காவியங்களை படைத்தவனை காலம் கொலையாயுதமாக மாற்றுவதை படம்பிடித்து காட்டும் நாவல் உலோகம். எண்ணிக்கையில் அடங்குகின்ற கதைமாந்தர்களும், ஏமாற்றம் தராத அவர்களின் இயல்புகளும் நாவலின் பலம். இதனை ஒரு த்ரில்லர் நாவலென்று கூறுகிறார்கள். கிரைம் மன்னன் ராஜேஷ்குமாரின் நாவல் வாசித்தவர்களுக்கு இதிலுள்ள த்ரில்லர் போதாது. ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் நாவலை திருப்பங்கள் நிறைந்ததாக எதிர்ப்பார்த்து படிப்பது ஏமாற்றம் தரக்கூடியதாகவே அமையும். மற்றபடி கதாப்பாத்தரம் கோபம் கொண்டால் நாம் கோபம் கொள்கிறோம், காமம் கொண்டால் நாம் காமம் கொள்கிறோம் என்பது ஜெயமோகனின் எழுத்தாற்றல்.

புதினத்தின் பெயர் காரணம் –
புதினத்தின் கதாநாயகனான சார்லஸ் பலாலி போரில் ஈடுபட்டிருந்த போது சுடப்படுகிறான். அவனுடைய தொடையில் அகற்றப்படாத தோட்டா இருக்கிறது. விரலசைவின் முடிவில் எந்த கேள்வியும் கேட்காமல் உலோக தோட்டாவினை துப்புகின்ற துப்பாக்கியைப் போன்றது அவன் கதாப்பாத்திரம். உலோகத்தினை சுமந்து நடமாடி திரியும் கொலையாயுதமாக சார்லஸ் இருப்பதை உலோகம் என்ற புதினத்தின் பெயர் விளக்கி கொண்டுள்ளது.

உலோகத்தின் கதை –

பொன்னம்பலத்தாரின் கொலையுடன் நாவல் துவங்குகிறது. அவரை கொன்றது யார் என்று துப்பரியும் வேலை நமக்கில்லை. கொலைகாரனான சார்லஸ் தன்னை முதல் அத்தியாத்திலேயே அறிமுகம் செய்துகொள்கிறான். சுஜாதா, ஜெயகாந்தன் என எழுத்தாளர்களையும், குமுதம், ஆனந்தவிகடன், வீரகேசரி என ஜனரஞ்சக பத்திரிக்கைகளையும் அறிந்தவன். பள்ளிபருவத்தில் பெண்ணொருத்தியை மானசீகமாக காதல் செய்தவன். ஈழத்தின் ஏதோ ஒரு இயக்கத்தில் இருந்து பின் அகதியாக தமிழகம் வருகிறான். அகதிகள் முகாமில் ஜோர்ஜ் என்பவனை சந்திக்கிறான். அவன் மூலம் இங்கிருக்கும் இயக்கமொன்றில் இணைகிறான்.

இந்திய உளவு அமைப்பு நடத்துகின்ற ஒரு இயக்கத்தின் சிறு தலைவன் ஆகிறான். உளவு அமைப்பின் தலைவரான வீரராகவன் என்பவர் சிறீ மாஸ்டரை கொல்ல உத்தரவிடுகிறார். அவரை சந்திக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த சார்லஸ் இயக்த்திற்கும், சிறீ மாஸ்டர் இயக்கத்திற்கும் தற்செயலாக மோதல் நாகடமொன்றை உருவாக்க திட்டமிடுகிறார்கள். ஜோர்ஜை சிறீ மாஸ்டர் இயக்கத்தினர் கொன்றுவிட வைக்கின்றார்கள், பதிலுக்கு விக்கி என்பவனை கொல்கிறார்கள். அவர்கள் நினைத்து போலவே சார்லஸை சந்திக்க சிறீ மாஸ்டர் விரும்புகிறார். அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி சிறீமாஸ்டரை கொன்று தப்புகிறான் சார்லஸ்.

ஜோர்ஜ் மனைவியான ரெஜினா சார்லஸையும், வீரராகவனையும் காமுரவைக்கிறாள். இருவரிடமிருந்தும் பணத்தினை பெற்றுக் கொள்கிறாள். இவ்வாறு இருக்கவேண்டாம், வேறு ஆணை திருமணம் செய்து கொள் என்று அறிவுரை கூறி டெல்லிக்கு செல்கிறான் சார்லஸ். அங்கே பொன்னம்பலத்தாரிடம் பாதுகாவலனாக சேர்கிறான். அவரை ஈழத்தில் உள்ள இயக்கம் துரோகி என்று நினைத்து கொல்ல திட்டமிடுவதை அறிந்து உயிர் பயம் கொண்டிருக்கிறார். அதனால் அவளுடய குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை அவரின் மகள் உணர்கிறாள்.

சார்லஸை நெருங்கி உறவு கொண்டு அவனிடம் தன்னுடைய தந்தை கொன்றுவிடும்படி கோரிக்கை வைக்கிறாள். காமத்தில் சார்லஸூம் கொல்வதற்கு சம்மதிக்கிறான். ரா அமைப்பினர் இதனை அறிந்து சார்லஸை வதைத்து உண்மையை அறிகிறார்கள். அதற்குள் தகவலறிந்த பொன்னம்பலத்தார் அவனை விடுவித்துவிடுகிறார். அவரை கொன்றுவிடும்படி இயக்கத்திலிருந்து கட்டளை வருகிறது. இருவரும் தனிமையில் இருக்கும் போது சார்லஸ் அவரை கொன்றுவிடுகிறான். தப்ப முயலும்போது காவலாளிகளால் பிடிக்கப்படுகிறான் என்பதோடு நாவல் முடிகிறது.

நாவலின் தன்மை –

இரு இடங்களில் எம்.ஜி.ஆரை நினைவு படுத்தியது இந்த நாவல். கதைநாயகன் சார்லஸ் போல உடலுக்குள் உலோகம் சுமந்து வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் என்பது ஒன்று. இரண்டாவது இந்திய அரசு விடுதலைபுலிகளை தவிற மற்ற இயக்கங்களை வெகுவாக ஆதரித்தது. ஈழத்தின் போராட்ட அமைப்புகளுக்கு தொடக்க காலத்திலிருந்து இந்தியா உதவுவதை அறிந்தபின் தான் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளை அழைத்து பேசினார் என்கிற செய்தியை வாத்தியார் புத்தகத்தில் வாசித்ததாக நினைவு.

ஈழத்திலிருந்து வருகின்றவர்களுக்கு விமான சத்தம் உண்டாக்குகின்ற பயம். அவர்கள் தங்கவைக்கப்படும் முகாம்களின் அவலம். துணையிழந்த பெண் அகதியின் நிலை. இந்திய உளவு அமைப்புகளின் சதுரங்காட்டம். இயக்கங்களின் போலி சண்டைகள். வயதொத்த வாலிபர்களின் இச்சைகள். உயிர் பயம் கொண்டவரிகளின் மனநிலை. இவ்வாறு நாவலில் எண்ணற்ற நுட்பமான விசயங்கள் இருக்கின்றன. வாசிப்பனுபவம் வேண்டுபவர்கள் தவறவிடக்கூடாத நாவல்களில் இதுவும் ஒன்று.

------------
ஜெகதீஸ்வரன்

எழுதியவர் : (8-Feb-19, 4:35 am)
பார்வை : 53

மேலே