எமதூதனின் அறிக்கை 2019

" இன்று சரியாக ஒரு மணியளவில் நீ இறக்கப் போகிறாய். அதற்குள் நீ ஆற்ற வேண்டிய கடமைகளையெல்லாம் முடித்துவிடு. ", என்ற குறுஞ்செய்தி பிரபல அரசியல் தலைவரின் கைபேசிக்கு வந்திருந்தது.

செய்தியை படித்தவர் அதிர்ச்சி அடைந்தார்.
செய்தி எந்த எண்ணில் இருந்து வந்ததோ அந்த எண்ணை Truecallar-ல் தேடிப்பார்க்க எமதூதன் என்று வந்தது.
அதனால் மேலும் அதிர்ச்சி அடைந்தவர் அந்த நம்பரின் பேரில் காவல் துறையில் புகார் கொடுத்தார்.
காவல்துறையினரும் விரைவாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்கள்.

அரசியல்வாதிக்கு மிரட்டில் வந்திருப்பது அவருடைய விசுவாசிகளுக்கு தெரியவர, " எங்களை மீறி உங்களை கொல்ல எவனால் முடியும்? நாங்கள் உங்களைச் சுற்றி இருக்கிறோம். தைரியமாக இருங்கள். ",என்று காவல் காக்கத் தொடங்கினார்கள்.

நேரம் ஆக ஆக அரசியல்வாதியின் பயம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
எல்லாரையும் பயத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கத் தொடங்கினார்.
கண்களை மூடி தூங்க முடியவில்லை.
படுத்தால் இளமையில் செய்த அத்தனை தப்பு தண்டாக்களும் நினைவில் அசைபோடுகின்றன.

நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமானது.
சரியாக ஒரு மணிக்கு கடிகாரம் ஒலி எழுப்ப அந்த அரசியல்வாதி பிணமாக கிடந்தார் படுக்கையில்.

எமனின் வருகை கண்களுக்குத் தெரியாது.
சுற்றி எத்தனை விசுவாசிகள் இருந்தாலும் மரணம் நெருங்க வேண்டிய நேரத்தில் நெருங்கியே தீரும்.
அதற்குள் எத்தனை ஆயுதங்களால் எத்தனைபேர் சாகிறீர்கள்?!
விரோதம், குரோதம் என்பவை எல்லாம் மிக ஆபத்தானவை.

மரணத்தைக் கண்டு பயப்படாதவன் ஆயுதம் ஏந்துவது இல்லை. ஏனெனில் அவனுக்கு ஆயுதம் தேவைப்படுவதில்லை.
எந்நேரமும் அவன் சாகத் தயாராக இருக்கிறான்.
அவன் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறான், ஆயுதங்களால் நிரந்தர தீர்வுகள் எட்டப்பட மாட்டாது என்பதை.

இதைப் பற்றி நான் பேசிய போது நடைமுறையை சிந்தித்து பேசு என்கிறீர்கள்.
சரி, நடைமுறைக்கே வருவோம்.

குடும்பம் என்றால் அதில் அப்பா, அம்மா, தங்கை, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி, என்று நிறைய பேர் இருக்க வேண்டும்.

ஆனால், இன்று பெற்றோர் தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைத்ததுமே தன் கணவனை அவனுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரிக்க எண்ணுகிறாள் மனைவி.

மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை,
பெண் கொடுமை, வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை என்று எல்லா விதத்தில் பார்த்தாலுமே அங்கு அன்பும், கருணையும் அறவே இல்லாமை தான் காரணமாக விளங்குகிறது.

தன் மனைவி இருக்கையிலேயே பிறன் மனைவியின் மீது ஆசைப்படுவது, கள்ளக் காதல் தவறில்லை என்பது,
இந்த உடல் ஆசைக்கு அடிமையாக வாழ்வது, இலவசத்திற்கு தன் விசுவாசத்தை விற்பது போன்ற எல்லாவிதமான செயல்களிலுமே சுய கட்டுப்பாடின்மை தெளிவாகத் தெரிகிறது.

தீவிரவாதம், நக்சலிசம், பயங்கரவாதம் போன்ற செயல்களைச் செய்பவர்களுக்கும் மேலே குறிப்பிட்ட செயல்களைச் செய்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.

அறிவுரை கூறுபவர்களை நோக்கி உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றும்,
உண்மையைப் பேசினால் அடங்காமை, எகத்தாளம் என்று கூறுகின்ற காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

துப்பாக்கிகள் பேசும் அளவிற்குக் கூட இதயங்கள் பேசுவதில்லை.
வெடிகுண்டுகள் வெடிக்கும் அளவிற்குக் கூட மக்கள் மனதில் சகோதரத்துவ பாசம் இல்லை.

கோபத்தில் கொந்தளிக்கும் போது நான் பிறரை மட்டும் அழிப்பதில்லை,
நம்முடைய குணத்தை அழிக்கிறோம்.
நம்முடைய குணமே அழிந்துவிட்டால் நாம் வெற்று பிணம் தான்.

இந்த வகையில் நாம் ஏகப்பட்ட பிணங்களைக் காணலாம்.

மனிதன் தன் நற்குணங்களை எவ்விடத்தில் தியாகம் செய்கிறானோ அவ்விடத்திலேயே இறந்தவனாகி விடுகிறான்.

நம் உடலை கூட உரிமை கோர முடியாத நமக்கு இந்த நிலம், நீர், ஆகாயத்தில் உரிமை கோர தகுதியில்லை.

எங்களுக்கே காற்றின் மீது முழு அதிகாரம் உள்ளதென காற்றைச் சிறைப் பிடித்துப் பாருங்கள்.
அவ்வளவு ஏன் சிறிது காற்றை உங்கள் உடலிற்குள் அடக்கிப் பாருங்களேன்.

அது கூட நிரந்தரமாக முடியாது.

மனித இனம் சிறந்தது என வாதாடுகிறார்கள்.
அந்த விடயத்தில் மனித இனம் சிறந்ததாகவே விளங்குகிறது.

விலங்குகளைவிட கீழ்த்தரமான செயல்களை செய்வதில் மனிதர்கள் சிறந்து விளங்கிறார்கள்.
பதவிகளுக்காக அடித்துக் கொள்வதில் மனிதர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
ஒருவரை ஒருவர் கெடுத்து முன்னேறுவதில் மனிதர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
நாகரீக சிரழிவின் உச்சகட்டத்தில் மனிதர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
அகம்பாவத்தின் உச்சத்தில் மனித இனம் சிறந்து விளங்குகிறார்கள்.
நாடு, இனம், மொழி, மதம், சாதி, நிறம் என்று பிரிவாதத்தினால் பிரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதில் மனித இனம் மிகச் சிறந்த விளங்குகிறது.

மனிதனின் சுயநலம் உண்மைக்கு எதிரானது.
அதனாலேயே மனிதர்களால் உண்மையை மட்டுமே பேசவே முடியவில்லை.
உண்மை பேசுபவர்களை எதிர்களாகப் பார்க்கிறார்கள்.

எனக்கு தலைவனென்று சொல்ல உன் தலைக்கு அருகதை இல்லை.
சுய மரியாதைக்காரனாக இருப்பவர்களுக்கு எந்த தலைவனும் அவசியம் இல்லை.
ஆனால், இங்கே பலருக்கு சுய மரியாதையே இல்லை.
சுய மரியாதை இல்லாமல் போக காரணம் அவர்களுடைய சிந்தனையில் ஏற்பட்ட குறைபாடுகள் தான்.
இதை மனதின் ஊனம் என்றும் சொல்லலாம்.

உலகை உற்றுப் பார்த்தால் ஒன்று புலப்படும்.
பதவியால் கிடைக்கும் மரியாதை,
பணத்தால் கிடைக்கும் மரியாதை,
பயத்தால் கிடைக்கும் மரியாதை போன்றவை எல்லாம் சுயநலத்தால் கிடைக்கும், கொடுக்கப்படும் மரியாதை.
ஆதலால் சுயமரியாதையின் உன்னதம் உணர்வது சற்றுக் கடினம்.
ஆனால் நல்ல குணங்களோடு வாழும் மனிதன் சுய மரியாதைக்காரனாகத் திகழ்வான் என்பது உறுதி.

நாம் என்னதான் பிறருக்கு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் கேட்கப் போவதில்லை.
சகதியில் சுகம் காணும் பன்றிகளாய் அடிமைகளாகவே வாழ்ந்து மறைந்து போகவே விரும்புகிறார்களே தவிர சிந்தனைச் சிறகை விரிப்பதில்லை.
உண்மையின் சக்தியை காணப்போவதும் இல்லை.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Feb-19, 6:05 pm)
பார்வை : 393

மேலே