தமிழும் தமிழரும் ஆஸ்திரேலியா

தமிழன் இல்லாத நாடில்லை
தமிழர்க்கென்று ஒரு நாடில்லை

என்பது அடிக்கடி ஊடகங்களில் கதைக்கப்படும் செய்தியாக இருந்தாலும்

தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவற்கும் இறைவா போற்றி

என்றே இறைவனை வாழ்த்தி வரவேற்றது சிட்னி முருகன் கோவில். என்னுடைய ஆஸ்திரேலிய வாசம் சிறிது காலமே என்பதால் என்னுடைய தமிழ், தமிழர் சார்ந்த அனுபவங்களையே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பல கலாச்சாரங்களையும் பல்வேறு மொழிகளையும் பயனுறு மொழியாகக் கொண்ட ஆஸ்திரேலியாவில் ஏறத்தாழ நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். நான்கு தலைமுறைகளுக்கு முன்னரே இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் விவசாயம் மற்றும் சுரங்கங்களில் பணியாற்றுவதற்குத் தமிழர்கள் அடிமைகளாகக் கொண்டு வரப்பெற்றிருந்தனர். இது மிகவும் சொற்ப எண்ணிக்கையே. இன்றளவில் இவர்களுக்கு தமிழ், தமிழர் என்ற அடையாளமே மறைந்து ஆஸ்திரேலியக் குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் 80களுக்குப் பின் புலம் பெயர்ந்தவர்களே இன்றைய தமிழ் சமுதாயத்தின் அங்கமாக இருக்கின்றனர். இவர்களில் எழுபது சதவிகிததினர் ஈழத்துப் போரினாலும், எஞ்சிய முப்பது சதவிகிதத்தினர் படிப்பிற்காகவும், தொழில் நிமித்தமாகவும் புலம் பெயர்ந்தவர்களாய் இருக்கின்றனர்.

1980களுக்கு முன்னர் வெறும் 1000 எண்ணிக்கையிலே இருந்த தமிழர்கள், 1996இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி ஏறத்தாழ 19,000 எண்ணளவிற்கு உயர்ந்திருந்தனர். இது ஆஸ்திரேலியாவின் ஆறு மாகாணங்களையும் உள்ளடக்கியது. அதில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் வசித்து வந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பெற்ற கணக்கெடுப்பின்படி தமிழர்களின் எண்ணிக்கையில் 50% வளர்ச்சி இருந்தது. அதாவது 30,000 தமிழர்களாக உயர்ந்தது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் ஏறத்தாழ 12,000 தமிழர்களும், விக்டோரியா மாகாணத்தில் 8,000 தமிழர்களும் எஞ்சிய 10,000 தமிழர்கள் இன்ன பிற மாகாணங்களான மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலிய தலைநகர மாகாணம், தெற்கு ஆஸ்திரேலியா, வடக்கு மாகாணம் மற்றும் டாஸ்மேனியா ஆகிய பகுதிகளில் பரவலாக வசித்து வருகின்றனர்.

அனைத்து மாகாணங்களிலும் தமிழ்ச் சங்கமும், தமிழ்க் கலாச்சார மையங்களும் இருந்தாலும் தமிழ் மற்றும் தமிழர் வளர்ச்சி என்பது விக்டோரிய மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களை மட்டுமே மையமாகக் கொண்டு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்ச்சி என்பது, அறிந்தோ அறியாமலோ ஆன்மீகம் சார்ந்தே வளர்ந்திருந்தது என்பது மறுக்க இயலாத உண்மையாகும். ஆஸ்திரேலியாவில் முதன் முதலில் இந்து சமய வழிபட்டிற்காகத் திருப்பதி வெங்கடேஸ்வரன் ஆலயத்தை எழுப்பியது தமிழர்களேயாவர். இது 1985ஆம் ஆண்டு சில ஆன்மீகவாதிகளால் ஹெலென்ஸ்பர்க் என்ற குன்றின் மீது வடிவமைக்கப்பட்டது.

சிட்னி முருகன் என அழைக்கப்படும் தமிழ்க் கடவுளாகிய முருகனுக்கு 1983லேயே ஆலயம் ஒன்றை நிர்மாணிப்பது என்பது தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், முருகனுக்கென்று வீடு(ஆலயம்) என்று ஒன்றை நிர்மாணிக்க 15 ஆண்டுகள் பிடித்தது. முருகன் வழிபாடு 1983ஆம் ஆண்டு சிவசோதி தணிகை கந்தகுமார் என்பவரின் ஆர்வத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு முருகனுக்கு ஆலயம் எழுப்பும் பொருட்டு சைவ மன்றம் ஒன்றும் தொடங்கப்பட்டு தமிழ் வழிபாடுகளும் நடைபெற்று வந்தது.

இன்று வைகாசிக் குன்றில் (ம்ஹஹ்ள் ட்ண்ப்ப்) குடியிருக்கும் முருகனது ஆலயத்தில் தமிழ் மொழியிலேயே வழிபாடு நடைபெறுகின்றது. இங்கு இருக்கும் தமிழ்க் கல்வி மற்றும் கலாச்சார மன்றத்தின் மூலம் இங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்காகவும், புலம் பெயர்ந்தவர்களுக்காகவும் தமிழ்க் கல்வி மற்றும் சமயப் பாடல்கள் வாரந்தோரும் பயிற்றுவிக்கப்படுகின்றது. இவ்வருடம் சிட்னி முருகன் ஆலயத்தில் நடந்த உலகளாவிய சைவ சமய மாநாடு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழர்களை இணைப்பதற்கு ஒரு பாலமாக இருந்தது.

சங்கம் வைத்து வளர்ந்த மொழி தமிழ் மொழி என்பதனால் இங்கு அனைத்து மாகாணங்களிலும் ஒவ்வொரு தமிழ்ச் சங்கம் உண்டு. அவர்களும் பல குழுக்களாக பிரிந்து கிடப்பதனால் தமிழுக்கென்று பெரிதான வளர்ச்சி அவர்களால் கிடையாது என்பதே உண்மை. ஆனால் சில சமயங்களில் பரத நாட்டியம், கர்னாடக சங்கீதம் போன்றவையும் தமிழ்ச்சங்கத்தின் பெயரால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன .

ஆஸ்திரேலிய மாகாணங்களில் எங்கெங்கு தமிழ் மொழி, பள்ளிகளில் பாடமாக இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. ஆயினும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணாத்தில் தமிழைப் பாடமொழியாக அங்கீகரித்து உள்ளது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இதன் மூலம் புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழை உச்சரிக்கவும், எழுதவும் பழகிக்கொள்ள கிடைத்தற்கரிய வாய்ப்பாகும். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள "கனடா பே" (ஸ்ரீஹய்ஹக்ஹ க்ஷஹஹ் ஸ்ரீண்ற்ஹ் ஸ்ரீர்ன்ய்ஸ்ரீண்ப்) மாமன்ற எல்லைக்கு உட்பட்ட "ஹோம் புஷ்" நகரத்தில் உள்ள அரசாங்கப் பள்ளியில் தமிழ் மொழி பாடமொழியாக உள்ளது. இங்கு குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்பதும், தமிழில் கதைப்பதும் இனிய நிகழ்வுகளாகும். இந்தப் பள்ளியில் வாரந்தோறும் தமிழ்க் காப்பியங்களும், தமிழ்க் கலாச்சாரம் பற்றிய பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் ஆர்வமுள்ளவர்கள் எவரும் கலந்துகொள்ளலாம்.

மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மாணவர் சங்கமும் இருப்பது இனிய செய்தியாகும். இதனால் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றிற்காக இங்கே வரும் தமிழ் மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கின்றனர். இம்மதிரியான சங்கங்கள், ஈழத்தமிழ் மாணாக்கர்களைக் கொண்டே இயங்கி வருகின்றன. இவர்களது பணிகள் பெரும்பாலும் கலாசாரம் பற்றிய கலந்துரையாடல்கள், தமிழர் உடை பற்றிய கண்காட்சிகள், அவ்வப்பொழுது தமிழில் கண்ணியமாக எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்களைத் திரையிடுதல் ஆகியவற்றோடு முடிந்து விடுகிறது. ஆனாலும் இந்தியாவிலிருந்து செல்லும் தமிழக மாணாக்கர்கள் இம்மாதிரியான மாணவர் சங்கங்களில் கலந்துகொண்டு செயலாற்றுவது இல்லை என்பது ஒரு பெரிய குறை தான். இங்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் தான் ஆஸ்திரேலியாவிலேயே முதன் முதலில் தமிழ் மாணவர் பேரவை என்னும் பெயரில் தமிழ் மாணவர்களை ஒன்றுபடுத்த முயன்றனர். இப்பேரவையைத் தோற்றுவித்த அப்போதைய மாணவர் கண்ணன், பல்கலைக்கழகத் தேர்வில் முதலாமவராக தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தை வென்றவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியே.

ஆஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியமும் தமிழர்களோடே வளர்ந்து வந்தது என்பதை அறிந்த போது எனக்குச் சற்று ஆச்சர்யமே. அதிலும் கையெழுத்துப் பிரதிகள் கூட ஒரு காலத்தில் வெளிவந்தன என்பதை அறிந்தபொழுது இந்நூற்றாண்டில் தமிழ் அழிந்து போகும் என்பது பொய்யான கூற்றே என எனக்குப் புலப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்ச்சியும், தமிழ் இலக்கியமும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களையே சார்ந்து வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பல தமிழிதழ்கள் வெளிவந்து நின்று போயுள்ளன. அதற்குப் பெரும்பான்மையான காரணங்களாக எதிர்பார்த்த வரவேற்பும், பொருளாதாரச் சிக்கலும் இருந்திருக்கலாம். மாத்தளை சோமுவின் தமிழ்க்குரல் சிட்னியிலிருந்தும், மக்கள் குரல் மெல்பர்ணிலிருந்தும் வெளிவந்து நின்று போன கையெழுத்து இதழ்களாகும். அது மட்டுமல்லாமல் "தமிழ் உலகம்" என்ற மாத இதழும், விக்டோரிய மாகாணத்தில் இருந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாணவர்களின் 'பிரவாகம்' என்ற இதழும் வெளிவந்து பின்னர் நின்று விட்டன. தற்பொது "உதயம்", "ஈழமுரசு" என்ற இரு வாரப் பத்திரிகையும் "கலப்பை" என்ற மாத இதழும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

பொதுவாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்து இலக்கியவாதிகள் அனைவரும் ஒரேயமைப்பாக ஒன்றுகூடுவதில்லை. முக்கிய பிரச்சினை, ஈழப் போராட்டம் சார்ந்ததுதான். புலியெதிர்ப்பு þ புலியாதரவு என்ற நிலைப்பாடுகளால் இது சாத்தியமாவதில்லை. ஆனால் மெல்பர்ணில் 2001 இல் தொடங்கி எழுத்தாளர் விழா என்பது ஓரளவுக்கு இருதரப்பு, நடுத்தரப்பு எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்துள்ளது. வருடா வருடம் இவ்விழா ஒவ்வொரு மாகாணத்திலும் நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்கள் எஸ்.பொ, மாத்தளை சோமு, லெ. முருகபூபதி, அருண் விஜயராணி, கவிஞர் நட்சத்திரன் செவ்விந்தியன், நடேசன் போன்றோர் ஆவர்.

தமிழ் ஊடஙங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது இங்கு இயங்கி வரும் தமிழ் வானொலிகள். பெரும்பாலும் தமிழ்த் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளே இருந்தாலும் பல இலக்கியக் கருத்துரையாடல், தமிழ்க் காப்பியங்கள், எழுத்தாளர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளும் இடம்பெறுவது பயனுள்ள விடயமாகும். அனைத்து மாகணங்களில் இருந்தும் குறைந்தது ஒரு தமிழ் வானொலியாவது இயங்கி வருகிறது.

ஆஸ்திரேலிய பல்வேறு கலாச்சாரங்களையும் உள்வாங்கி வளர்ந்த ஒரு மேற்கத்திய நாடு என்பதனால் இங்கு இனவெறி, நிறவெறி தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் வந்ததில்லை. மேலும் இங்கு தமிழர்கள் அனைவரும் செüகரியமான வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற "காமன்வெல்த்" போட்டியில் ஆஸ்திரேலியா சார்பாக "பிரசாந்த் செல்லத்துரை" என்ற தமிழர் வெள்ளிப் பதக்கம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. "மாமனிதர் எலியேசர்" என்ற கணித மேதை, தமிழர்களில் முக்கியமானவர். அவரது பெயரில் கணதவியலில் ஒரு தேற்றம்கூட உண்டென்று கேள்விப்பட்டுள்ளேன். அவரது பெயரில் பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசிலும் உண்டு. மாமனிதர் பட்டம் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனால் வழங்கப்பட்டது. இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பலர் தனிப்பட்ட முறையிலும் தமிழ் வளர்ச்சிக்காகவும் சாதித்து உள்ளனர். ஆக தமிழும் தமிழரும் இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் செழுமையாக இருப்பார்கள் என்பதே என் நம்பிக்கை.


Sify
கட்டுரைக்கு உதவியவர்கள்

நன்றி:

வசந்தன் þ மெல்பர்ண், ட்ற்ற்ல்://ஸ்ஹள்ஹய்ற்ட்ஹய்ண்ய்.க்ஷப்ர்ஞ்ள்ல்ர்ற்.ஸ்ரீர்ம்/
குமரன் þ தலைவர், சிட்னி பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் பேரவை, ஜ்ஜ்ஜ்.ம்ன்ழ்ன்ஞ்ஹய்.ர்ழ்ஞ்

எழுதியவர் : (21-Feb-19, 8:52 pm)
பார்வை : 28

மேலே