மழை நீர் உயிர் நீர்

மழை நீர் உயிர் நீர்

மனிதா ! மழை நீர் உயிர் நீர் என்று

மாதவர் சொன்னதை மறந்தாயோ !

கார்மேகம் தந்த அமிழ்தமாம் மழை நீர்

பார் முழுவதும் பாட்டில் பத்துரூபாய் !

மாக்களைப் போல் மழைநீரை மாசுபடுத்தினாய் !

இனியும் என்ன இருக்கிறது மாசுபடுத்த ?

தாய்ப்பாலைத் தவிர ! அந்தத்

தாய்ப்பாலும் நஞ்சாகிவிட்டது தரணியில் !

அசோகர் மரம் நட்டார் என

வரலாற்றில் மட்டுமே

வரலாறு படைத்துக்கொண்டிருந்தால் நம்

வாழ்வின் பயன் தான் என்ன?

ஒரு மரம் நடக்கூட யோசிக்க நேரமின்றி

ஓராயிரம் மரங்களை அழிப்பதேன் ?

ஆடம்பர வாழ்க்கைக்காக உயிர்வளியாம்

ஆக்சிஜனின் தாயான கவின்மிகு

அமேசான் அடவியையே அழிக்கத் துணிந்தாயே ?

உயிர்வளி உயிர் நீர் விளைக்களம்

அனைத்தையும் அடியோடு அழித்துவிட்டு

நாளை உன் சந்ததியருக்கு

எதை விட்டுச் செல்லப்போகிறாய் ?

வெறும் காகிதங்களாம் ரூபாய் நோட்டுக்களையா ?

வெற்றுப்பேச்சு வேண்டாம்

வீறு கொண்டு விரைந்து வா !

மாற்று உலகம் படைப்போம் !

மரம் நடுவோம் !

மும்மாரிக்கனவை உறுதியாக்குவோம் !

பெற்ற மாரியைப் பேணிக்காப்போம் !


பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : பாரியூர் தமிழ்க்கிளவி (24-Feb-19, 2:44 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
பார்வை : 94

மேலே