எடுத்த பிறவிக்கு உயிர்பரமாய் இன்பக் கடல்படிந்து நிற்றலே காண் – அணியறுபது 60

நேரிசை வெண்பா

எடுத்த பிறவிக்(கு) இனியவணி என்றும்
அடுத்த பிறவி யடையா(து) – உடுத்த
உடல்கழிய நின்ற உயிர்பரமாய் இன்பக்
கடல்படிந்து நிற்றலே காண். 60

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

அடுத்த பிறவி அடையாமல் ஆக்கிக் கொள்வதே எடுத்த பிறவிக்கு உரிய பெரிய அழகு, உற்ற உடல் ஒழிய உயிர் பரமாகிப் பேரின்பப் பெருக்கில் திளைப்பதே ஆன்மாவுக்குப் பேரழகு ஆகும். இப்பாடலில் ஆன்ம அழகு மேன்மையாய் அறிய வந்தது.

பிறவியில் துன்பங்கள் பெருகி வருகின்றன: பிறவாமையுள் இன்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே தன் உயிர் துயருறாமல் என்றும் உயர்வாயிருக்க வேண்டின், யாண்டும் பிறவாமையை அவன் அடைந்து கொள்ள வேண்டும். முடிவாக மனிதன் வேண்டி அடையவுரியது ஈண்டு விளங்கி நின்றது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 362 அவா அறுத்தல்

தனக்கு உரிமையாக ஒருவன் விரும்பத் தக்க பெருமையுடையது பிறவாமையே; உலக ஆசைகளை அறவே துறந்து எதையும் விரும்பாத போதுதான் அந்தப் பெரும்பேறு அவனை விரும்பி வந்து அடைகிறது என வள்ளுவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதில் குறித்துள்ள உண்மையை நுண்மையாய்க் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும்.

ஈண்டு எதை வேண்டினும் அது நீண்ட துயரமேயாம். துன்பத்தை எவரும் விரும்பார்; இன்பத்தையே யாவரும் யாண்டும் ஆவலோடு விரும்பி வருகின்றனர், இத்தகைய இயல்பினையுடைய மக்கள் எல்லாத் துன்பங்களுக்கும் எவ்வழியும் நிலையமாயுள்ள பிறப்பினை அடையலாமா? பேரின்ப நிலையமான பிறவாமையையே யாண்டும் உறவாய் அடைந்து கொள்ள வேண்டும்.

கலி விருத்தம்

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்;
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்ன(து)
அற்றோர் உறுவது அறிகென்(று) அருளி. - மணிமேகலை 2

பிறந்தவருடைய துன்பப் புலைகளையும், பிறவாதவருடைய பேரின்ப நிலைகளையும் இதில் நேரே தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

கட்டளைக் கலித்துறை

பிறந்துமண் மீதில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்துசிற் றின்பத்தின் மேல்மய லாகிப்புன் மாதருக்குட்
பிறந்துழன் றேதடு மாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்(து)
இறந்திட வோபணித் தாய்இறை வாகச்சி ஏகம்பனே! - பட்டினத்தார்

பிறந்தவர் வெய்ய வேதனைகள் தோய்ந்து மையல் மயக்கங்களில் அழுந்தி இழிந்து உழலுகின்ற நிலைகளைப் பட்டினத்தார் இவ்வாறு பரிவோடு சுட்டிக் காட்டியிருக்கிறார். பிறவிப் பெருங்கடல் என்றும் பெரிய துன்பக் கடலே.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

ஆய்வுறு பெருங்கடல் அகத்து ளேயவன்
பாய்திரை வருதொறும் பரிதற் பாலனாம்
தீவினைப் பிறவிவெம் சிறையில் பட்டயாம்
நோயுறு துயர்என நுடங்கல் நோன்மையோ? - இராமாயணம் 3-9-87

கடலில் விழுந்தவன் அலைகளால் அலைக்கப் படுதல் போல் பிறவிக் கடலில் விழுங்தவன் துயரப் புலைகளால் துடித்து அயர்கின்றான் என இராமர் இவ்வாறு உள்ளம் உளைந்து உரைத்துள்ளார்.

துன்பம் யாதும் தோயாமல் இன்பம் எய்த வேண்டுமானால் பிறவாமையை யாண்டும் மறவாமல் உரிமையுடன் மருவிக் கொள்ள வேண்டும்.

பிறவித் துயரங்களை உ ணர்ந்து தெளிந்த மகான்கள் பிறவாதிருக்க உரிய வழிகளை விரைந்து அடைந்து கொள்ளுகின்றனர். அந்த உண்மையான தெளிவு எளிதில் அமையாது. உள்ளம் தூய்மையான உத்தமர்க்கே தத்துவ ஞானம் உதயமாகிறது.

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)

இனிப்பிறவா முடிவான பிறப்பிலே மெய்ஞ்ஞானம்
எளிதில் உண்டாம்;
பனிச்சுடர்வெண் நித்திலங்கள் உத்தமமாம் மூங்கிலல்லால்
படுவது உண்டோ?
செனித்தவரின் மேலோராய் நல்லோராய் மித்திரராய்த்
தெளிந்தோர் ஆகி
அனித்தமறும் உத்தமராய் ஞானிகளாம் குணமெல்லாம்
அவரைச் சேரும். - ஞானவாசிட்டம்

மெய்யுணர்வே வெய்ய பிறவியை நீக்க வல்லது. அந்த மெய்ஞ்ஞானம் எப்பொழுது தோன்றும்? இனிமேல் யாதொரு பிறவியும் இல்லை என்னும்படி புனிதராய்ப் படிஏறி வந்துள்ள உத்தம முத்தருக்கே அது உரிமையாய் அமையும்: அவ்வுண்மையை இதில் ஓர்ந்து உணர்ந்து கொள்கிறோம்.

உயிரையும் உயிர்க்கு உயிரான பரமனையும் உண்மையாக உணர்வதே மெய்ஞ்ஞானம். அந்த ஞான ஒளி தோன்றவே ஈன இருள் எல்லாம் அடியோடு இரிந்து ஒழிந்து போம்.

உயிர் பரமாய் நிற்றல். துயர் நீங்கி உயிர் உயர் இன்பம் உறும்நிலையை இது துலக்கியுளது. சீவனைச் சிவம் ஆக்கிக்கொள்வதே தெளிந்த ஞானம். உள்ளம் தெளிந்து தூய்மையான பொழுது பேரின்ப வெள்ளமே அங்கே நேரே பெருகி வருகிறது.

கலிவிருத்தம்
மா கூவிளம் கூவிளம் கூவிளம்

*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

எடுத்த தேகம் இறக்குமு னேஎனைக்
கொடுத்து நின்னையுங் கூடவுங் காண்பனோ
அடுத்த பேரறி வாயறி யாமையைக்
கெடுத்த இன்பக் கிளர்மணிக் குன்றமே. - தாயுமானவர்

என்னை எடுத்துக் கொண்டு உன்னைக் கொடுத்தருள் என்று ஈசனை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு பேசியிருக்கிறார். எவ்வளவு உறவுரிமையிருந்தால் இவ்வளவு உறுதியாய் உரையாட வரும்?

கலி விருத்தம்
(காய் காய் காய் மா)

படமுடியா(து) இனித்துயரம் படமுடியா(து) அரசே!
பட்டதெலாம் போதுமிந்தப் பயம்தீர்த்திப் பொழுதென்
உடலுயிரா கியஎல்லாம் நீஎடுத்துக் கொண்டுன்
உடலுயிரா கியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்! – அருட்பா

ஆண்டவனை நோக்கி இராமலிங்க அடிகள் இப்படி வேண்டியிருக்கிறார். சீவான்மாவும் பரமான்மாவும் ஒரே உருவம்; ஒரே சோதி. இந்த உண்மையை உள்ளம் தெளிந்த ஞானிகள் உணர்ந்து கொண்டு ஏகபோகமாய் இன்பம் எய்துகின்றனர். இயல்பாகவே இன்பமயமான ஆன்மா மயல் ஒழிந்தவுடன் உயர் பரமாய் ஒளி பெற்றுச் சுகவாரிதியாய்த் திகழ்கின்றது.

இருவினையும் மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயும் நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
ஏகநாயகா! லோகநாயகா! இமையவர் பெருமாளே! - திருப்புகழ், 107

அருணகிரிநாதருடைய ஆன்ம அனுபவ நிலையை இங்கே கூர்ந்து ஓர்ந்து உவந்து கொள்கின்றோம்.
வினைத் தொடர்புகள் அற்று உயிர் பரிசுத்த நிலையை அடைந்தபோது பரம பதியோடு தோய்ந்து பேரானந்தங்களை நுகர்ந்து மகிழ்ந்து ஒன்றாய் உறைந்திருக்கும் என்பதை இதனால் உணர்ந்து உண்மை நிலைகளைத் தெளிந்து கொள்கிறோம்.

பாசம் நீங்கிய அளவே பசு பதியுடன் கலந்து களிக்கின்றது. பசுபதி எனப் பரமேசுரன் பேர் பெற்றுள்ள பெற்றியை உற்றுணரின் உயிரின் உயர் பேரின்ப நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். உள்ளம் தூய்மையாய் உணர்வு தெளிந்துவரின் எல்லா இன்பங்களும் எளிதே எய்த வரும்.

சீவனெனச் சிவனென்ன வேறில்லை;
சீவனார் சிவனாரை அறிகிலர்;
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட் டிருப்பரே. - திருமந்திரம் 2017

இந்த மந்திர மொழியைச் சிந்தனை செய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-19, 11:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 115

மேலே