பெண்கள் முன்னேற்றம் கட்டுரை

பெண்கள் முன்னேற்றம்? ? ? (கட்டுரை)
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற காலம் மாறி, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் என்ற பாரதியின் கனவுகள் நனவாகி, இன்று புவியெங்கணும் பூத்துக்குலுங்கும் நறுமண மலர்களாகப் பெண்கள் பட்டொளிவீசிப் பரிமளிக்கத் தொடங்கிவிட்டனர்.
மருத்துவராக, மாவட்ட ஆட்சித் தலைவராக, ஆசிரியராக, முதல்வராக, பிரதமராக, விமானியாக, வீராங்கனையாக எனப் பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வியத்தகு சாதனை புரிந்தவண்ணம் உள்ளனர் என்பதில் ஐயமில்லை.
தாயாய்த், தாரமாய், தனையையாய், சகோதரியாய் தனிப்பெரும் தெய்வமாயும் பல்வடிவம் புனைந்து அவள் பற்பல நலன்கள் புரிந்துவருகிறாள். வீட்டிலும், வெளியிலும் வியத்தகு சாதனை புரிந்துவருகிறாள்.
உலகில் பூமித்தாய், தமிழ்த்தாய், எனத்தொடங்கி, காவேரி, கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா, எனப் பல வடிவங்களில் அருளாட்சி புரியத்தான் செய்கின்றாள். உண்மை. மறுக்க இயலாததுதான்.
‘படிதாண்டா பத்தினியாக’ விளங்கிய அவள், ‘அடுப்பே திருப்பதி ஆமண்டையானே குலதெய்வம்’ என்றும் திகழ்ந்த அவள் காலத்தின் கோலத்தினால், பல பொருளாதரப் பிரச்சனைகளை எதிர்கொள்ள, பணிக்குச் செல்லவேண்டிய கட்டாயக் காலக்கட்டம் இது.
பெண்களை மதிப்போம்! பெண்ணிற்குச் சம உரிமை தருவோம் ! என்பதெல்லாம் ஏட்டளவிலா? அன்றி நடைமுறையிலா என்ற ஐயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
ஒருபுறம் செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியாய் சேலை உடுத்தித் திகழ்ந்த பெண்களுள் சிலர் இன்று அரைகுறை ஆடைகளை அணிந்து அவலட்சணங்களாகித் திகழ்வதும் கொடுமையானதே. அந்நிய நாட்டவர் தமிழ்க் கலாச்சாரங்களைத் திறம்பட போற்றி முனையும் இக்காலக்கட்டத்திலே தமிழரில் சிலர் தமது பாரம்பரிய பண்பாடுகளை விடுத்து காலத்திற்கேற்ற கோலம் புனைவதோடன்று, தம் சந்ததியினரையும், அவ்வாறே இருக்க வைப்பது வேதனைக்குரியது என்றும் சிலர் மனம் குமுறத்தான் செய்கின்றனர். இதை விடக் கொடுமை பள்ளிச் சீருடையிலும் பரிணமிக்கின்றது. பத்தாம் வகுப்பு. மற்றும் மேல்நிலை மாணவர்களுக்குக் கூட சிறிய கெவுன் தரப்படுகின்றதை எண்ணி அதுவும் குறிப்பாக இருபாலர் பயிலும் வகுப்பிலே இத்தகைய ஆடையணியும் மாணவியர்கள் சிலர் மனம் படும் பாடு தாங்கொணாத் துயரை நல்குகின்றது. இதற்கெல்லாம் ஒரு சட்டம் வரக்கூடாதா என்று எண்ணி புலம்புபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
திரைப்படத்திலோ ஆடவரை அங்கம் முழுவதும் மறைத்துக் காட்டி, தாய்க்குலத்தை வெகுவாகவே பல்வேறு கோணங்களில் சித்தரிப்பதை நாம் நாள்தோறும் கண்கூடாய்க் காண்கிறோம். அதற்கு அவ்வாறு நடிக்கத் தயக்கம் காட்டாத சில பெண்களால், பெண்ணின் பெருமைக்கே மாசு ஏற்படத்தான் செய்கின்றது என்று மனம் வெதும்பும் சிலரையும் காணத்தான் செய்கிறோம்.
போதாக்குறைக்கு விளம்பரங்களின் தாக்கங்களைக் கூறவே வேண்டாம். ஏற்கனவே சில பெண்கள் தங்கள் முடியை சரிவரத் திருத்தாமல் உள்ளனர். பழங்காலத்தில் பெண்கள் எதற்காகவும் முடியை விரித்திருக்கக் கூடாது என்ற நியதி இருந்தது. இன்றளவும் அது சிலரால் பின்பற்றவும் படுகின்றது. ஆனால் தற்சமயம் வெளிவந்த ஒரு விளம்பரம் மனதை மிகவும் வருத்துகின்றது. அது என்னவெனின். ஒரு பெண் தன் கணவருக்கும். மகனுக்கும் உணவு பரிமாறுகிறாள். உணவில் ஒரு முடி வந்துவிட்டது. உடனே அவள் புதிய ஷாம்புவைத் துடைத்து முடி உதிர்வதை சீர் செய்வதாகக் காட்டுகின்றது. ஒருபுறம் தமிழர் பண்பாடு என்ற பெயரில். சீவி முடித்து, சர சரவென புடவையணிந்து. கைவளைக் குலுங்க கணவருக்கு அமுது படைக்கும் கலாச்சாரம். மறுபுறம் இதுபோல் காட்சிகள்.
இதற்கெல்லாம் காரணம் சில மீடியாக்களே. ஆயினும் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக வெளியிட்டாலும், அதையும் பின்பற்றித்தான் பார்க்கலாமே! என்ற கூட்டம் மறுபுறம். கண்டிக்க வேண்டிய ஒரு சில பெற்றோர்களும் கூட உடையில் மெத்தனம் காட்டத்தான் செய்கின்றனர்.
செய்தித்தாளை வாசித்தால் பாலியல் பலாத்காரம். வன்கொடுமை, இன்னும்.... இன்னும்... இன்னும்...
பச்சிளக் குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கில்லை என்ற அளவில் இன்றைய காலக்கட்டம் பெருமளவில் வருத்தத்தை ஏற்படுதுகின்றது. இன்னமும் கூறப்போனால் சில இடங்களில் வயது வித்யாசம் இன்றி, முதியவர்கள் ஏன் பெற்ற தந்தையே கூட இத்தகைய தவறு இழைப்பது பெருத்த அவாமனத்தை ஏற்படுத்துகின்றது.
ஒரு பெண் எத்தனை படித்துப் பட்டதாரியாக விளங்கினாலும் இன்னமும் அவள் ஆடவர்களுக்கு அடிமையாக அடிமாடாக மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவனவற்றையும் செவிமடுக்கத்தான் செய்கிறோம். தற்கொலை, தீக்குளிப்பு, எரிவாயு வெடிப்பு அடேயப்பா போதுமா இவைகள்? குடிகாரக் கணவனின் அன்றாடக் கொடுமைகள் வேறு. இதையெல்லாம் சகித்தாள் அவள் தெய்வம். எதிர்த்தால் அவளுக்கு வழங்கப்படும் பெயரே வேறு. ஏன்?...... ஏன்?........ ஏன்.?.......
எங்கே பெண்மைக்குப் பாதுகாப்பு? எங்கே பெண்ணிற்கு சம உரிமை?
சுதந்திரம் அடைந்து காலம் பல கடந்தாலும். இரவில் ஒரு பெண் தனியாக, தைரியமாக நடக்க முடிகிறதா? என்றால் ஐயமே!
பெண்மையே! நீயும் சில விஷயங்களில் உன்னைத் திருத்திக்கொள். வன்கொடுமையைத் தூண்டும் வண்ணமான உன் நடை உடைகளை சற்றே மாற்றிக்கொள். என்று மனம் குமுறத்தான் செய்கின்றது.
விடியுமா? இந்நிலை? ஆன்றோர்களே பதிலளியுங்கள்.

அன்புடன்,
திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி.

எழுதியவர் : திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி (8-Mar-19, 7:33 pm)
பார்வை : 1576

மேலே