பித்ருக்களை வழிபடும் திருநாள்

புரட்டாசி மாதத்தில் முன்னோர்களை வழிபடக் கூடிய மஹாளய பட்சம் என்ற 15 தினங்கள் இம்மாத பவுர்ணமி திதி முதல் தொடங்கி அமாவாசையில் நிறைவு பெறுகிறது.

மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக இறந்தவர்களது கையில் சேர்த்துவிடுகிறாள்.

மஹாளய தர்ப்பணத்தின் அவசியம்

மறந்துவிட்டதை மஹாளயத்தில் விடு என்பார்கள் பெரியவர்கள். நாம் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய திதி நாளை விட்டுவிட்டால் இந்தப் புண்ணிய தினத்தில் செய்துவிடலாம்.

பெற்றோர்கள் ஐம்பூத உடல் எனப்படும் உடலை விட்டு விண்ணுலகம் சென்ற பிறகு பித்ருக்கள், வைவஸ்வசன் ஆதி என்ற தலைவனின் கட்டுப்பாட்டில் வசிக்கிறார்கள். சொர்க்க பூமி என்ற போதிலும் அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளைத் தாங்களே எடுத்துக்கொள்ள முடியாது.

தங்கள் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைத்த சொத்துகளுக்கு கைம்மாறு வேண்டும் என்று கேட்டனர். இதனால் பித்ருக்கள் மீது பரிதாபப்பட்ட எமதர்மராஜன், அவர்களுக்கு 15 தினங்கள் விடுமுறை கொடுத்து பிள்ளைகளின் கையால் வயிறாரச் சாப்பிடச் சொல்லி மண்ணுலகிற்கு அனுப்பினான். அந்தக் காலமே மஹாளய பட்சம்.

பித்ருக்களுக்கு உற்சவ காலம் என்று கருதப்படுவதால் இந்த தினங்களில் அவரவர் தந்தை, தாய் இறந்த திதியில் எள் தர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும்.

நம்மை உயர்த்திய பெற்றோர்களுக்குத் திதி கொடுப்பது நமது கடமை. மஹாளயம் என்பதற்குச் சுப காரியம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மஹாளய பட்ச நாட்களில் சிரார்த்தம் செய்வதால் நமது முன்னோர்களும் சிறு வயதில் இறந்தவர்களும் பிறந்த உடன் இறந்த குழந்தைகளும், துர்மரணம் அடைந்தவர்களும் நல்ல கதி அடைவார்கள்.

மஹாளய பட்ச திதிகளின் பலன்கள்

நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களைத் திருப்தி அடையச் செய்தல் வேண்டும். மஹாளய பட்சத் திதி நாட்களில் பிரதமை முதல் அமாவாசை வரை ஏதேனும் ஒரு கோயிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை, குளக்கரைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்துவிடுவதால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நேரடியாக நாம் தருவதை ஏற்று ஆசி வழங்குவார்கள்.

தர்ப்பணம் செய்யும் இடங்கள்

இந்திய மண்ணில் பல பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ராமேஸ்வரம் கடற்கரை, கோடியக்கரை, பவானி கூடுதுறை, குமரி முறை, திருஆலங்காடு, தில தர்ப்பண புரி, திருவள்ளூர், மன்னார்குடி அருகே திருராமேஸ்வரம், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம், திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக் கட்டம், கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், திருப்பூந்துருத்தி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஆலயங்களுக்குள் பித்ரு தோஷ நிவர்த்தி தர்ப்பணத்தைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அங்குள்ள புனித தீர்த்தக்கரைகளில் செய்துவிட்டு ஆலயத்தில் தீபம் ஏற்றிவிட்டு வருவதே முறையான வழிபாடு.

மகத்துவம் நிறைந்த மணிகர்ணிகா கட்டங்கள்

பெற்றோர் உயிர்நீத்த பின்னர் அவர்கள் நற்கதி அடைய ஒரு முறையாவது காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி அங்கே மணிகர்ணிகா காட் என்ற படித்துறையில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

அங்கே பிண்டம் சமர்ப்பித்து காசி விஸ்வநாதரை தரிசித்து மற்ற சன்னதிகளையும் தரிசனம் செய்தபின் கயா சென்று 16 பிண்டங்களை சமர்ப்பித்து விஷ்ணுபாத தரிசனம் செய்வது வழக்கம்.

காசி தவிர வேதாரண்யத்தில் மணிகர்ணிகா கங்கை, மதுரையில் திருப்பூவனம் மணிகர்ணிகா குளம், திருச்சியில் உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் உள்ள வராக மணுகர்ணிகை, பல்லாவரம் அருகில் உள்ள திருநீர்மலை ரங்கநாதர் கோயில் எதிரில் உள்ள மணிகர்ணிகா புஷ்கரணி ஆகியவை மஹாளய தர்ப்பண வழிபாடு செய்யவும் பித்ரு தோஷங்கள் அகலவும் உகந்த மதிப்புமிக்க இடங்களாக விளங்குகின்றன.


குமார சிவாச்சாரியார்

எழுதியவர் : (8-Mar-19, 8:26 pm)
பார்வை : 47

மேலே