எண்ணங்கள் இனிய மொழிவழியே வண்ணங்க ளாகி வருதல் இனிது - வாக்கு நயம், தருமதீபிகை 113
நேரிசை வெண்பா
எண்ணங்கள் எல்லாம் இனிய மொழிவழியே
வண்ணங்க ளாகி வருதலால் - கண்ணகன்ற
ஞாலம் இயங்கி நடந்து வருகின்ற
மூலம் தெளிக முதல். 113
- வாக்கு நயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
மனிதனுடைய எண்ணங்கள் மொழிகள் வழியே உருவங்களாய் வெளி வருகின்றன; ஆதலால் விரிந்து பரந்துள்ள இந்த உலகம் இனிது இயங்கி வருகின்ற மூல நிலையை முதலில் நன்கு தெளிக என்றவாறு. இது உலக இயக்கத்தின் உரிமையை உணர்த்துகின்றது.
வண்ணம் - வடிவு, செயல். கண் - இடம். கண் அளவு கடந்துள்ள இஞ்ஞாலத்தில் எண் அளவு இயங்கி வரும் இயல்புணர்த்திய படியிது.
உயிர் உணர்ச்சிகள் உள்ளத்தில் எண்ணங்களாய் விளைகின்றன; அந்த எண்ணங்களை உரைகள் வெளியிடுகின்றன; அவை செயல்களாய் விரிந்து பல வழிகளில் பரந்து அளவிடலரியபடி பல கோடி வகைகளில் நிறைந்து நிலையோடி நிகழ்கின்றன.
இங்ஙனம் உலகம் நிகழ்ந்து வருதற்கு மூல காரணமாயுள்ளது யாது? என ஆராயின், அது மொழியே என்பது தெளிவாம். ஆகவே அதன் அற்புத நிலை அறிய நின்றது.
உயிர் வாழ்க்கையை இனிது இயக்கி, உலக வாழ்க்கையை நலமுறச் செய்து வருகின்ற உரைகளை வறிது வழங்காமல் மரபு முறை போற்றி அறிவு மணம் கமழ ஆற்றியருளுக என்பது கருத்து. தனக்கும் பிறர்க்கும் தக்க பயன்கள் விளைய மொழிகளைப் பக்குவமாக வெளியிடுக என்பதாம்.
இன்று நம்மிடையே உள்ள படிப்பறிவில்லா மக்களோடு, படித்தவர்களும், அரசியல் மற்றும் பதவியிலுள்ளோரும் தான்தோன்றித்தனமாக இன்றொரு கருத்து, நாளையொரு கருத்து என்று சிந்தியாமல் பேசி வருவது கேலிக் கூத்தாயிருக்கிறது. எனவே,
இன்னிசை வெண்பா
எண்ணியே சொல்லுக ஏற்றமிகு சொல்லினை;
மண்ணிலே சொல்லற்க மாண்பிலாச் சொல்லை;
அதுவுனக்குப் பொன்றா அழிவைப் புரிந்தே
இதமிலாத் துன்பீனும் எண்! – வ.க.கன்னியப்பன்
எனவே, நாவை நயனுற நன்கு பயன் படுத்துக என்பது குறிப்பு.