குரு நித்யா காவிய முகாம் 2019 – உதகை – அறிவிப்பு------------------வரும் மே மாதம் 3 ,4, 5 தேதிகளில் வெள்ளி சனி ஞாயிறு ஊட்டியில் ----------- இலக்கியம், நவீன இலக்கியம் சார்ந்த அமர்வுகள் நிகழும்

1993 முதல் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது குரு நித்யா காவிய முகாம். குரு நித்ய சைதன்ய யதி வாழ்ந்த காலகட்டத்தில் அவர் தமிழ்க் கவிஞர்களை சந்திக்க விழைந்தமையால் நான் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணன் துணையுடன் அதை ஒருங்கமைத்தேன். அவர் நிறைவுற்ற பின்னர் குரு நித்யா காவிய முகாம் என்ற பேரில் தொடர்ந்தோம். அன்று முதல் நிர்மால்யா இதன் அமைப்பாளர். ஐந்தாண்டுகள் தமிழ், மலையாளக் கவிதைப் பரிமாற்ற அரங்காக இது நிகழ்ந்தது. 2010 முதல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் சார்பில் நிகழ்ந்து வருகிறது.

வரும் மே மாதம் 3 ,4, 5 தேதிகளில் [வெள்ளி சனி ஞாயிறு] ஊட்டியில் மீண்டும் குருநித்யா காவிய முகாமை ஒருங்கிணைக்கிறோம். பண்டை இலக்கியம், நவீன இலக்கியம் சார்ந்த அமர்வுகள் நிகழும். பங்கேற்க விழைபவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். முன்பே வருபவர்களுக்கு இடம் என்னும் நெறி கடைப்பிடிக்கப்படும்.



நெறிகள்

ஊட்டி சந்திப்பிற்கான நெறிகள் சென்ற இருபத்தைந்தாண்டுகளாக பெரும்பாலும் மாறாமல் கடைபிடிக்கப்படுகின்றன. இத்தனை காலம் இச்சந்திப்பு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதற்கு இந்த நெறிகளே காரணம்.

1. அனைத்து அரங்குகளிலும் கலந்துகொண்டாக வேண்டும். வெள்ளி சனி ஞாயிறு மூன்றுநாட்களிலும் [இல்லையேல் இதை எங்கள் செலவில் ஊட்டியை சுற்றிப்பார்க்க பயன்படுத்திக்கொள்வார்கள்].

2. நாங்கள் ஒருக்கும் தங்குமிடத்திற்கு வெளியே தங்க அனுமதி இல்லை [அரங்குகளை குறித்த பொழுதில் தொடங்க முடியாமலாகும் என்பதனால்].

3. அழைக்கப்படாதவர்களை அனுமதிக்க இயலாது. அனுமதியின்றி எவரையும் உடனழைத்துவரக் கூடாது [நாங்கள் எல்லைக்குட்பட்ட விருந்தினரையே அனுமதிக்கிறோம். இடச்சிக்கல். தகுதியுடையவர்களை தெரிவு செய்கிறோம். ஆகவே அயலாருக்கு இடமில்லை].

4. மது அருந்துவதற்கு அனுமதி இல்லை. அரங்கிலும், வெளியிலும். [குருகுலச்சூழலின் நெறிகள் கடைபிடிக்கப்பட்டாகவேண்டும்].

5. விவாதங்கள் நெறியாள்கை செய்யப்படும். அதற்கு கட்டுப்படவேண்டும். தனிநபர் தாக்குதல்கள், மிகையான உணர்வு வெளிப்பாடுகள் தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

6. வருகை உறுதி செய்தவர்கள் முன்பணம் செலுத்தவேண்டும். வருகையை தக்க காரணமில்லாமல் தவிர்த்தால் முன்பணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது. வருவதாகச் சொல்லி உரிய காரணம் சொல்லி அனுமதி பெறாமல் பின்னர் தவிர்ப்பவர்கள் பின்னர் எந்த சந்திப்புக்கும் ஏற்கப்பட மாட்டார்கள். [இவ்வாறு தவிர்ப்பவர்களால் செலவுகள் மிகுகின்றன. தகுதியுடையவர்களுக்கு இடமில்லாமல் ஆகிறது என்பதனால்].

சென்றமுறை சிலர் ஊருக்குச் சென்று பணம் அனுப்புவதாக சொல்லி அனுப்பாமல் நின்றுவிட்டனர். அவர்கள் விண்ணப்பிக்கவேண்டாம்.

தங்குமிடம் குருகுலத்திற்குரியது. உணவுச் செலவை மட்டும் பகிர்ந்துகொள்ளவேண்டும். மாணவர்கள், நிதிச்சிக்கல் கொண்டவர்கள் முன்னரே தெரிவித்தால் செலவுப்பகிர்வில் அவர்களுக்கு விலக்கு உண்டு.

ஆர்வமிருப்பவர்கள் தொடர்புகொள்ளலாம்

குரு நித்யா காவிய முகாம் – 2019

விண்ணப்பப் படிவம்

பி கு: நபர் ஒன்றுக்கு ரூ 500 முன்பணமாக கட்டவேண்டும். கணக்கு விபரங்கள் பின்னர் மின்னஞ்சலில் அறிவிக்கப்படும். கணக்கு முடிக்கவேண்டியிருப்பதனால் ஏப்ரல் 1 முதல் பணம் செலுத்தும்படி ஏற்பாடு செய்யப்படும்.

==============================================

எழுதியவர் : (22-Mar-19, 1:31 am)
பார்வை : 27

மேலே