ஜம்மு காஷ்மீர் -6
ஜம்மு காஷ்மீர் -6
இதுவரை காஷ்மீர் மாநிலத்தின் நிலவரங்களை ஒரளவு புரிந்து கொள்ளும் அளவு இப்பதிவு அமைந்திருக்கும் என்று நம்புகின்றேன். தனித்துவமிக்க ஒரு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லையெனில், அமைதியை நிலைநாட்ட அரசு ஒரு நிலைபாட்டை எடுக்கவேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்படுகிறது என்பது இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள இயலும்.
அங்குள்ள மக்களின் தற்போதைய மனநிலையினை உளவியல் ரீதியாக பார்த்தோம் என்றால் தற்போதைய இளைய சமுதாயத்திற்கும் இதற்கு முன்னர் இருந்த சமுதாயத்திற்கும் சமூதாய இடைவெளி என்பது அதிகரித்துள்ளது. தற்போதைய இளம் சமூகத்தினர் நிதானமான போக்கை கைவிட்டு எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அவர்களின் கோபம் தங்களுடைய முன்னோர்களின் மீது திரும்பியுள்ளது. இத்தனை ஆண்டுகள் நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியே அவர்களது மனநிலையில் உள்ளது. மேலும் நிரந்தரமான வேலை வாய்ப்பின்மை, வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்படுதல் போன்ற காரணங்களும், இராணுவத்தினரின் ஒரு சில செயல்பாடுகளும் அவர்களை நாட்டின் இறையாண்மைக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டுள்ளது என்பதனையும் மறுக்க இயலாது.
தற்போது இராணுவத்தினர் மீது கூட்டமாக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் மூலம் தற்போதுள்ள இளைஞர்கள் சிறப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட முனைகிறார்கள் என்பதும் புலனாகும். ஆங்காங்கே இராணுவத்தினர் மீது நடத்தப்படுகின்ற கல்லெறி சம்பவங்கள், துப்பாக்கி சுடுதல்கள், தனி நபர் தாக்குதல் ஆகியவை அனைத்தும் தங்களது சுதந்திரத்தை பறித்துக் கொண்டார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. மேலும் அவ் விளைஞர்களுக்கு போதிக்கப்படும் பழைய வரலாறுகள் மூலம் அவர்கள் இந்திய அரசின் மீது தங்களுடைய வன்முறைகளை கட்டவிழ்த்து விட முயல்கின்றனர். ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று தங்களுடைய குடும்பத்திற்கு பணம் கிடைக்கும் என்பதற்காகவும், பிறரை பழிவாங்கி விட்டோம் என்ற எண்ணத்திற்காகவும் தீவிரவாத குழுக்களில் இணைவதும் அதிகமாகிக்கொண்டே செல்வதையும் நாம் காணமுடியும்.
பொது மக்களிடையே இவ்வாறான மனநிலை இருக்க இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனநிலையையும் நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது, எப்போது எங்கிருந்த தாக்கப்படுவோம், என்ற மனநிலையும், குடும்பத்தை விட்டு வசிக்கும் ஒரு சூழ்நிலையும் அவர்களின் மனநிலையை பாதிக்காமல் இல்லை, அவர்களின் மன அழுத்தத்திற்கும் தங்களது மேலதிகாரிகளின் வற்புறுத்தலாலும் பல்வேறான தவறான நிகழ்வுகளில் ஈடுபடுவதும் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவதனை நாம் அறிந்து கொண்டிருக்கின்றோம். என்னதான் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் தனிமனித உணர்வுகள், குடும்ப உறவுகள், சமூக உறவுகள் உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பிரச்சனைகளை இரு சமூக பிரச்சனையாக மாற்றிக் கொண்டுள்ள ஒரு சில இனக்குழுக்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தாண்டி ஒருமித்த முடிவை எடுக்கும் பட்சத்தில் இதற்கான தீர்வுகள் எட்டப்படும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
பாதிக்கப்பட்டது யாரா இருந்தாலும் அவர்களுக்கான மறுவாழ்வு எந்தவிதமான தடங்களும் இன்றி கிடைத்திடவும், இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பதும் பிரச்சனைகளின் தீவிரத்தை குறைக்கும் என்பதில் ஐயமில்லை. இராணுவ நடவடிக்கைகளின் போது சர்வதேச நடைமுறைகளை கைக்கொள்வது மற்றும் பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பான முறையில் நடத்துவது ஆகியவை கடைபிடிக்கப்படுதல் மற்றும் அப்பகுதி மக்களிடையே ஒரு நல்வுரவை வளர்த்தல் ஆகியவை இப் பகுதியில் ஏற்படும் தீவிரவாத குழுக்களின் மோதல்களை தவிர்க்க இயலும்.
துப்பாக்கிச் சத்தங்களுடே வாழ்வை நகர்த்தி கொண்டிருக்கும் அம்மக்களிடையே, இந்திய இறையாண்மையினை வளர்ப்பதற்கும் அவர்களின் வாழ்வாரத்திற்காக எடுக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் அரசு ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஒரு விழிப்புணர்வு தொடர்ந்து நடத்திட கடந்த கால காயங்களின் வடுக்கள் மறைந்து புதிய பாதை புலப்பட ஆரம்பிக்கலாம் ஆனாலும் தற்போதைய சூழலில் துப்பாக்கிகளை தவிர்த்திட அண்டைநாடுகளுடன் அமைதி உடன் படிக்கைகள் மேற்கொள்ள இரு நாட்டு அரசுகளும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பட்சத்தில் துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்து, தீவிர வாதத்தின் பிடியிலிருந்து பல இளைஞர்கள் காப்பாற்றப்படலாம் மேலும் பல உயிர் பலிகள் தவிர்க்கப்படும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.
நன்றி..!
பி.குறிப்பு:- இத் தொடரை தொடரந்து எழுதுவதற்கு ஊக்கம் அளித்து தொடர் ஆதரவை நல்கிய அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.