ஜம்மு காஷ்மீர் -5

பல்வேறு போர்முறைகளில் தற்போது மனித உரிமைகள் மீறப்படுவது ஜெனிவா ஒப்பந்தத்தின் படி தவறாக கூறப்பட்டாலும், அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக குறைந்த அளவே உள்ளது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் 1990 ஆண்டுகளில் காஷ்மீர் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த 90% சதவீத காஷ்மீர் பண்டிட்கள் தங்களுடைய இருப்பிடத்தை காலிபண்ணிக் கொண்டு வேறு இடங்களுக்கு இடப்பெயர்வு ஆகிவிட்டனர் என்பதனையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்திய அரசால் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைமுறைபடுத்தப்பட்ட இராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் (Armed Forces Special Powers Act) இப்பகுதியில் தீவிரவாதங்களை குறையச் செய்ய வழிவகுத்தாலும் அதனால் இப்பகுதியில் உள்ள மக்களிடையே இந்திய அரசின் மீதும், இராணுவத்தினர் மீதும் ஒரு வெறுப்பை உண்டு பண்ணியுள்ளது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இந்த சட்டத்தில் அவ்வாறு என்னதான் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் யாரைவேண்டுமானாலும் கைது பண்ணுவதற்கு அதிகாராம், விசாரணைக் கைதியாக்கும் அதிகாராம், வீடு புகுந்து தேடுவதற்கு அதிகாரம், படையில் உள்ள அல்லது பாதுகாப்பு பணியில் உள்ள பணியாளர்களில் ஆரம்ப பொறுப்புக்களில் உள்ளவர்கள் கூட துப்பாக்கி சூட்டிற்கு ஆணை வழங்கும் அதிகாரம். எந்த விதமான விசாரணைகளும் இன்றி சிறையில் அடைக்கும் அதிகாரம் என பல விதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மனதளவிலும் உடல் ரீதியாவும் ஒரு விதமான இறுக்கமான மனநிலையில் வாழ்வை ஓட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டுள்ளனர்.
அனைத்து நேரங்களிலும் ஏதாவது ஒரு பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் போது அங்குள்ள மக்களின் மனநிலை எவ்வாறுதான் இருக்கும்.

இங்குள்ள மக்களின் வாழ்வாதரம் ஒரு புறம் சரிவை சந்தித்துக் கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இப்பகுதி முழுவதும் மழைப்பாங்கான பகுதியாக காணப்பட்டாலும் ஒரு சில பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரமாக இருப்பதாலும், இமயமலை பகுதியின் முகப்பு மறைவில் அமைந்துள்ள காரணத்தினாலும் அப்பகுதிகளில் மழைப்பொழிவு என்பது குறைவாகி வறட்சியே நிலவுகிறது. இப்பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான தொழில்கள் நசிந்து வருவதும் ஒருகாரணம். கடுமையான குளிர் ஒரு சில காலங்களில் அதிக வறட்சி ஆகியவை இப்பகுதி மக்களின் வாழ்வாதார தேவைகளை சூறையாடிக்கொண்டுள்ளது. எனவே இப்பகுதி மக்கள் தங்களுடைய அன்றாட பணத் தேவைகளுக்கு ஏதோ ஒரு வகையில் விலைபோக வேண்டிய சூழலிலும் அகப்பட்டு கொண்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

தீவிரவாதக் குழுக்கள் பணத்தாலும் பொருட்களாலும் இப்பகுதி மக்களை தங்கள் வசம் ஈர்த்து அவர்களிடம் நண்பர்களாக பழகி அவர்கள் அறியாமலேயே பதுங்கு குழிகள் அமைத்து இராணுவத்தினருடன் சண்டையிடுவது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறான பல்வேறு சூழல்களில் வாழ்கின்ற இம்மக்கள் தற்போது உளவியல் ரீதியிலான தாக்கத்தினால் வீறுகொண்டு எழுகின்றனரோ என்றும் எண்ணத் தோன்றும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.

இச் சம்பவங்களுக்கான உளவியல் காரணங்கள் என்னவாக இருக்கும்……?
தொடர்ந்து வளரும் – 5

எழுதியவர் : சா.மனுவேந்தன் (21-Mar-19, 10:30 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 114

மேலே