தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது - கார் நாற்பது 37

இன்னிசை வெண்பா

கருங்கடல் மேய்ந்த கமஞ்சூல் எழிலி
இருங்கல் இறுவரை ஏறி, உயிர்க்கும்
பெரும்பதக் காலையும் வாரார்கொல், வேந்தன்
அருந்தொழில் வாய்த்த நமர்? 37

- கார் நாற்பது

பொருளுரை:

கரிய கடலின் நீரைக் குடித்த நிறைந்த சூலினையுடைய மேகம், இரு பெரிய – கற்களையுடைய பக்க மலையிமேல் ஏறியிருந்து நீரைச் சொரியும் மிக்க செவ்வியையுடைய காலத்தும் அரசனது போர்த்தொழில் வாய்க்கப்பெற்ற நம் தலைவர் வாராதிருப்பாரோ!

சூல் என்றதற்கேற்ப உயிர்க்கும் என்றார்; உயிர்த்தல் - நீரைக் காலுதல்; ஒலித்தல் எனினும் ஆம்! வாய்த்த என்றதனால் தப்பாது வென்றிருப்பரென்பது குறிப்பித்தவாறாம்! போர்த்தொழிலும் முற்றுப்பெற்றுக் காலமும் செவ்வியை உடைத்தாயவழித் தலைவர் வாராதிரார் என்று கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தாளென்க!

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (26-Oct-25, 10:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே