ஜம்மு காஷ்மீர் -4
1957 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் புகழ் பெற்ற தலைவர் சேக் அப்துல்லா முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அவரின் காலத்தில், இப் பகுதியில் பதட்டமான சூழல்களை விட அமைதியான சூழல்களே மிகுந்திருந்தது. இந்நிலையில் 1982 ஆம் ஆண்டு அவரின் மறைவிற்கு பின்னர் இப் பகுதி பதட்டம் நிறைந்த பகுதியாகவே மாறியது 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை மறைமுக ஆதரவு இப்பகுதியின் அமைதியை சீர்குழைத்தது, அன்றிலிருந்த இன்று வரை பதட்டமான பகுதியாக இருந்துகொண்டுள்ளது என்பதனை நாம் தினந்தோறும் செய்திகளாக படித்து, கேட்டு, பார்த்து தெரிந்து வருகின்றோம்.
இங்குவாழும் மக்களிடையே கிளர்ச்சியாளர்கள் சிலர் காஷ்மீர் மாநிலத்தினை தனிநாடக அறிவிக்க கோரியும், மற்றும் சிலர் பாகிஸ்தானுடன் இணைக்கச் சொல்லியும் கிளர்ச்சிகள் பல செய்து வருகின்றனர். இவ்வாறான கிளர்ச்சிகளில் பல விதமான மனித உரிமை மீறல்கள் இந்திய இராணுவத்தாலும், தீவிரவாதிகளாலும் அப்பாவி மக்கள் மீது ஏவப்படுவது வாடிக்கையாகிப் போன ஒன்றாகி விட்டது.
இப்பகுதியில் இந்திய அரசின் சார்பாக இந்திய இராணுவத்தின் தரைப்படை, வான்படை, மத்திய பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறை ஆகியோரும் அவர்களை எதிர்த்து ஹர்கத் உல் ஜிகாதி அல் இஸ்லாமிக், லக்ஷர் இ தொய்பா, ஜெய்-ஸி-மூகமத், ஹீஸ்புல் முஜாகிதீன், ஹர்கத் – உல்- முஜாகிதீன், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனியினர் மற்றும் அல் பதர் ஆகிய குழுக்கள் பன்னாட்டு தீவிர வாத அமைப்புக்களுடன் இணைந்து இப்பகுதியில் பல்வேறு தீவிரவாத போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டங்களின் உச்சகட்டமாக ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, குண்டுவைத்தல், அரசியல் கொலைகள் ஆகியவை அரங்கேறி வந்தாலும் அதனையும் தாண்டி பெண்களை வன்புணர்ச்சி செய்வது சர்வசாதாரண நிகழ்வாக அமைந்துவிட்டது வேதனையான ஒன்று. தன்னுடைய மாநிலத்தின் பெயரையே ஒரு பெண் கடவுளின் பெயரை கொண்டுள்ள ஒரு மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு கிடைப்பது என்னவோ பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமே. இதனை யார் செய்கிறார்கள்..? தீவிரவாதிகள் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றார்களா…? இல்லை இராணுவத்தினருமா…? இதனை புரிந்து கொள்ள நாம் மீண்டும் வரலாற்று பதிவுகளில் கால் பதிக்க வேண்டியுள்ளது. 1947 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரதேசத்தில் அப்போதைய அரசர் ஹரி சிங் என்பவரின் தலைமையில் நடைபெற்ற படுகொலைகளின் போது அதிக அளவிலான இஸ்லாம் மத பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார்கள். இதே நேரம் ஆயுதம் தரித்த பாகிஸ்தான் பழங்குடியினர்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் பாரமுல்லா மற்றும் முஸ்பாரா பகுதியில் முதல் காஷ்மீர் போரின்போது ஈடுபட்டுள்ளது மேலும் மிர்பூர் படுகொலைகளின் போது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஆசாத் காஷ்மீர் என்னும் பகுதியில் உள்ள இந்து மற்றும் சீக்கிய மத பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள் இந்நிகழ்வுகளில் பிற போர் நடைபெறும் இடங்களில் நடைபெற்ற பாலியல் வன்முறைகளை விட அதிக அளவு பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று பதிவுகள் குறிப்பிடுகின்றது.
1990 ஆம் ஆண்டுகளுக்கு பின்பு இந்திய இராணுவம் கூட்டு பாலியல் பலாத்காரத்தை இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவதாக மனித உரிமைகள் பார்வை என்ற அமைப்பு (Human Rights Watch)1993 ஆம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த கலாச்சார ஆயுதத்தின் பாதிப்புக்கள் தான் என்ன…? அங்க நடைபெறும் கிளர்ச்சிகள் உண்மையிலேயே தனிநாட்டு கோரிக்கைக்காக மட்டுமா…?
தொடர்ந்து வளரும் – 4