தலை தீபாவளி

தலை தீபாவளி..
20 / 10 / 2025
எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். காலையில் கங்கா ஸ்நானம் ஆச்சா? புத்தாடைகள் வாங்கியாச்சா? பலகாரங்கள் எல்லாம் ரெடியா? கொண்டாடுங்கள். நம் வாழ்வில் ஆசை, கோபம், மோகம், போட்டி, பொறாமை, துவேஷம் இவை எல்லாம் சேர்ந்த அந்த நரகாசுரனை வீழ்த்துவோம். புத்தாடை உடுத்தி, பலகாரங்கள் பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
சரி. தலைப்புக்கு வருவோம். "தலை தீபாவளி". தலை தீபாவளி என்றாலே ஸ்பெஷல்தானே. ஒவ்வொருவருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நாளென்றால் அது அவரவர்களுடைய தலை தீபாவளிதான். உண்மைதானே.புது மாப்பிள்ளைக்கும் புது மணபெண்ணுக்கும் வாழ்வில் ஒரு மைல்கல் இந்த தலை தீபாவளி. மாமியார் வீட்டில் மருமகனுக்கு நடக்கும் ஒரு விசேஷ நாள் இந்த தலை தீபாவளி. எனக்கு ஒரு சந்தேகம்? எத்தனையோ தீபாவளி இதற்கு முன்பும் கொண்டாடியும் இதற்கு பின்பும் கொண்டாடவும் போகிறோம். அப்படி இருக்கும்போது இந்த தலை தீபாவளிக்கு மட்டும் அப்படியென்ன முக்கியத்துவம்? அப்படி என்ன விசேஷம்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். நமக்குத்தான் எப்பவுமே மாத்தி யோசிச்சுதானே பழக்கம். ஏதோ என் சிறு மண்டைக்குள் குறுகுறுத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். தீபாவளி அதுவுமாய் என்னால் முடிந்ததை கொளுத்தி போடுகிறேன்.அணுகுண்டாய் வெடிக்கப் போகிறதோ?இல்லை புஸ்வானமாய் நமத்து போகிறதோ தெரியவில்லை. ஆனால் கொளுத்தி போடுவது மட்டும் நிச்சயம்.
கொஞ்சம் ரகசியமாய் பகிர வேண்டும். காதை அருகில் கொண்டுவாருங்கள். மெல்லத்தான் பேசவேண்டும். சிலபேருக்கு கல்யாணமான சில நாட்களிலோ.. இல்லை சில மாதங்களிலோ..சில பேருக்கு முழுதாய் ஒரு வருடம் கழித்து இந்த 'தலை தீபாவளி' வந்து சேரும். இது அவரவர் தலை எழுத்தை பொறுத்தது.. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒரு வருடம் கழித்து 'தலை தீபாவளி' கொண்டாடும் புதுமணத்தம்பதிகளை எடுத்து கொள்வோம். கடந்த ஒரு வருடத்தில் தம்பதிக்குள் ஓரளவிற்கு புரிதல் வந்திருக்க வேண்டும். வந்திருக்கும் என்று நம்புவோம். சரி. விஷயத்திற்கு வருவோம். ஒரு வருடம் கழிந்தாலும் புது மாப்பிளை புது மாப்பிளைத்தானே..அதே 'கெத்'தொட மாப்பிள்ளை..பழைய முறுக்கோடு மாமியார் வீட்டுக்கு தீபாவளிக்கு முதல்நாளே வந்திருப்பார். மாமியாரும் விழுந்து விழுந்து கவனிப்பார். மகளோ மாப்பிள்ளை மரியாதைக்கு ஒரு குறையும் வராமல் கண்கொத்திப் பாம்பாய் ஒவ்வொரு நகர்வையும் கவனித்து கொண்டிருப்பாள். என்னதான் ஆனாலும் அவள் வேறொரு வீட்டு பெண்ணாகி விட்டாளே..என்ன செய்ய? இது ஒரு பக்கம்...
விடிந்தது. தீபாவளி நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் துவங்கியது. முதலில் மருமகன் தலையில் எண்ணெய் தேய்ப்பது. சூடு பறக்க பறக்க தேய்க்கப்பட்டது. பெண்டாட்டிதான் சீகைக்காய் தேய்த்து விடுவாள். அங்குதான் இருக்கிறது. ' தலை தீபாவளியின்' சூட்ச்சுமம். தேய்க்கத்தொடங்கும்போது மெதுவாகத் தொடங்கும் போகப்போக சூடும் வேகமும் அதிகரித்து மாப்பிளை தலையை மட்டுமல்ல அவன் குடுமி அவள் கையில்..ஒரு வழி பண்ணிவிடுவாள். " நல்லா அழுத்தி தேய்த்து விடு. அவரை பிடித்திருக்கிற எல்லா சனிகளும்..எல்லா பிசாசுகளும் ஓடிவிடனும்" அசரீரியாய் மாமியாரின் குரல்.. 'உன் தங்கச்சி இருக்கிறாளே உன் தொங்கச்சி ஏன்? அவ வீட்டுக்கு போகமாட்டாளோ.. நம்ம வீட்லேயே டேரா அடிக்கிறதே வழக்கமாயிடிச்சு. தீபாவளி முடிஞ்சு போன உடன் அவளை வழியனுப்ப பாருங்க. இல்ல..." முதல் தேய்ப்பிலேயே ஆரம்பித்து விட்டாள். அடுத்து " உங்க தம்பி ஒழுங்கா ஒரு வேலைய தேட மாட்டாராமா? தொரைக்கு மூணு வேளை சோறு இன்னும் எத்தனை நாளைக்கு போட முடியும்? சீக்கிரமா வேலைய தேடிக்க சொல்லுங்க" தேய்கிறது கொஞ்சம் அழுத்தமாகிறது. அடுத்து முக்கியமான டார்கெட் " இங்க பாருங்க அனாவசியமா உங்க அம்மாவை என் வழியில் குறுக்கே வரவேண்டாம்னு சொல்லி வைங்க. மீறி வந்தாங்க..என் இன்னொரு முகத்தை காட்ட வேண்டியிருக்கும்.தாங்க மாட்டாங்க. ஏன் நீங்களும் தாங்க மாட்டீங்க. எதோ தல தீபாவளின்னு பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்கேன். மீறினீங்கன்னு வெச்சுக்கோங்க தினமும் தீபாவளிதான். வான வேடிக்கைதான்." என்று சொல்லிக்கொண்டே இன்னும் அழுத்தி தேய்த்தாள். படைக்கும் போது பிரம்மன் எழுதிய தலை எழுத்தை..எழுதினான் என்று நம்புவோம். அந்த தலை எழுத்தை..அந்த பிரம்ம ரகசியத்தை அனாவசியமாக அழித்து மாற்றி அவள் எழுத்தை..புதிய தலை எழுத்தை பதிவிட்டாள். ஆழ பதிவிடுவாள்.அந்த சக்தி இந்த பராசக்திக்கு மட்டும்தான் உண்டு.
முந்தியவர்களுக்கு இது தலை போன தீபாவளி. இளையவர்களுக்கோ கவர்ந்திழுக்கும் தலை போகப்போகும் தீபாவளி. எனக்கோ ' தலை தீபாவளி '. என் தலை எழுத்தையே மாற்றிய ..மாற்றப்பட்ட தீபாவளி. ஆனானப்பட்ட சிவனே உடம்பில் பாதியை கொடுத்துவிட்டு அம்போன்னு நிக்கிறான். பாற்கடலில் நாராயணனோ நீ என்னவோ சொல்லிக்கொண்டிரு. என் காலை பிடித்துவிட்டால் சரி என்று ஏகாந்த நிலையில் கண் மூடிக்கொண்டிருக்கிறான். சத்திய லோகத்திலோ தான் எழுதிய தலை எழுத்து மாற்றப்படுவதை கண்டும் காணாமல் கலைமகளின் வீணை நாதத்தில் மயங்கி கிடக்கிறான். மும்மூர்த்திகளின் நிலைமையே இப்படியென்றால் புது மாப்பிள்ளையின் நிலைமையை நான் சொல்லித் தெரிவதில்லை. ஆக தலை தீபாவளிக்குப் பிறகு அவன் புது பிறவியாய்..மந்திரிச்ச கோழியாய் மாறுவது..நேந்துவிட்ட காளையாய் மாற்றப்படுவது சர்வ நிச்சயம். எல்லாம் இந்த தலை தீபாவளியின் மகிமை.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (23-Oct-25, 7:49 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : thalai theebavali
பார்வை : 14

மேலே