யானை –சிறுகதை------- அனோஜன் பாலகிருஷ்ணன் ---------,ஷோபா – ஒரு கடிதம் -

ஜெ,

ஆம், சந்தேகத்திற்கிடமின்றி அனோஜனின் இச்சிறுகதை தற்போதைய தமிழ் சிறுகதைச் சூழலில் ஒரு குறிப்பிடத்தகுந்த வரவு தான். காரணங்களாக மூன்றைச் சொல்லாம். ஒன்று, கடந்த பத்து ஆண்டுகளாக இங்கு எழுதப்படும் பெரும்பாலான சிறுகதைகளின் இயங்குதளம் தன்னிலைவயப்பட்டதாக இருக்கிறது. அதாவது, கதையில் புனைவுலகத்தைக் கட்டமைக்காமல், சமூக நிகழ்வு ஒன்றிற்கு தன்னை சாட்சியாகக் கொண்டு கதைசொல்லி தனக்கு நேர்ந்த அல்லது தான் இருக்கும் சூழலைப் பற்றி வாசகர்களுக்கு பகிரும் அனுபவத்தன்மையிலான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. அனோஜனின் இக்கதை அத்தன்மையிலிருந்து மாறுபட்டு தன்னளவில் ஒரு புனைவு உலகத்தை கட்டமைக்கிறது.

இரண்டாவதாக இங்குள்ள பெரும்பாலன சிறுகதைகள் நிகழ்வுகளின் மீதான விவரணைகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. விவரணைத் தளத்திலிருந்து செயல் தளத்தை நோக்கி பயணிப்பதில்லை. அனோஜனின் இக்கதை விவரணைத் தளத்திலிருந்து செயல் தளத்தை நோக்கி முன்னகர்கிறது.

மூன்றாவதாக, சமீபகாலத்தில் எழுதப்பட்டும் சிறுகதைகளில் பெரும்பாலும் சமூக மைய நோக்கற்றதாக, அன்றாடச் சிக்கல்களை மட்டும் மையப்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. சமூக அரசியலை மையப்படுத்த வேண்டும் என்பது நியதியல்ல என்றாலும் இதுவரையிலான தமிழ் படைப்புகள் பெரும்பாலும் தனிமனித அக உணர்ச்சியை மட்டும் மையப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. சமூக அரசியலை மையப்படுத்தி வெளிவரும் படைப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ள தளத்தில் நின்றே நிகழ்வுகளை அணுகுவதாக இருக்கின்றன. அவ்வாறாக நில்லாமல் அனோஜனின் இக்கதை தனக்கான ஒரு அரசியல் பார்வையை கொண்டிருக்கிறது.

ஆனால் ஷோபா ஷக்தி படைப்புகள் குறித்து நீங்கள் கூறியவைகள் ஏற்புடையதன்று. நீங்கள் அவருடைய படைப்புத் தளத்தை பகடி என்ற தளத்திற்குள் குறுக்க முயல்கிறீர்கள். அவர் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் முறைகளின் மூலம் அங்கு என்ன நிகழ்த்தப்படுகிறது என்பதே முக்கியம். அது பகடியாக மட்டும் எஞ்சிவிடுவதில்லை. ஷோபா சக்தி என்றுமே கதைநிகழ்வுகளுடன் தன்னை இணைத்துக் கொள்வதில்லை. அவர் கதை நிலத்திற்க்கு வெளியே நின்றே கதையை சொல்கிறார். இவையாவும் நியதிகள் இல்லையென்றாலும், அவருடைய இக்கூறு முறைகளின் மூலம் அங்கு சாத்தியப்படுவது கதாபாத்திரங்களின் அக உணர்ச்சிகளை மட்டும் மையப்படுத்தியதாக இல்லாமல் அவர்களின் வினையால் நிகழும் புறச்சூழல்களின் மாற்றத்தையும் உள்ளடக்கிய ஒரு புனைவு உலகம் கட்டமைக்கப்படுகிறது. அதுவே அவருடைய படைப்பின் ஆகப் பெரிய பலம்.

அன்புடன்,

ரியாஸ்.

அன்புள்ள ரியாஸ்

நீங்கள் கூறும் கூறுகளை நானும் முன்வைத்தே ஷோபா சக்தியை மதிப்பிடுகிறேன். அதனடிப்படையிலேயே ஈழம் உருவாக்கிய முதன்மைக்கலைஞர்களாக, தமிழின் சிறந்த படைப்பாளிகளின் நிரையில் வருபவர்களாக அ.முத்துலிங்கம் ஷோபா சக்தி இருவரையும் குறிப்பிடுகிறேன் வெறும் பகடி என நான் சொல்லவில்லை – அவற்றின் உள்ளடக்கத்தின் அடுக்குகளை கணக்கில்கொண்டே அம்முடிவுக்கு வருகிறேன்.

ஆனால் ஒரு புனைவுலகில் மையமென ஓங்கி நிற்பது எது, ஒரு படைப்பின் புனைவுநிலைபாடு எது என்பது முக்கியமான ஒன்று. அதுவே அப்படைப்பின் வடிவம் – வாசக ஊடாட்டம் – அதன் எல்லைகள் ஆகியவற்றை முடிவுசெய்கிறது/ அது ஷோபா சக்தியின் கதைகளில் பகடிதான். பகடி எப்போதும் இலக்கியத்தின் மையக்கூறுகளில் ஒன்று. ஆகவேதான் நாம் செகாவ் முதல் ஸகி வரை ஒரு பெரிய நிரையை இன்றும் கொண்டாடுகிறோம்.

ஆனால் பகடி தன்னளவில் எல்லைகளையும் கொண்டது. அந்த எல்லைகளையே நான் சுட்டிக்காட்டினேன். பகடி அங்கதமாகும்போதே அடுத்தகட்டத்தை நோக்கி செல்கிறது. அங்கதம் பண்பாட்டுவிமர்சனமாகவும் வரலாற்றுவிமர்சனமாகவும் நிலைகொள்ளும்போதே தத்துவார்த்தமாக, கவித்துவமாக மேலும் எழக்கூடியது. செகாவ் அவருடைய மகத்தான கதைகளில் பிற பகடி எழுத்தாளர்களிலிருந்து மேலே எழுவது அவர் உருவாக்குவது அங்கதம் என்பதனால்தான்.

இந்தியமொழிகளில் நான் வாசித்த மிகச்சிறந்த பகடி எழுத்தாளர் வி.கே.என். அவரை ஒரு மேதை என்றே கருதுகிறேன். ஆனால் கேரளத்தையே ஆட்கொண்டிருந்த அவருடைய எழுத்துக்கும் இந்த எல்லைகளை காண்கிறேன்.

ஜெ

==============================================================================================================================

அனோஜன் பாலகிருஷ்ணனின் புதிய சிறுகதை. ஐயமில்லாமல் ஈழச்சிறுகதைப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என நினைக்கிறேன். ஈழச்சிறுகதை இது வரை சென்றடைந்த தளங்கள் முதன்மையாக நுண்சித்தரிப்பு [அ. முத்துலிங்கம்] பகடி [ஷோபா சக்தி] மற்றும் யதார்த்தச் சித்தரிப்புகள் மட்டுமே. அவை இலக்கியத்தின் வகைமைகள் எனினும் தங்களுக்கான எல்லைகளும் கொண்டவை. நுண்சித்தரிப்புகள் முழுமையை இலக்காக்க இயலாது, அவை வளர்ச்சிபோக்கு அற்றவை. பகடி மிகமிக எல்லைக்குட்பட்ட கலைவடிவம். பகடி ஒருபோதும் அந்த ஆசிரியனின் குரலாக அன்றி, அந்தக் காலகட்டத்தின் ஒரு பகுதியாக அன்றி நிலைகொள்ள முடியாதது. இலக்கியத்தின் உச்ச இலக்கு என்பது கவித்துவமும் தரிசனமும்தான். அது நிகழ்ந்துள்ள அரிய படைப்புகளில் ஒன்று இது.

ஓர் இலக்கியப்படைப்பாக இதற்கு சில அழகியல் போதாமைகளைச் சொல்வேன். மொழியில், யானையை உருவகப்படுத்தியிருப்பதில். ஆனால் கதைமுழுக்க யானை பொருள்மயக்கம் கொள்வது, யானை அகமாகவும் வரலாறு புறமாகவும் அமையும் பின்னல், உடனே யானை வரலாறாக ஆகும் ஜாலம் என ஓர் அழகியல் வெற்றி இக்கதை.

எழுதியவர் : (28-Mar-19, 7:43 am)
பார்வை : 142

மேலே