மனம் கொள்ளா மகிழ்ச்சி

காதல்... அது...
இறைவன் காதலுடன்
மனிதனுக்குக் கொடுத்த
அற்புத உணர்வு...
இறைவன் வழங்கியவற்றில்
தலையாயது இதுவே...

அது...பூவினும்
மென்மையானது...
அழகானது...
மணமானது...

இரும்பிலும் வலியது..
தங்கத்திலும் மதிப்பானது...
பூமி... அது.. உலகமாவது
இதனால்தான்...

காதல்... அது..
தோன்றிய பின் அதற்கு
நேற்றும்.. இன்றும்..
நாளையும் உண்டு...

காதலால் காயமாகிப்
போன இதயங்களுக்கு
காதலே மருந்தாகிறது...
கனவுகளுக்குள் கனவாய் வரும்..
நினைவுகளை நினைக்க வைக்கும்...
கற்பனைச் சிறகுகளைப்
பறக்க விடும்... மொத்தத்தில்
கோடையும் குளிராகும்..
குளிரில் குளிர் விட்டுப்போகும்...

கைகூடாக் காதல் கூட
தேனாய் இனிக்கும்..
சுகந்தமாய் மணக்கும்...
கைகூடும் காதல் மணம்
சொல்ல உலகின்
அத்தனை மொழிகளின்
அத்தனை வார்த்தைகளும்
நிச்சயமாய்ப் பத்தாதது...

மனதின் நீள அகல
உயரம் எதுவாகிலும்
அது பயணிக்கும் தூரம்
எவ்வளவாகிலும் அவ்வளவும்
காதலால் நிறைந்திருக்கும்...
மனம் கொள்ளா மகிழ்ச்சி
ஆளை ஆக்கிரமிக்கும்...
ஆயிரம் கோடிகள்
கொடுக்காத சந்தோசம்
ஒரே ஒரு நொடி
கடைக்கண் பார்வை தரும்...

வாழும் ஆசையும் தரும்
சாகும் துணிவும் தரும்...
காதல் வாழும்..
அதன் தோல்வியிலும்...

காதலைச் சொல்லும் வரை
காதலர் பக்கம் இருந்தாலும்
தூரமாய்த் தோணும்...
சொல்லி விட்டாலோ
தூரமாய் இருந்தாலும்
பக்கமாய்த் தோணும்...

காதலின் பெருமை
புலவர்கள் இதுவரை
சொன்னது கையளவு...
சொல்ல வேண்டியது கடலளவு...

காதலே காதலைச்
சொல்லித் தரும்...
காதலர்களே ஆசிரியரும்
மாணவரும் ஆகும்
அதிசயப்பள்ளி அது..
வாழும் அத்தனை ஆண்டுகளும்
படிக்கும் முழுநேரக்கல்வி..

காதலன்... காதலி..
காதலில் விழுவது
ஒரே நேரத்திலா..
ஒருவர் பின் ஒருவரா...
இந்த வழக்கு ஆதாம் ஏவாள்
காலம்தொட்டு நடந்து
வருகிறது... தீர்ப்பு
இன்னும் வந்தபாடில்லை...

பூக்களுக்குத் தெரியாது
தாம் மிக அழகென்பது..
காதலுக்குத் தெரியாது
தன்னால் உலகு
உயிர் வாழ்கிறது என்று..
😀👍🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Apr-19, 4:25 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 297

மேலே