வசந்தம் திரும்புமா

தேசாந்திரம் சுற்றித் திரும்பிய பறவையின்
சின்னஞ்சிறு இதயத்தில் இழைந்தோடும் ஏக்கம்
தான் முன்பிருந்த கானகத்தைக் காணாது தவித்து
இடைவிடாது சிறகை படபடத்து அடித்து
இங்கும் அங்குமாய் அலைகிறது...

அன்றைய வசந்தப் பொழுதுகளை எண்ணி
ஆற்றாமையில் புலம்பி ஜீவன் உருகிட
ஆத்ம உறவுகளை கூவி அழைக்கிறது....

சூனியத்தின் நடுவே எங்கோ ஒரு ஒற்றைமரம்
வலியை உள்வாங்கி தன்னுள் அடக்காது விம்மி
வெட்டவெளி வெறுமையில் அதை ஒலிசிதைத்தது
கையேந்திய காற்றலை கற்பாறையில் மோதிட
சிதறிய பாறை கதறி உரைத்தது...
“உன் தேசம் உனக்கில்லை உயிரே
உன் உடலை சுமந்து எங்கேனும் கடந்துவிடு”

செவியுற்ற சின்ன உயிர் ஜீவன் துடித்தும்
பற்றறாது பாசம் குறையாது
ஒடிந்த ஒற்றைக் கிளையில் அமர்ந்து
ஓயாது தன் ஓலத்தைத் தொடர்கிறது....
வசந்தம் திரும்புமா...?வனாந்திரம் செழிக்குமா...?

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (11-Apr-19, 6:22 pm)
பார்வை : 58

மேலே