காதல் கடிதம்
காதல் கடிதம்..,,!
என் விழி எழுதும் காதல் கடிதம்
வழி தேடி உன் விலாசம் வரும்
கீழடி அகழ்வாராய்விற்கு புதைத்திடுவாயோ
காலடி மிதியருகே கிழித்திடுவாயோ....
அடி தொடை அசை பார்த்து
வடிவமைத்த கவிதை அல்ல அது
அடிமனதை ஆலிங்கனம் செய்து ஆசனமிட்ட
முடிவான உறவிற்கு எழுதிய உரிமை சாசனமது
உயிர் மெய்சேர்ந்த அதில் ஒவ்வொரு சொல்லும்
உதிர தட்டுக்களில் உணர்வுகளை ஏந்திச் செல்லும்
உன் மகாசிரைவழியே அவை உட்புகுந்து
உந்தன் இதய அறையிலே எனை
சிறைவைக்கும்
கிழி! கிழித்தால் ஒருநொடி படித்துக் கிழி
எறி! எறிந்தால் உன் இதயத்தையும் சேர்த்து எறி
எரி! எரித்தால் என் நினைவுகளின் சுவடின்றி எரி
செய்!எது சாத்தியமோ அதை
உன் இதயத்திற்கு பாதகமின்றிச் செய்!
கவிதாயினி அமுதா பொற்கொடி