அம்மா

அம்மா……
ஆதியும் அந்தமும்
எல்லாம் நீயாய்…..

மூங்கில் முட்டிய காற்று
சுரமாய் வடிவுருவது போல்….
உன் மூச்சுக் காற்று பட்டு
உயிர்த்துத் துளிர்த்தேன…

நிசப்தத்தின் மடி தன்னில்
மொட்டவிழும் மலர் போல…….
உறகத்திலும் எனை நோக்கிக்
காவலாய் உன் விழிகள்…….

விளக்கடி தேக்கி வைத்த
இருள் போல …….
தேக்கி வைத்தாய்
உன் வயிறு முட்ட பசி தன்னை…

நீ சொரிந்த அன்பு மழையின்
அரவணைப்பின் கதகதப்பில்
கழித்திருந்ததே…….
இளமை தன் காலத்தை….

கால்கள் தனித்து நடை போட்டாலும்…
மனதென்னவோ உன் நினைவுக்
கரம் கோர்த்தே செல்கிறது…….

நோயின் வாய் நீ கிடக்க
என் பாரம் உன் மடி அமுக்க
கூற்றுவனைத் தொடர்ந்திட்டாய்
என் பிடி தளரவிட்டே……..

அன்புக்கு உருவளித்து
அன்னை என உலாத்தியவளை-அவன்
உருவுருவி ஊறவைத்தான் என்
உணர்விலாடும் மெய்பிம்பமென…..


சு.உமா தேவி

எழுதியவர் : சு.உமாதேவி (30-Apr-19, 1:28 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : amma
பார்வை : 121

மேலே