என்னவளை என்னவென்பேன்
என்னவளை என்னவென்பேன்?
நிலவென்றேன் கதிரென்றேன் மகிழ்ந்தாள் இல்லை
நெடும்பொழுதும் இரவினிலும் ஒடுங்கல் சொல்லி.
பலர்விரும்பும வானமென்றேன் பணிந்தாள் இல்லை
பலவண்ணம் நீலநிறம் மாறும் என்றாள்
குலமகளே குலக்கொழுந்தே நீதான் என்றேன்
குவலயத்தில் வளர்ந்திடுதல் தடுப்பீர் என்றாள்
நிலமகளே நீள்புகழின் நாயகி என்றேன்
நிம்மதியாய் இருப்பதுதான் என்றோ என்றாள்
வண்ணமலர்க் கூட்டமென்றேன்வஞ்சியைக் கொஞ்சி
வாடியதும் வீசிடவேசெய்வீர் என்றாள்
எண்ணுகின்ற யாவிலுமே நீயே என்றேன்
எதிரியாரும் எண்ணத்திலேஉண்டோ என்றாள்
உண்ணுகின்ற நல்லமுதம்கண்ணே என்றேன்
உலையினிலே எனைக்கொதிக்க விடவா என்றாள்
கண்மணியே என்பார்வை நீதான் என்றேன்
கண்ணாடி போடுவதும் எதனால் என்றாள்
கனிரசமாய் இனிப்பதாகச்சொல்லிப் போனேன்
கசக்கியெனைப் பிழிவதற்கா எண்ணம் என்றாள்
பனித்துளியாய் குளிர்விக்கும் அழகே என்றேன்
பட்டெனவே நான்மறைந்து விடவா என்றாள்
தனித்தவிலா யொலிப்பவளே இசையே என்றேன்
தினமென்னை அடித்திடவோ எண்ணம் என்றாள்
நனிசிறந்த நறும்தமிழே நீதான் என்றேன்
நாயகியோ அகமகிழ்ந்தே அணைத்தாள் என்னை!
இராம.வேல்முருகன்
வலங்கைமான்