வரமாய் வந்த தேவதை நீ
நெஞ்சம் பதைபதைக்கிறது!
பெண்ணை இறைவியாய் போற்றும் பாரதத்தில் அரங்கேறும் வன் கொடுமைகளை கண்டு!!!
பெண்ணே இனியாவது உயிர்த்தெழு- எதற்காக காத்துக் கிடக்கிறாய் -உனை காக்க கிருஷ்ணன் வருவான் என்றோ!!!காலதாமதமாயினும் வந்தான் திரௌபதியை காக்க பாரதத்தில்!!!இக்கலியுகத்தில் எந்த மாயக்கண்ணனும் இலர்- இதுதான் நிதர்சனம்!!!
மெழுகாய் உன்னை உருக்கிட நினைத்த பாதகனை நெருப்பாய் தகித்து
சுட்டுப் பொசுக்க வேண்டாமோ!!!
ஆம். உன் துகிலுரித்தவனின் உயிர் உருவி விடு, இனியாவது ஒரு விதி செய்வோம்!!!நெஞ்சில் ஈரமற்ற அரக்கனை வதைத்து!!!இல்லையேல் கருவில் இருக்கும் சிசுவும் எஞ்சாது பெண்ணாய் போன பாவத்திற்காக !!!
ஆண் சமூகமே- உங்களுக்கு
ஒருவேண்டுகோள்
எங்களை இறைவியாய் பாவித்து பூஜிக்க வேண்டாம்!!!
மலரினும் மெல்லியாள் என்று விளிக்க வேண்டாம்!!!
புனிதமானவள் என்று பூம் பெயரிட வேண்டாம்!!!
சித்திரப்பாவை இவள் என்று வர்ணிக்கவும் வேண்டாம்!!!
ஆதியும் இவள் அந்தமும் இவள் என்று பறைசாற்றவும் வேண்டாம்!!!
மனிதியாய் வாழவிடு!!!
மனிதியே வெளியே வா மனிதம் காக்கப்பட!!!
கொடும்பாவியே!!! மூர்க்கனே!!!பிணந்தின்னி கழுகுகளே!!!
ஐயகோ!!!அவைகள் நகைக்கும் மனித இனத்தை பார்த்து
சதைப் பிண்டத்தை தின்பது என் பிறவி குணம் !!!
மழலை மாறாத குழந்தைகளைக் கூட சதைப் பிண்டமாய் பார்ப்பது உன்பிறவி குணமோ என்று!!!!
மிக மிக ஈனச் செயலை செய்து உன்னை சுமந்தவளின் கருவறையை களங்கப்படுத்தி விட்டாயே!!!
உன்னை நிர்ணயிக்க அகராதியில் வார்த்தைகளற்று தவிக்கிறது எம்மொழி!!!காமக்கொடூரனே!!!உன்னை கொன்று புதைக்கும் ஆத்திரம் எழுகிறது மனதில்!!!நினைவில் கொள்!!! நீ துயில் கொள்ள பூமித்தாயும் இடம் கொடாள்!!!
சென்னை மாநகரத்தில் மிகவும் பிரபலமான அதர்வா குழந்தை கருத்தரிப்பு மையம் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக மருத்துவமனை. மழலைச் செல்வத்திற்காக தவமிருக்கும் தம்பதியினருக்கு அது கோவில். அந்த மருத்துவமனையில் வெற்றிச் சகிதம் அதிகம் என்பதாலேயே கூட்டம் அலைமோதும். புகழ்பெற்ற மருத்துவர் மகிழ்வதனி முன் குழந்தைகளுக்காக ஏங்கும் இளம் தம்பதியினர் அமர்ந்திருந்தனர். கதிர் வயது 31 , திங்கள் வயது 28. திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகளாக குழந்தைக்கு தவிக்கும் தம்பதியினர்.
திங்களின் மருத்துவ அறிக்கையை பார்த்த மகிழ்வதனி "மிஸஸ்.திங்கள் உங்கள் மருத்துவ அறிக்கையை பார்க்கும்பொழுது ஒரு விஷயம் தெளிவாக தெரியுது. உங்களுக்கு கருத்தரிப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் உங்கள் கர்ப்பப்பைக்கு அதை சுமக்கும் வலுவில்லை".
இதைக் கேட்டதும் அவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அவள் கைகளை ஆதரவாக பற்றிய கதிர் கலங்காதே என்று அவளுக்கு கண்களால் ஆறுதல் கூறினான். அந்நியோன்யமான தம்பதிக்கு கடவுள் ஏன் இப்படி ஒரு கொடுமையான குறையை கொடுத்தான் என்று நினைத்த மகிழ்வதனி "திங்கள் கவலைப்படாதீங்க. இப்போ இருக்கிற டெக்னாலஜியில் எவ்வளவோ முன்னேற்றங்கள் இருக்கு. அதனால நீங்க கொஞ்சமும் கவலைப் பட அவசியமில்லை. உங்களுடைய கருப்பைக்கு வலுவில்லை. அவ்வளவுதான். அதற்கு வலுவூட்டினால் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் சாதாரண விஷயம். என்ன மத்தவங்களை விட நீங்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர்ஃபுல்லா இருக்கணும். சரியான ட்ரீட்மென்ட் எடுத்தா நீங்க குழந்தை பெறுவதற்கு 100 சதவீத வாய்ப்பு இருக்கு என்று கூறி கொண்டிருக்கையில் மேசையில் இருந்த தொலைபேசி சிணுங்கியது".
எடுத்து பேசிய மகிழ்வதனி பதட்டமாக அறையை விட்டு வெளியில் வந்தாள். அவர் பின்னரே திங்களும் கதிரும் வந்தனர். வாயிலில் ஒரு பெண் குழந்தை குருதியில் நனைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது. குழந்தைக்கு முதலுதவி செய்ய ஆணை பிறப்பித்து கொண்டிருந்தாள் மகிழ்வதனி. குறைந்த நேரத்தில்அக்குழந்தையயை ஐ. சி. யு வார்டுக்கு மாற்றினர். அங்கு இருந்த செவிலிப் பெண் அக்குழந்தையை மருத்துவமனையில் ஒப்புக் கொடுத்தவரிடம் தகவல்களை அளிக்குமாறு கேட்டாள்.
"இந்த அப்ளிகேஷன் ஃபார்ம ஃபில் பண்ணி கொடுத்துடுங்க" என்றதும் தான் அம்மனிதன் சுய உணர்வு பெற்று இவ்வுலகுக்கு வந்தான். இன்னும் கண்களில் அதிர்ச்சி களையாதவன் சொன்ன பதிலில் அங்கு உள்ள அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்த குழந்தை யார் என்றே தனக்கு தெரியாது என்றும், வரும் வழியில் குப்பைத்தொட்டியின் பக்கத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த குழந்தையை விட்டுச் செல்ல மனமில்லாமல் தான் தூக்கி வந்ததாகும் கூறினான்.
இதைக் கேட்ட திங்களின் உள்ளமும் குமுறிக்கொண்டிருந்தது.
" ஏன் கதிர் நமக்கு கடவுள் இந்த மாதிரி ஒரு குழந்தையை கொடுக்கல. எனக்கு இப்படி ஒரு வரம் கிடச்சா நான் அவளை பொத்திவச்சு பாதுகாத்து இருப்பேன்"
"திங்கள் கண்ட்ரோல் யுவர்செல்ப் வா நாம கிளம்பலாம்"
வேண்டாம் என்றும் மறுப்பாய் தலை அசைத்தவளை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் சென்றான் கதிர். அவனுக்குத் தெரியும் தன் மனைவி மனதில் என்ன நினைக்கிறாள் என்று. அவளுக்கு தேவை அக்குழந்தை பிழைத்தது என்ற ஒற்றை வார்த்தை. ஆனால் அது சாத்தியப்படாத ஒன்று என்று அவன் மனம் ஓலமிட்டது. குழந்தை இறந்தது என்ற செய்தி அவள் காதை எட்டினாள் அவள் சுக்குநூறாக நொறுங்கிப் போவாள் என்ற நிதர்சனம் அறைந்ததில் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான். இவர்களின் உரையாடலை ஓரமாய் ஒரு அரூபம் நின்று பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்களில் இருந்த ஏக்கம் துயரம் சொல்லில் அடங்காது. கண்களை துடைத்துக் கொண்டு அவர்களை அரூபம் தொடர்ந்தது.
வீட்டிற்கு வந்தவள் கணவனின் தோள் மேல் சாய்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். கதிர் எதுவும் பேசாமல் அவளை தோல் வளைவில் கொண்டு தலைகோதி ஆறுதல் அளித்தான். சொல்லும் வார்த்தைகளில் இல்லாத ஆறுதல் மௌனமாய் லட்சம் வார்த்தைகளுக்கு சமானமாய் அவளுக்கு ஆறுதல் அளித்தது.
சிறிது நேரம் கழித்து தெளிவுற்றவள் "சரி கதிர், நீங்க அலுவலகம் கிளம்பி போங்க. நான் அழுது அழுது உங்களையும் கஷ்டப்படுத்துகிறேன்"
"என்ன மண்டே! இப்படி அழுதழுது என் சட்டை ஃபுல்லா நனச்சுட்டியே"
"இப்படி கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவ உங்க கிட்ட சொல்லி இருக்கேன்" என்று செல்ல கோபம் கொண்டவளைக் கண்டு நிம்மதி உற்றான். தன் மனைவி இயல்புநிலைக்கு திரும்பி விட்டாள் என்பதை பறைசாற்றியது அவளுடைய முறைப்பு.
" சரி சரி உன் பார்வையால் என்னை எரிச்சுடாதே!! நேரமாச்சு நான் கிளம்புறேன்" என்று கூறி அவளது நெற்றியில் இதழ் ஒற்றி பிரியா விடை கொடுத்து பிரிந்தான் அந்த அன்புக் கணவன்.
அவன் சென்ற பிறகு தலை கனக்கவே சற்று நேரம் உறங்கினாள். அவள் விழித்துப் பார்க்கையில் எதிரே ஒரு பெண் குழந்தை அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. அந்நிகழ்வை அவள் பிரமை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவள் காதில் விழுந்த அந்த மூன்றெழுத்து சொல்லில் ஆயிரம் முறை பிறந்தாள்.தான் கேட்டது நிஜம்தானா என்று யோசிக்கையில் அவள் காதில் மீண்டும் ஒலித்தது அவ்வார்த்தை. "அம்மா" என்று காதுக்குள் இனிமையாய் இறங்கிய வார்த்தை அடிவயிறு வரை சென்று ஆயிரம் பட்டாம் பூச்சிகளை படபடக்க செய்தது. சொல்லொண்ணா மகிழ்ச்சியில் மூளை வேலை நிறுத்தம் செய்தது. அது யார் என்ன எப்படி வீட்டுக்கு வந்தது அக்குழந்தை என்ற ஆராய்ச்சி எதுவும் அவள் செய்யவில்லை. அக்குழந்தையை வாரி அணைத்து முத்த மழை பொழிந்தாள். மலடி என்ற சொல்லால் ஆயிரம் முறை மடிந்தவளுக்கு அம்மா என்ற ஒரு சொல் அவள் உயிர் வரை தீண்டிப் அவளை உயிர்த்தெழச் செய்தது. அதன் பிறகு அவள் அக்குழந்தையின் உலகில் தன்னை தொலைத்தாள். அக்குழந்தைகக்கு சாப்பாடு ஊட்டி, விளையாடி, கதை சொல்லி மாய உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கையில் எப்படி அக்குழந்தை வந்ததோ அதே மாதிரி மாயமாய் மறைந்தது. ஒரு நிமிடம் அவளுக்கு தான் கண்டது எல்லாம் கனவோ என்ற எண்ணம் வந்தது. கனவு என்று வந்தாலும் எங்கோ நெஞ்சின் ஓரத்தில் தித்திக்க தான் செய்தது. அதனால் அந்நிகழ்வை அவள் கணவனிடம் சொல்லாமல் புறக்கணித்து தனது அன்றாட வேலைகளை கவனிக்கலானாள். ஆனால் இந்த நிகழ்வு தினமும் தொடர்ந்து நிகழ்ந்தது. கொஞ்சம் இனிமையாய் ஆடித்தான் போனாள். அன்று இரவு கணவனிடம் நடந்த நிகழ்வுகளை கூறினாள்.
"உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா நீ சொல்றது எப்படி சாத்தியமாகும்"
"என்னை கடைசியில் நீங்களும் பைத்தியம்னு சொல்றீங்க. ஏற்கனவே எனக்கு இந்த உலகம் மலடி என்று அழகான பெயர் ஒன்னு கொடுத்திருக்கு" என்று மனத்தாங்கலாக கேட்டவளை என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை கதிருக்கு.
"என்ன வார்த்தை சொல்லிட்ட திங்கள். சரி விடு நான் நம்புறேன் உன்னை. நாளைக்கு நான் லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன். என்ன நடக்குதுன்னு பார்ப்போம். மறுநாள் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு மனைவியுடன் ஆவலாய் எதிர்பார்த்திருந்தான். அவர்களுடைய ஆவலை பொய்யாக்காமல் குழந்தை வீட்டுக்கு வந்தது. குழந்தையைக் கண்டவுடன் அவனுடைய மூளையும் மரத்துத் தான் போனது. இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயினர். அன்று இரவு தனிமையில் திங்கள் தன் கணவனிடம் "ஏங்க அந்த குழந்தையை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க" என்று கேட்டாள்.
"நீ எப்படிக் ஒரு குழந்தைக்காக ஏங்கி தவச்சியோ, அதே மாதிரி அந்த குழந்தையும் ஒரு அம்மாவுக்காக ஏங்கி இருக்கு. அந்த குழந்தையோட ஆசை நிறைவேறாமல் இறந்ததால், அந்த குழந்தையோட ஆத்மா உன்ன சுத்தி சுத்தி வருது. உன்ன அம்மானு நம்புது.
அவள் கண்களில் கண்ணீருடன் "இந்த குழந்தையே நமக்கு குழந்தையாக வந்து பிறந்தால் நல்லா இருக்கும் கதிர்."
"நீ கவலை படாமல் தூங்கு. நாம் நினைத்தது கண்டிப்பா நடக்கும்" என்று கூறி அவளை ஆறுதல் படுத்தி உறங்க வைத்தான். நாட்கள் அதன் போக்கில் நகர திங்கள் ஒரு நாள் குழந்தையை கூட்டிக்கொண்டு முதன் முதலாக கடைத்தெருவிற்கு சென்றாள். அக்குழந்தை ஆசையாக கேட்ட பொம்மை விளையாட்டு சாமான்கள் அனைத்தையும் வாங்கிக் குவித்தவள் தன் வயிற்றில் பிறந்த குழந்தையாகவே நினைக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. எதிரில் வந்த ஒருவனைப் பார்த்து அக்குழந்தை பயந்து நடுங்கியது. திங்களின் கைகளைப் பற்றிக் கொண்டு "அம்மா வலிக்குது அம்மா வலிக்குது" என்று கதறி துடித்தது. ஒருவழியாக வீட்டுக்கு கூட்டி வந்து அக்குழந்தையைத் ஆசுவாசப்படுத்தி என்ன நடந்தது என்று பொறுமையாக விசாரித்தாள். ஆனால் அவளுக்கு அதில் கிடைத்த செய்தியோ அவளை மரித்துப் போக செய்தது. ஆம் அந்தக் கொடியவன் அக்குழந்தையை கதறக்கதற துடிக்க துடிக்க பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளான். அவன் தேவை முடிந்த பின்னர் அக்குழந்தையயை தூக்கிச்சென்று குப்பைத் தொட்டியின் அருகே போட்டுவிட்டு சென்று விட்டான். அங்கு கடந்து சென்ற யாரோ ஒருவர் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.அந்த மருத்துவமனையில் தான் திங்களை அக்குழந்தை கண்டதாகவும் குழந்தைக்காக அவள் வடித்த கண்ணீரை கண்டு அவள் பின்னால் வந்ததாகவும் சொல்லியது அந்த குழந்தை. இவை அனைத்தையும் கேட்டதும் கதறி அழுத அவளை கட்டிக்கொண்டு ஆறுதல் படுத்தியது.
"எனக்கு இப்போ ஒன்னும் இல்ல அம்மா. அதான் நீங்க இருக்கீங்களே" என்று விகல்பமாக கூறிய ஐந்தே வயதான பச்சிளம் குழந்தையை வாரி அணைத்து உச்சி முகர்ந்தாள். அப்போதே அந்த கொடூரனை கொன்று புதைக்கும் ஆத்திரம் மனதில் எழுந்தது. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். அங்கு நிலவிய அமைதியைக் குலைக்கும் வண்ணம் "அம்மா அந்த அண்ணாவ இரண்டு அடி அடித்து விடவா. எனக்கு அடிக்கணும் போல இருக்கு" என்றும் மழலையில் மிழற்றிய குழந்தையை கண்டு துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.
என்ன நினைத்தாளோ அவள் வாயில் இருந்து சொற்கள் தானாக உதிர்ந்தது.
"அவனைக் கொல்லும் உரிமை உனக்கு இருக்கிறது. போய் கொன்று விட்டு வா. உன்னை என் மணி வயிற்றில் சுமக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்". மறுநாள் காலை செய்தித்தாளில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார் என்று அக்கொடியவனின் நிழல் படத்துடன் வந்த செய்தியைக் கண்டு நிம்மதி அடைந்தாள்.
உலகிலேயே மிகவும் கொடூரமான கொடுமையை அனுபவித்த ஒரு குழந்தைக்கு நியாயம் கிடைத்ததாகவே நினைத்தாள் திங்கள். ஒருவேளை அக்குழந்தை அவள் வயிற்றில் வராமல் இருந்தாலும் இப்பொழுது நிம்மதியாக நித்திரை கொள்வாள் திங்கள்.
பத்து தினங்கள் கழித்து அவள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது.
அவள் மனதில் அசரீரி ஒலித்தது "அம்மா நான் வந்து விட்டேன் உன்னுள். அவனைக் கொன்று விட்டேன். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் உன் கருவில் இருந்து. உன் முகம் காணும் நாள் எந்நாளோ?"
அன்று இரவு தனிமையில் "குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் திங்கள்" என்றான் கதிர்.
சிறிதும் யோசனையின்றி அவள் வாயிலிருந்து உதிர்ந்த பெயர் "இறைவி" யோசனையாய் பார்த்த கணவனிடம் "இது ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் கதிர். என் குழந்தை அவளை சீரழித்தவனை காவு வாங்கி விட்டாள். இனி ஒரு பெண்ணுக்கு இக்கொடுமை நடக்குமாயின் அவனை நாற்சந்தில் கழுவில் ஏற்ற வேண்டும். அதற்கு என்னுடைய பெண் மரித்த பின்பும் நியாயம் கற்பித்து பிள்ளையார் சுழி போட்டு விட்டாள்.
"கொஞ்சம் வன்முறையையும் சொல்லிக் கொடுக்கலாம் பெண் சிசுவுக்கு அதன் உயிர் காக்க!!!
பெண்ணே நீ முடிவெடு, அரக்கனை எப்படி வதைக்கலாம் என்று!!!
மனதி நீ வெளியே வா!!! மனிதம் காக்க!!!"
தீர்ப்புகள் வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இக்கதை சமர்ப்பணம்