ஜெயமோகன்---புத்தகத்தில் இருந்த எடுத்து எழுதியது ------------Jeyamohan Quotes

“நோயாளியும், பித்தனும், ஞானியும், கலைஞனும் இரவில் தூங்குவதில்லை..”

“அறிவதொவ்வொன்றும் அறியாமையையே..”

“இலக்கணம் பின்னால் ஊர்ந்து ஊர்ந்து வரும், இலக்கியம் முன்னால் பறந்து சென்றுகொண்டிருக்கும்”

“முகமூடிக்கு எப்போதும் ஒரே உணர்ச்சிதான், முகம் அப்படிபட்டதல்ல..”

“மானுட மனத்தின் அதி நுண்மையான ஒரு இடத்தை 'தற்செயலாக’ ஆனால் தீவிரமாக தீண்டிச்செல்வதே மிகச் சிறந்த கதை”

“ஒரு முச்சந்தி வியாபாரிக்குத் தேவையில்லை. முழுமையாக விடுதலையடைந்த மனிதர்களுக்கும் தேவையில்லை இந்த இரண்டு எல்லைகளுக்கும் நடுவில் இருப்பவர்களுக்கு இலக்கியம் தேவை..”

“பறவையை நேர் முன்னால், அது நம்மை நோக்கி முகத்திற்கு நேராக பறந்து வருவதை பார்ப்பது கிளர்ச்சியான அனுபவம்.”

“வானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது”

“காமத்தின் அனல்காற்று குளிர்ந்துதான் ஆகவேண்டும் ஆனால், குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடி கொடிகளுடன் நகரையே கொளுத்திவிடுகிறது”

“. தன் சிறந்த மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு தன் அடுத்த தலைமுறையை உருவாக்கும் சமூகங்களே வாழும் சமூகங்கள். வெல்லும் சமூகங்கள். சராசரியை முன்னிறுத்தும் சமூகங்கள் உறைந்துவிட்டவை. அடிமைப்பட்டவை.”

“அகம் நிறைந்தவனுக்கு புலன்கள் அமுதத்தை மட்டுமே அளிக்கும் என்பது யோகமரபின் ஞானம்”
― Jeyamohan, இன்றைய காந்தி

“என்னுடைய சாத்தியங்கள் முழுவெளிப்பாடு கொள்ளும் களமே தன்னறம் என்பது. அதில் இறங்கிச் செயலாற்ற நான் என் பிறப்பால் பணிக்கப்பட்டிருக்கிறேன்”

“பெரும்செயல்வீரர்கள் சோர்வை அறியாதவர்கள் அல்ல, சோர்வைக் குறைந்த கால அவகாசத்தில் சமாதானம் செய்துகொண்டு மீளத்தெரிந்தவர்கள்.”

“அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது.”

“செயலாற்றுவதால் கிடைப்பது ஒரு தன்னிறைவு. என்னுடைய சாத்தியங்களை நான் முழுமையாக நிகழ்த்தும்போதுதான் எனக்குள் இருந்து என்னை கவனித்துக்கொண்டிருக்கும் ஒன்று நிறைவடைகிறது”

“மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.”

“புத்தகங்கள் முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை.”

“அஞ்சவேண்டும். அவ்வச்சம் முற்றிலும் இல்லை என்பதே கர்ணனின் வீழ்ச்சி” என்றான் கிருஷ்ணன். “போர்க்களத்தின் முன் நிற்கையில் ஊழின் பெருந்தோற்றம் கண்டு கைதளர்ந்து வில்நழுவும் வீரனே மெய்மையை அறியக்கூடியவன்.”

“மொழியுடன் இருந்து கொண்டிருங்கள். மிக இளமைப்பருவத்தில் ஒளிமிக்க மணிமுடியுடன் உங்களுக்குக் காட்சியளித்த அந்த தேவதையை ஒவ்வொரு கணமும் கூடவே வைத்திருங்கள்.”

“உங்கள் ஆளுமை எதைக்கோருகிறதோ அதை மட்டுமே நீங்கள் கற்பீர்கள் என்றால் ஒருபோதும் அதன் ஒரு துளிகூட வீணாகாது.”

“இந்திய சாதியமைப்பைப் பற்றிய மனநிலைகளை இன்னும் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டிய காலம் வந்துவிட்டது என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதை பிராமணர் உருவாக்கிய சதிவேலை என்று நம்பும் வெறுப்புவாத மூடநம்பிக்கையை படித்தவர்களாவது கைவிட வேண்டும். அது இந்தியப்பழங்குடி வாழ்க்கையில் இருந்து பலநூற்றாண்டுகளாக உருவாகி வந்த ஒரு பேரமைப்பு. முரண்பாடுகள் பரஸ்பர ஆதிக்கம் ஆகியவை ஒருபக்கம். அது எந்த சமூகப்பிரிவினையும் தவிர்க்க முடியாமல் உருவாக்கும் விளைவுதான். ஆனால் மறுபக்கம் கலைகளையும் தொழில்களையும் சார்ந்த உள்ளார்ந்த ஞானத்தையும் அனுபவ அறிவையும் பாரம்பரியமாகக் கொண்டுசெல்லுதல்; போரிடும் தன்மை, வணிகபுத்தி போன்ற பிறவிப்பண்புகளை முன்னெடுத்துச் செல்லுதல், ஒருங்கிணைந்து பெரும் அமைப்புகளில் உருவாக்குவதற்கானவை இயல்பான பொது அடையாளமாக அமைதல் என ஜாதிக்கு பல சாதக அம்சங்களும் உண்டு.”


“நாம் வாழ விதிக்கப்பட்ட நிலம் ஒன்றே. கற்பனையோ நம்மை விதவிதமான நிலங்களில் முடிவிலா வாழ்க்கைகளை வாழச்செய்கிறது. பயணத்தில் ஒவ்வொரு மண்ணிலும் ஒரு கணம் வாழ்ந்தபடியே நாம் செல்கிறோம்.”

“காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.”

“எல்லா கலையும் அப்பு சொன்ன வரியையே மீண்டும், மீண்டும் சொல்கின்றன: ‘தெய்வம் உண்டு.”

“காமத்தை வெல்பவன் மட்டுமே அகங்காரத்தை வெல்லமுடியும். உலகம் மீது பரவி அதை மறைக்கும் அகங்காரத்தையும் வென்றவனாலேயே உலகை உண்மையில் அறியமுடியும். ’தன்னுடைய உண்மை’க்குப் பதிலாக ’உண்மை’யை அவனால்தான் அறிய முடியும். ஆகவேதான் காமத்தை வெல்லுதல் ஞானத்தின் முதலடியாக எல்லா மரபுகளிலும் சொல்லப்படுகிறது.”

“மனித மனம் என்பது பெரும்பாலும் சூழல்களின் சிருஷ்டி. உடல் என்ற மனிதனால் அறியமுடியாத அமைப்பின் ஒரு பகுதியே மனம் என்பது”

“தொலைக்காட்சி நமக்குத் தெரிவுகளை அளிப்பதில்லை. அது அளிப்பதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது. சிந்திக்கவிடாமல் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை அடித்துச்செல்லும் தன்மை கொண்டது”

“நாயில் நன்றியாக, பறவையில் வேகமாக, பாம்பில் விஷமாக, மரத்தில் உயிராற்றலாக, அலைகடலில் கொந்தளிப்பாக, அதிகாலையில் சிவப்பாக, இரவில் இருளாகத் தெரிவதெல்லாமே பிரம்மம்தான். எல்லாமே தெய்வம்தான்.”

“நான் நினைவறிந்த நாள் முதலே என் விழிகள் எட்டும் தொலைவுக்கு அப்பாலுள்ளவற்றை கற்பனையில் கண்டுகொண்டிருந்தவன்”

“இந்தியாவில் ஒருபோதும் பிரிவினைவாதம் பேசக்கூடாதவர்கள் தமிழர்களே. அது பிற மாநிலங்களில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களை அடகு வைத்துச் செய்யப்படும் அதிகாரச் சூதாட்டம்.”

எழுதியவர் : jஜெயமோகன் (9-May-19, 7:30 pm)
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே