வெற்றிபெற ஒடும் பரிக்குமிக ஊட்டார் உழுபரிக்கே போடுவார் - புலவர் நிலை, தருமதீபிகை 223

நேரிசை வெண்பா

கற்றார் வயிறொட்டக் கண்டவெலாம் தின்றுகொழுத்(து)
உற்றார் பிறரென்(று) உளையற்க - வெற்றிபெற
ஒடும் பரிக்குமிக ஊட்டார் உழுபரிக்கே
போடுவார் எல்லாம் புக. 223

- புலவர் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கற்ற புலவர்கள் வறுமையால் வாடி வயிறு காய, மற்றவர் தின்று கொழுத்துத் தொந்தி பெருத்துள்ளாரே என்று வருந்தலாகாது; வெற்றிபெற ஓடும் பந்தயக்குதிரைக்கு அதிகம் ஊட்டார்; உழுகின்ற குதிரைகளுக்கே எல்லாவற்றையும் அள்ளிப் போடுவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கலைவாணரை, அவரது நிலைமைகளை நினைந்து தெளிய பந்தயக் குதிரையோடு ஒப்பவைத்தது.

எல்லாரும் வியந்து நோக்க வல்லாண்மை புரிவது; வெல்லாண்மை யுடையது; காட்சியின்பம் தருவது; மாட்சிகள் நிறைந்தது; மங்கலமானது; கம்பீரம் வாய்ந்தது; கதி வேகங்கள் தோய்ந்ததாதலால் உத்தமக் கலைஞருக்கு அது ஒப்பாய் வந்தது. அதன் பீடும் தொழிலும் பெருமிதமும் கருதி வெற்றி பெற ஓடும்பரி என்றது. பரி – குதிரை

உழுதல், வண்டியிழுத்தல், சுமை எடுத்தல் முதலிய முரட்டுத் தொழில்களைச் செய்கின்ற சண்டிக் குதிரைகள் கண்டவற்றையெல்லாம் தின்று வயிறு பெருத்திருக்கும்; அவை விரைந்து செல்லாது; பந்தயக்குதிரை அதிவேகமாய் ஓடவுரியதாதலால், உடல் சழியாதபடி உயர்ந்த உணவை அளவாக ஊட்டி அதனை உடையவர் பேணி வருவர். அதுபோல் காண்தகைய இன்பம் தருகின்ற புலவரை ஆண்டவன் அவ்வாறு ஆதரித்து வருகிறான்.

உழவு, வாணிகம் முதலிய உலகக் தொழில்களில் மண்டியுள்ளவரினும், புலமைத் தொழிலில் தோய்ந்துள்ளவர் வளம் குறைந்துள்ளமையை நினைந்து உளங்கரைந்து அதற்கு ஓர் நலம் புனைந்து இது நவின்றுள்ளது.

ஒன்றும் படியாதவர் எல்லாச் செல்வங்களையும் அடைந்து உண்டு களித்து உல்லாச நிலைகளில் உலாவித் திரிகின்றார்; எல்லாம் படித்துப் பெரிய புலவனாயிருந்தும் வறுமையில் வாடுகின்றேனே! இது என்னே! என மறுகி மயங்கிய ஒரு புலவனை நோக்கி அறிவு கூறி ஆறுதல் செய்தபடியிது.

பாலை நெருப்பில் காய்ச்ச அது மேலும் சுவை. ஆதல்போல், வறுமையால் காயப் புலமையில் பெருமையும், இனிமையும் பெருகி எழுகின்றன.

எவரையும் தாழ்த்தவல்ல வறுமை புலவரிடம் தனது நிலைமை குலைந்து இழிகின்றது. அவரது மனநிலையும் பெருமிதமும் அளவிடலரியனவாய் உளமகிழ்வு தருகின்றன.

பதினான்கு சீர் நெடுங் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா //
விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளத்திற்குப் பதிலாகச் சில இடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

இந்திரன் கலையாய் என்மருங்(கு) இருந்தான்:
அக்கினி உதரம்விட்(டு) அகலான்:
எமன்எனைக் கருதான் அரன்எனக் கருதி;
நிருதிவந்(து) என்னையென் செய்வான்?

அந்தமாம் வருணன் இருகண்விட்(டு) அகலான்:
அகத்தினில் மக்களும் யானும்
அகிலம தாகும் அமுதினைக் கொள்வோம்;
யார்எதிர் எமக்குளார் உலகில்?

சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத்
தரித்திர ராசனை வணங்கித்
தலைசெயும் எம்மை நிலைசெய்சற் கீர்த்திச்
சாளுவ கோப்பையன் உதவும்

மந்தர புயத்தான் திப்பைய ராயன்
மகிழ்வொடு விலையிலா அன்னோன்
வாக்கினால் குபேரன் ஆக்கினான் அவனே
மாசிலீ சானபூ பதியே. - சொக்கநாதப் புலவர்

இந்தக் கவியைப் படித்துப் பாருங்கள். வறுமையில் வாடிய புலவர் பாடிய பாடல் இது. அட்ட திக்குப் பாலகர்களும் தன்னைச் சூழ்ந்திருக்கத் தான் தலைமையுடன் வாழ்ந்திருப்பதாகத் தன் நிலைமையை மகிழ்ந்து கூறியிருக்கிறார்.

தான் உடுத்தியிருந்த ஆடை ஆயிரம் பொள்ளல் உடையது என்பார் ’இந்திரன் கலையாய் என் மருங்கு இருந்தான்' என்றார், வயிற்றில் எப்பொழுதும் பசித்தீ இருந்தது என்பார் ’அக்கினி உதரம் விட்டு அகலான்' என்றார். உதரம் - வயிறு.

இந்த வறுமையில் இருப்பதை விட நான் இறந்து போவது நல்லது; ஆனால் எமன் என்னிடம் வர அஞ்சி ஒதுங்கினான்; சடைத் தலையும் புழுதி படிந்த மெய்யுமாகிய எனது நிலைமையைக் கண்டு ’இவன் சிவனோ?' என்று பயந்து அந்தகன் சிந்தை நடுங்கிப் போனான்.

வருணன் என்றது கண்ணீர் நிலைமையைச் சுட்டியது. வீட்டில் மனைவியும் மக்களும் நானும் பட்டினி கிடந்தோம் என்பதை அநிலம் ஆகிய அமுதத்தைப் புசித்தோம் என்றார். அநிலம் - காற்று, ’இந்திரன் முதலிய யாவரும் அருகமர்த்து ஏவல் புரிய இனிதமர்ந்துள்ளோம்; எமக்கு நிகர் இந்த உலகில் யார் உளர்?' எனப் புலவர் சிந்தை மகிழ்ந்து பாடியிருக்கும் விந்தை வியந்து நோக்கத்தக்கது.

இந்தவாறு வறிய நிலையில் இருந்த இவரைத் திப்பையராயன் என்னும் வள்ளல் அரிய பெரிய செல்வங்களைக் கொடுத்து.ஆதரித்தருளினான். தமக்குக் குபேர சம்பத்தைத் தந்தமையால் அவனை ஈசன் என வாழ்த்தித் தமது நன்றியறிவை வெளிப்படுத்திப் புலமை நிலையை உலகம் அறியச் செய்திருக்கிறார்.

வறுமைத் துயரிலும் பசிக்கொடுமையிலும் புலவர்கள் பட்டிருக்கும் பாடும், அந்நிலைமையிலும் தம் தலைமை குன்றாமல் நின்றிருக்கும் மேன்மையும், உலகம் இன்புறப் புலமையின் சுவையை உதவியிருக்கும் பான்மையும் உணர உணர உள்ளம் தளர்கின்றது; உணர்வு கிளர்கின்றது; உவகை வளர்கின்றது.

நேரிசை வெண்பா

சென்னபுரி வந்து சிவனாயி னேன்நல்ல
அன்னமது காணா தவனாகி - மன்னுசிரங்
கைக்கொண்(டு) அரைச்சோமன் கட்டிச் சடைமுறுக்கி
மெய்க்கொண்ட நீறணிந்து மே. – இராம கவிராயர்

இவர் சென்னைக்குச் சென்றிருந்தார்; அங்கே ஆதரிப்பாரின்றி வறுமையால் வருந்தினார். அந்நிலைமையை இப்படி வருணித்திருக்கிறார். பசியில் விளைந்த பட்டினிப் பாட்டு இது.

நல்ல உணவு இல்லாமல், சிரங்கு படிந்து, பாதியாய்க் கிழிந்த உடை புனைந்து, சடை பிடித்த தலையும், புழுயளைந்த உடலுமாய் அவலமடைந்திருந்தமையை இதனால் அறிகின்றோம்.

இந்த எளிய நிலைமையிலிருந்து கொண்டு நான் முழுமுதற் கடவுளானேன் என்று உல்லாசமாய் இவர் உளம் மகிழ்ந்து பாடியிருப்பது நமக்கு எவ்வளவு வியப்பைத் தருகின்றது!

அன்னம் என்றது அன்னவடிவமான பிரமனையும், சோற்றையும் குறித்தது. அவன் சிரம் கைக்கொண்டான்; நான் சிரங்கைக் கைக்கொண்டேன்; அவன் பாதி மதியான்; நான் பாதி உடையேன் என இன்னவாறே ஐந்து ஒப்புமைகளை இணைத்து வைத்துத் தானும் சிவனும் சமம் எனச் சிலேடையில் அமைத்திருக்கிறார். அல்லல் நிலையிலும் இவரது உள்ளத்தின் செம்மையும், உணர்வின் தன்மையும், உரையின் சுவையும் உணர வந்தன.

ஒரு ஆடை அன்றி, மறு உடையில்லாத ஏழைப்புலவர்; ஒரு நாள் நதியில் குளிக்கச் சென்றார். சிறிய துண்டு ஒன்றை உடுத்திக்கொண்டு பெரிய உடையைச் சீடனிடம் கொடுத்துத் துவைக்கச் சொன்னார். அவன் துவைத்தான். ஆற்றில் வெள்ளம் அதிகமாய் இருந்தமையால் அதனை ஈர்த்துப் போயது. பையன் பயந்து, ஐயோ வேட்டி போய் விட்டதே! என்றான். அப்பொழுது அப்புலவர் வாயிலிருந்து வந்த பாட்டு இது:

நேரிசை வெண்பா

அப்பிலே தோய்த்திட்(டு) அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ - இப்புவியில்
இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை. - ஒப்பிலாமணி

அப்பு – கண்ணிர், கலிங்கம் – ஆடை; புலவர்களுடைய மனநிலையும் அமைதியும் பெருந்தகைமையும் அவர் தம் வாய்மொழிகளால் வெளியாகின்றன; தம் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சிகளைக் கவிஞர் சொல்லும் பொழுது அவை அறிவு மணம் கமழ்ந்து இனிய சுவை பெருகி வருகின்றன. மேல்வந்துள்ள குறிப்புக்களால் கல்வியாளாரது செல்வநிலை இ்ரங்கத்தக்கதாக இருந்துள்ளது தெரிகிறது.

The poet’s poverty is a standing topic of contempt. -Goldsmith

’கவிஞர் வறுமை இகழ்ந்து பேசுதற்கு ஒர் பரிகாச நிலையமாயுள்ளது’ என ஆங்கிலக் கவிஞர் கோல்டுஸ்மித் வருந்தி மொழிந்திருக்கிறார்.

கற்றவர் வறுமையுறினும் யாண்டும் பெருமையுடையராய் உலகம் உவந்து கொண்டாட அவர் உயர்ந்து விளங்குகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-19, 6:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே