தேர்தல்

துவங்கியது தேர்தல் வேட்டை
சிறிய மீனை போட்டு
பெரிய மீனை பிடிக்கும்
ஜாலக்காரர்களின் அற்புத வேட்டை

ரூபாயில் ஆசை காட்டி
கோடியில் வாழ துடிக்கும்
பேராசைக்காரர்களின்
வேட்டை துவங்கியது

அரசியல் பிழைத்தோருக்கு
அறம் கூற்றாகும் என்பார்கள்
இங்கே அறத்தினை அழித்தவனே
அரசியலில் பிழைக்கின்றான்

பகுத்தறிவை கையில் எடுத்தார்கள்
நமக்கும் சேர்த்து அவர்களே சிந்தித்தார்கள்
நம்மை சிந்திக்க விடாமல் வைத்திருப்பது தான் பகுத்தறிவோ

இங்கே பகுத்தறிவு தூண்டபடவில்லை
அழிக்கப்படுகிறது


தூக்கி எறியப்படும் ரூபாய் நோட்டுகளில்
மறைத்து வைத்துள்ளனர் ஓட்டுக்களை
சாமானிய மக்கள்

சில்லறைக்கு ஆசை பட்டு
கல்லறைக்கு வழி செய்கின்றனர்

மாணவன் முதல் மீனவன் வரை
மாண்டவர்கள் ஆயிரம்
மண்ணை காப்பவனே
நம்மையும் காப்பான்

சொல்வதை செய்வோம் என்றார்கள் - ஆனால்
சொல்லும்படியாக செய்தது யாதும் இல்லை

தமிழனை ஆள
தமிழை கையில் எடுத்தார்கள் சிலர்
அதில் வெற்றியும் பெற்றார்கள்

வந்தாரை வாழ வைக்கும் தமிழனுக்கு
தன் வாழ்வை இழந்து கொண்டிருப்பது தெரியவில்லை

காமராஜரையே தோற்கடித்தவர்கள் தானே நாம்

சிக்கி கொண்டோம்
இலவசம் என்னும் பேராழிக்குள்
மீள்வதும் எளிதல்ல
மகிழ்ச்சியாய் வாழ்வதும் எளிதல்ல

விற்க படுவது ஓட்டுகள் மட்டுமல்ல
வாழ்வும் தான் என்பதை
உணராத வரையில்
அறத்தினை புறம் தள்ளி
ஆண்டு கொண்டு தான் இருப்பார்கள்
அடிமைகளாக்கி

சிந்தித்து வாக்களிப்பீர்
வாக்குகளில் வாழ்வை இழக்காமல் இருக்க

எழுதியவர் : ரஞ்சித் வாசு (28-May-19, 5:09 pm)
சேர்த்தது : Ranjith Vasu
Tanglish : therthal
பார்வை : 2047

மேலே