இணைவிழைச்சு 4 – விருத்தக் கலித்துறை - வளையாபதி 29

விருத்தக் கலித்துறை

நக்கே விலாஇறு வர்;நாணுவர்; நாணும் வேண்டார்;
புக்கே கிடப்பர்; கனவும்நினை கையும் ஏற்பர்;
துற்றூண் மறப்பர்; அழுவர்;நனி துஞ்சல் இல்லார்;
நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்பம் ஆக்கும். 29 வளையாபதி

பொருளுரை:

காமுகரின் இழிசெயலைக் கண்டு தம் குற்றங்களை நோக்காத தீக்குணம் கொண்ட கயவர்கள் தம் விலா எலும்பு நொறுங்க விழுந்து விழுந்து சிரிப்பர்.

ஆனால், சான்றோர் காமுகரின் இழிசெயலைக் கண்டு தாமும் அவர்பொருட்டு வெட்கித்து நாணுவர்.

மற்றபடி, அக் காமுகரோ நாணத்தை ஒரு பொருளாகக் கருதாது கைவிட்டொழிவர்.

நாளெல்லாம் கற்பில்லா அம்மகளிர் இல்லத்தே புகுந்து அவ்விடத்தேயே சோம்பித் துயின்று கிடப்பர்.

அத்துயிலினூடும் மன அமைதியின்றிக் கனாக் காண்பதையும் துயில் கலைந்த பொழுது அம்மகளிரை நினைப்பதையுமே தொழிலாகக் கொள்பவராவர்.

உண்ணும் உணவினையும் மறந்தொழிவர்.

கற்பில்லா அம்மகளிரால் கைவிடப்பட்டால் அழுது நிற்பர்.

நன்கு உறங்குவதும் இலராவார்.

இவ்வாறு அம்மகளிருடைய அழகிய தோள்கள் நாட்டிலுள்ள மக்கள் எல்லாம் கண்கூடாகக் காணத்தகுந்த மாபெருந் துன்பத்தை அக் காமுகருக்கு உண்டாக்கும்.

ஆதலால் அம்மகளிர் கேண்மை கைவிட வேண்டும் என்பதாகும்.

விளக்கம்:

காமுகக் கயவருடைய இழிசெயலைக் கண்டபொழுது, தம் குற்றங்களை நோக்காக் தீக்குணம் கொண்ட கயமாக்கள் விலா நொறுங்க விழுந்து விழுந்து சிரிப்பர்;

பிறர் குற்றங்களையும் தம் குற்றம் போல் கருதும் சான்றோரோ நாணமெய்துவர்.

பிறரை எள்ளி விலாவிறச் சிரிப்பர் என்பதனால், கயமாக்கள் என்பதும்,

நாணுவர் என்றதனால், சான்றோர் என்பதும்,

நாணும் வேண்டார் என்பதனால் காமுகர் என்பதும் கருத்தாகும்.

கயமாக்கள் தாம் பழியுடையராய் இருந்தாலும், பிறர்பழி கேட்டபொழுது நகைத்து நாடறியச் செய்யும் இயல்புடையர் என்பதனை,

அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க்(கு) உய்த்துரைக்க லான். குறள் 1076 கயமை

பொருள்: கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை போன்றவர்.

என்பதனானும்,

சான்றோர் பிறர் பழியைத் தம் பழிபோற் கருதி நாணுவர் என்பதனை,

பிறர்பழியுந் தம்பழியும் நாணுவர் நாணுக்(கு)
உறைபதி என்னும் உலகு. குறள் 1015 நாணுடைமை

பொருள்:

பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

என்பதனாலும் அறியலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-19, 6:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே