இணைவிழைச்சு 3 – விருத்தக் கலித்துறை - வளையாபதி 28

விருத்தக் கலித்துறை

மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும்
பூவென் றெருக்கி னிணர்சூடுப புன்மை கொண்டே
பேயென் யெழுந்து பிறரார்ப்பவு நிற்பர் காம
நோய்நன் கெழுந்து நனிகாழ்க்கொ(ள்)வ தாயி னக்கால். 28 வளையாபதி

பொருளுரை:

மாந்தர்க்குக் காமப்பிணி நன்றாகத் தோன்றி மிகவும் முதிர்ந்து துன்புறுத்தும் பொழுது, குதிரை என்று கூறிக்கொண்டு பனைமடலாலே குதிரை உருவம் செய்து நாணம் விட்டுப் பலரும் காண அதன்மேல் ஏறி நிற்பர்;

மணமாலை என்று கூறிக்கொண்டு எருக்கமலர் கொத்தினையும் சூடிக் கொள்வர்;

இத்தகைய இழிவு தரும் காரியங்களைச் செய்துகொண்டு, தம்மைக் காணும் பிறரெல்லாம் இது ஒரு பேயென்று கூறி எழுந்து ஆரவாரிக்கும்படி பனைமடலால் செய்யப்பட்ட பொய்யான குதிரையை ஊரிலுள்ள சிறுபிள்ளைகளால் இழுக்கப்பட்டு ஊர்மக்கள் இருக்கும் பொது இடங்களுக்கெல்லாம் அதனைக் கொண்டு சென்று ஊரவர் அறிய நிற்பர்.

இத்துணையும் செய்விக்கும் காமங் கண்டீர்! என்பதாம்.

விளக்கம்:

ஒரு தலைவன் தான் காமுற்ற தலைவியை மணந்து கொள்ள அவளுடைய சுற்றத்தார் முதலியோரால் இடையூறு நேரும் பொழுது இவ்வாறு மடலேறுதல் பண்டைக்காலத்து நம் தமிழகத்து நிகழ்ந்த நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சி இழிதகவுடையதாகலின், காமத்தின் இழிதகைமைக்கு இதனை இவ்வாசிரியர் குறிக்கின்றார். காமங் காழ்கொண்டவர் இங்ஙனம் மடன்மாவூரும் வழக்கம் உள்ளதை,

இனி இச் செய்யுளோடு,

மாவென மடலும் ஊர்ப் பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே.

எனவரும் குறுந்தொகைச் செய்யுள் (17) ஒப்பு நோக்கத் தக்கது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-19, 6:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே