கொல்லாமை - கலி விருத்தம் – வளையாபதி 34

சந்தக் கலி விருத்தம்
(காய் காய் காய் மா)

உலகுடன்வி ளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின்
நிலையி(ல்)கதி நான்கினிடை நின்றுதடு மாறும்
அலகிறுயர் அஞ்சினுயிர் அஞ்சவரும் வஞ்சக்
கொலையொழிமி னென்றுநனி கூறினர றிந்தார். 34 வளையாபதி

பொருளுரை:

மெய்யுணர்வுடைய சான்றோர் உலகினரை நோக்கி, நம் சொந்தங்களே!
நீங்கள் இவ்வுலகுள்ள வரையில் அதனோடு இணைந்து நிற்கும் உயரிய புகழோடு நின்று நிலவுதல் வேண்டுவீர்கள் என்றாலும் அல்லது நிலைதல் இல்லாத நால்வகைப் பிறப்பில் பிறந்து தடுமாறும் துன்புற்று நெஞ்சு தடுமாறுதற்குக் காரணமான எண்ணிறந்த துயரங்களை அஞ்சி சொர்க்கமாகிய வீடு பெற விரும்பினீர்களென்றாலும் உயிரினங்கள் பெரிதும் அஞ்சும்படி நிகழுகின்ற கொலைத் தொழிலை செய்யாது ஒழித்து விடுவீர்களாக என்று மிகவும் உறுதிபடக் கூறிப் போந்தனர். ஆதலால் கொலைவினையை ஒழிப்பீராக என அறிவுறுத்தப்படுகிறது.

கதி - பிறப்பு

விளக்கம்:

இம்மைப் பயனையும் வீடு பேற்றினையும் ஒரு சேர அளிக்கவல்லது கொல்லாமை என்னும் நல்லறம் ஒன்றேயாகும்; ஆதலால் எல்லோரும் அவ்வறத்தினைக் கடைப்பிடித் தொழுகுங்கள் எனப்படுகிறது.

கொல்லாமை என்னும் அறமே அறங்களிலெல்லாம் தலைசிறந்தது என்பதனையும் அவ்வறமே இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் வீடு பேற்றினையும் ஒரு சேரத் தரவல்லது என்பதனையும் திருக்குறளின் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர்,

அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். குறள் 321 கொல்லாமை

பொருளுரை:

அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்

எனவும்,

நல்லா றெனப்படுவ (தி)யாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி. குறள் 324 கொல்லாமை

பொருளுரை:

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்

எனவும் கூறுகிறார்.

இனி, கொல்லாமை என்னும் இவ்வறம் வீடுபேறும் நல்கும் என்பதனை அப் பொய்யில் புலவர்,

கொல்லாமை மேற்கொண்(டு) ஒழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா(து) உயிருண்ணுங் கூற்று. 326 கொல்லாமை

பொருளுரை:

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

எனவும் கூறுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-19, 2:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே