செல்வம் நிலையாமை 1 - கலி விருத்தம் – வளையாபதி 35

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங்
கள்வரென்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் உறுபொருளை யொட்டா(து) ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வம் இகப்பவோ. 35 வளையாபதி

பொருளுரை:

ஒருவர் சேர்க்கும் செல்வமானது வெள்ளம், மறதி, வெற்றியுடைய வேந்தர், நெருப்பு, தாயத்தார், கள்வர் என்று கூறப்படுகின்ற இந்த ஆறு வழிகளாலும் உடையவனது கையினின்றும் மறைவாக ஒழிந்து போகும் இயல்புடையதாகும்.

ஆதலால் உள்ளீடற்ற நமக்கு உதவாத பொய்யான பொருளாகிய செல்வத்தைப் பற்றாமல் துறந்த சான்றோர் பிறர் இகழ்வதற்குக் காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை நீங்கி வாழ்வர் எனப்படுகிறது.

வெள்ளம்:

சென்ற 2015 டிசம்பரில் (அனேகமாக ஒவ்வொரு வருட மழைக் காலங்களிலும்) சென்னையில் மழையினாலும், ஏரிகள் உடைப்பினாலும் ஏற்பட்ட இழப்பைக் கண்டோம்.

மறதி:

சாதாரணக் கண் கண்ணாடியென்றாலும், படிப்பதற்காக வைத்திருந்த கண் கண்ணாடியை இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் மறந்து வைத்து விட்டேன்; மீண்டும் வாங்க சுமார் 1000 ரூபாய் செலவு.

வேந்தர்:

அரசு வருமான வரியாகவும், மதுபானம் விற்பது வழியாகவும் மக்கள் சம்பாதிப்பதை சேமிக்க விடாமல், குடிபோதைக்கு ஆளாக்கி எடுத்து விடுகிறது.

நெருப்பு:

அங்கங்கே வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகள் பெரும் நட்டத்தை ஏற்படுத்துகின்றன.

தாயத்தார்;

தாயாதிக்காரர்களாகிய அண்ணன் தம்பிகள் வழக்கு, ஏமாற்றல் என்று எடுத்துக் கொள்கிறார்கள். (வழக்குச் செலவுகளும், வக்கீல்களின் வழக்காடு தொகையும்)

கள்வர்:

எங்கு பார்த்தாலும் வீடு, வங்கிகளில் கொள்ளை இவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்.

(சென்ற 2014 ல் இருதய அறுவை சிகிட்சை செய்தபின், காரைக்கால் விநாயக மருத்துவ மனையின் மருத்துவர் குடியிருப்பில் வசித்த நான் என் மனைவியின் 20 பவுன் நகைகளை வீட்டு நகைப்பெட்டியில் வைத்து விட்டு மூன்று மாதங்கள் ஓய்விற்காக மகன் வீட்டிற்கு இலண்டன் சென்றேன். குடியிருப்பிற்கு இரண்டு பாதுகாவலர்களும் உண்டு. திருடர்கள் எடுத்துச் சென்று விட்டனர். காவல் அதிகாரிடம் புகார் செய்தும் நகைகள் கிடைக்கவில்லை.

அடுத்து மதுரையில் 8 பவுன் நகைகள் மற்றும் இரண்டு பெரிய வெள்ளித் தட்டுகள் வைத்து விட்டுச் சென்னை சென்று, எதிர்பாராத விதமாக 21 நாட்கள் தங்க வேண்டியதாயிற்று. திருடு போய் விட்டது. புகாரளித்தும் கிடைக்க வில்லை. எங்கோ உள் குத்து இருக்கிறது.)

விளக்கம்:

பொருள் முயன்று ஈட்டிய போதும் நம்மை விட்டு அகலுதற்குப் பலவேறு வழிகளையும் உடைத்தாம். ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம். பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர் என்பதாகும்.

இனிச் செல்வம் நிலையாத் தன்மை உடைத்து என்பதனை,

அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல். 333 நிலையாமை

பொருளுரை:

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

என்று உணர்த்தப்படுகிறது.

எனவே செல்வத்தைச் சேர்த்து வைப்பதை விட, மகிழ்ச்சியாகச் செலவு செய்யுங்கள்; நான்கு பேரின் கல்விச் செலவு, பசியாற்றல், உறவினர்களை உபசரித்தல் என்று நற்காரியங்களைச் செய்யுங்கள் எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-19, 5:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

மேலே