ஒத்த மனிதர் உயர்வாக எண்ணுவது சித்தம் உயர்ந்த செயலே காண் - சீர்மை, தருமதீபிகை 309

நேரிசை வெண்பா

ஒத்த மனிதர் உயர்வாக எண்ணுவது
சித்தம் உயர்ந்த செயலேகாண் - சித்தம்
புனிதமாய்ப் பேணிப் புரந்து வருக
இனியசீர் எய்தும் இவண். 309

- சீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மக்கள் குழுவில் ஒருவனை உயர்ந்தவன் என எண்ணுவது அவனுடைய உள்ளத்தின் தகுதியை நோக்கியே ஆதலால் மனத்தைப் புனிதமாகப் போற்றிவரின் அரிய பல மேன்மைகள் உரிமையுடன் தாமாகவே விரைந்து வந்து சேரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உயர்ச்சி விளைகின்ற மூல நிலையை உணர்த்துகின்றது.

உருவத் தோற்றம் முதலிய பிறப்பு நிலைகளில் ஒரு நிகரனவாய் அமைந்துள்ள மனிதர் சில சிறப்பு நலங்களால் வேறுபாடு பெற்று மேன்மையான மகிமைகளை மேவியுள்ளனர்.

அங்ஙனம் உயர்ந்துள்ளமைக்குக் காரணம் அவருடைய உள்ளப் பண்பேயாம். புறத்தில் விரிந்துள்ள ஆடம்பரங்களால் ஒரு மனிதனுக்கு உண்மையான மதிப்பு வருவதில்லை. எண்ணத்தின் தூய்மை அளவே அவன் ஏற்றமாய் மதிக்கப்படுகின்றான். மனம் உயர மனிதன் உயர்கின்றான்.

பெரியோர், மேலோர் என்னும் புகழ்ச்சி மொழிகள் எல்லாம் உள்ளத்தின் பரிபக்குவங்களை நோக்கி எழுந்தன. பெருமை, மேன்மை என்னும் பண்புரிமைகளை மருவி வந்துள்ளமையான் அவர்தம் அருமையும் அமைதியும் அறியலாகும்.

'சித்தம் உயர்ந்த செயலே காண்’ என்றது உயர்ச்சியின் மூலகாரணத்தை உய்த்துணர வந்தது. உன் உள்ளத்தைத் தூய்மையாக்கு; உலகம் உன் கைவசமாகும். தூய்மையுள் எல்லா மகிமைகளும் தோய்ந்திருக்கின்றன. அது வர யாவும் வருகின்றன.

மனம் புனிதமாய் உயர்ந்த பொழுது மனிதன் மகான் ஆகின்றான். அது மலினமாய் இழிந்துபடின் அவன் இழிமகனாய்க் கழிந்து போகின்றான். பெருமையும், சிறுமையும், இன்பமும், துன்பமும் மனத்தின் நலம் தீங்குகளால் முறையே மருவி வருதலால் அதன் நிலைமையும் தலைமையும் நீர்மையும் அறியலாகும்.

கலி விருத்தம்

*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

நல்ல செய்து நரரை உயர்த்தவும்,
அல்ல செய்தங்(கு) அளற்றிடை ஆழ்ப்பவும்
வல்ல(து) இந்த மனமல(து) ஐயனே
இல்லை என்ன இயம்பும் மறைஎலாம். - பிரபுலிங்க லீலை

மனத்தின் ஆற்றலையும், அதனால் விளையும் ஏற்றத் தாழ்வுகளையும் இது உணர்த்துகிறது. அளறு – நரகம்; மனிதனை முத்தியில் உயர்த்தவும், நரகத்தில் தள்ளவும் மனம் வல்லதாயுள்ளது; அதனை நல்லதாக நயந்து பேணின், நலம் பல உளவாம்; இல்லையேல் அல்லலை விளைத்து அவகேடுகள் செய்து விடும்.

‘The mind is in its own place, and in itself
Can make a Heaven of Hell, or a Hell of Heaven’ – Paradise Lost, Milton.

’மனம் தன் நிலையில் நின்று கொண்டே சுவர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சுவர்க்கமாகவும் ஆக்க வல்லது’ என்று மில்டன் என்னும் ஆங்கிலக் கவி இங்ஙனம் கூறியுள்ளார்.

இத்தகைய அரிய மனத்தைப் புனிதமாக்கிக் கொண்டவன் எல்லா மகிமைகளையும் எளிதில் அடைகின்றான்.

சிறந்த சீர்மையாளனாய் நீ உயர்ந்து திகழ வேண்டின், உன் மனத்தில் யாதொரு தீங்கும் படியாமல் பாதுகாத்து அதனை நல்ல நீர்மையில் பேணி வரவேண்டும்.

இந்த உலக வாழ்க்கையை ’இவண்’ என்றது. இம்மையில் உளவாகும் புகழ் நலங்களை ’இவண் இனிய சீர் எய்தும்’ என்றது. இங்கே இனிய கீர்த்தியை அடைந்து, மறுமையில் அரிய இன்ப நலனையும் பெறுவான் என்றும், இருதயம் பண்புற இருமையும் இன்புறுகின்றான் என்றும் கவிராஜ பண்டிதர் கூறுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-19, 6:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே