பெருவுடையார் கோவில்

பள்ளிப்பாடத்தில்
பெயரொன்று படித்தேன்!
பிரகதீஸ்வரர் என்பதது!

பெருவுடையார் பிரகதீஸ்வரர்
ஆன கதை கேட்டுப்,
பெரு ஆவல் உள்ளத்தில்
நிலை கொண்டது!

வரலாறும் பிரம்மிக்கும்
பெருங்கோவில் வரலாறு
எனையும் இழுத்துக் கொண்டது
வியப்பலையில்!

பொன்னி பாயும்
பொன் தஞ்சை பூமியிலே
விண்ணலாவ உயர்ந்து
நிற்கும் கோவிலது!

அருள்மொழியின் அஸ்திவாரம்,
இன்றும் தாங்குகிறது;
அருந்தமிழின் பெரும்புகழை!

எண்ணாயிரம் எடைக்கல்லும்
உச்சி தொட,
உழைத்த கரி எத்தனையோ!
நினைத்தாலே விரிகிறது
நீளவிழி வியப்பில்!

தமிழ் எழுத்தை அளவுகளாய்
ஆக்குவித்தான்! சோழன்,
கோயில் சுவரெல்லாம்
பணியாளோர் பெயர் பொரித்தான்!

திரை கடந்த ராசராசன்
புகழ் வளர்ந்து, இன்றும்
கம்பீரக் காட்சியாக
பெரிய கோவில்!

பெருவுடையார் கோவில்தனில்
பாதம் பட்டால், என்றும்
பொன்னியின் செல்வர் தானே
மனம் துளிர்க்கும்!

எழுத்தாலும் எண்ணத்தாலும்
ரசித்த கோவில்;
இன்று
விழியாலும் உணர்வாலும்
ரசிக்கும் பயணம்!

"நெல்லாடிய நிலம் எங்கே?"
பாடல் கேட்டு,
தொல் தஞ்சை பூமியிலே
பாதம் தொட்டேன்!
எனையறியா விழித்துளிகள்
மண்ணைத் தொட்டன!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (14-Jul-19, 2:47 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 22

மேலே