கருணை அகத்தில் கனியின் உறுதி நலங்களவன் பாங்கு குவியும் - கருணை, தருமதீபிகை 413

நேரிசை வெண்பா

கருணை அகத்தில் கனியின் சகத்தில்
அருணன் எனவே அமர்ந்து - தெருணிலை
ஓங்கி உயர்வான் உறுதி நலங்களவன்
பாங்கு குவியும் பரிந்து. 413

- கருணை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன் உள்ளத்தில் அருள் கனியின் அவன் உலகத்தில் ஒரு இனிய சோதியாய் உயர்ந்து திகழ்வான்; அரிய உறுதி நலங்கள் யாவும் அவனிடம் எளிதே வந்து குவியும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உடல்களை மருவி உலாவுகின்ற உயிரினங்களுள் மனிதன் உயர் நிலையில் தலை சிறந்து நிலவுகின்றான். அறிவு நலங்களும் குண நீர்மைகளும் மனிதனுக்குத் தனி உரிமைகளாய் மருவி நிற்கின்றன. இனிய தன்மைகளை எய்தியுள்ள அளவு அவன் தனியே ஒளி சிறந்து திகழ்கின்றான். நல்ல நீர்மை இல்லையாயின் அவன் புல்லியனாய்ப் புலையுறுகின்றான்.

வெளியே வீசுகின்ற நல்ல வாசம் மலரின் மாண்பைக் காட்டுகின்றது; உள்ளே கனிந்துள்ள கருணைப் பண்பு மனிதனது மேன்மையை உணர்த்துகின்றது.

‘கருணை கனியின் அருணன்’ என்றது அருளால் விளையும் அதிசய மேன்மையை உணர்த்தி நின்றது. கனிதல் - இனிது விளைதல். அருணன் - சூரியன்.

மண்ணுலகில் மனித சாதியுள் கருணையுடையவன், விண்ணுலகில் தேவ இனத்துள் சூரியன் என ஒளிர்கின்றான் என்றது அருள் நிலையின் பொருள் உணர வந்தது.

உள்ளத்தில் அருள் கனிய உயிர் ஒளி பெறுகின்றது. கருணை நீர்மையால் புனிதம் அடையவே சீவான்மா பரமான்மாவின் இனிய இனமாய்த் தனி மகிமை அடைகின்றது.

கருணாகரன் என்பது கடவுளுக்கு ஒரு பெயர். அருளுக்குத் தனி நிலையமாய் உள்ளமையால் கருணைக் கடல் என இறைவன் யாண்டும் துதிக்க நின்றான். பிள்ளைகளிடம் பேரன்பு கொண்டுள்ள தாய்போல் சீவ கோடிகளிடம் பேரருளுடையனாய்ப் பரமன் பெருகியிருக்கிறான். கடவுளைக் குறித்து அறிஞர்கள் துதிக்கும் பொழுது அவனது கருணை நிலையையே கருதி உருகுகின்றனர்.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

அருளருவி வழிந்துவழிந்(து) ஒழுக ஓங்கும்
ஆனந்தத் தனிமலையே! அமல வேதப்
பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
பொலிகின்ற பரம்பொருளே! புரணம் ஆகி
இருளறுசிற் பிரகாச மயமாம் சுத்த
ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே!
தெருளளவும் உளமுழுதும் கலந்து கொண்டு
தித்திக்கும் செழுந்தேனே! தேவ தேவே! 1

எண்சீர் விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

அருள்விளக்கே அருட்சுடரே! அருட்சோதிச் சிவமே!
அருளமுதே! அருள்நிறைவே! அருள்வடிவப் பொருளே!
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே!
என்அறிவே! என்உயிரே! எனக்கினிய உறவே!
மருள்கடிந்த மாமணியே! மாற்றறியாப் பொன்னே!
மன்றி’ல்’நடம் புரிகின்ற மணவாளா! எனக்கே
தெருளளித்த திருவாளா! ஞானவுரு வாளா!
தெய்வநடத்(து) அரசே!நான் செய்மொழிஏற் றருளே! 2 அருட்பா

கடவுள் அருள் வடிவினர் என அன்பு கனிந்து வந்துள்ள இந்தப் பாசுரங்களை இங்கே ஓர்ந்து சிந்திக்க வேண்டும். தேவனை நினைந்துருகி வெளி வருகின்ற மொழிகள் சீவ ஒளிகளாய் மேவி மிளிர்கின்றன. அரிய பல உண்மைகளை அவை தெளிவுறுத்துகின்றன. தெய்வ நிலை தெளிந்த அளவு உய்தி நலம் விளைந்து வருகின்றது.

பரமன் கருணை, நீர்மையனாயுள்ளமையான் அதனையுடையவர் அவனது உரிய உறவினமாய் அரிய ஒளி பெறுகின்றனர்.

’உறுதி நலங்கள் அவன் பாங்கு குவியும்’. தன் நெஞ்சில் தயை கனியின் அந்த மனிதனுடைய நினைவு, சொல், செயல் எல்லாம் யாண்டும் இதமாய் இனிமை சுரந்தே வருதலால் தரும நலங்கள் யாவும் அவனிடம பெருகி நிறையும்; அதனால், அவன் ஒரு தரும தேவதையாய் ஒளி சிறந்து திகழ்வான். அருள் வளர அறம் வளர்கின்றது.

நதிகளின் நீர் கடலை அடைந்து பெருகுதல் போல் புண்ணிய போகங்கள் எல்லாம் கருணையில் வந்து நிறைந்து நிற்கின்றன. தருமநிலையமாய் உள்ளமையால் கருணையை இறைவன் உருவமாகக் கவிகள் வருணனை செய்ய நேர்ந்தனர்.

யாரும் யாதும் அறிய முடியாத அரிய பரமன் எவரும் எளிது காண வெளியே உருவம் மருவி வருவது கருணையால் ஆதலின் அது கருணையுருவம் என வந்தது.

'அறிவுக்(கு) அறிவாகி அவ்வறிக்(கு) எட்டா
நெறியிற் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக் 23

கருணைத் திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென் றோர்திருப்பேர் கொண்டு. 24

தெள்ளு திரைகொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசில் வீற்றிருந்து 95 - கந்தர் கலி வெண்பா

தண்ணளி பொங்கிய கருணா நிதியே!
கருணை கொழித்த பெருக்காறே! - முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்

என்உளம் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும்
கள்ளவிழ் குழல்சேர் கருணை எம்பெருமான். - கல்லாடம்

கருணைக்கும் இறைவனுக்கும் உள்ள உரிமையை நூல்கள் இவ்வாறு உணர்த்தி வருகின்றன. கருணை இங்ஙனம் கடவுள் என மருவியுள்ளமையால் அந்நீர்மையையுடையவரது நிலைமையும் தலைமையும் நேரே தெரியலாகும்.

தனது உள்ளம் தயையால் உருகுமாயின் அந்த மனித சன்மம் மிகவும் புனிதமுடையது; புண்ணிய பரிபாகம் எய்தியது என மேலோரால் எண்ணி மதிக்கப்படுகின்றது.

உயிர்க்கு இனிய உறுதி நலங்கள் எல்லாம் அருளால் உளவாகின்றன; அந்த அரிய சீவ அமுதத்தை யாண்டும் உரிமையாகப் பேணி ஒழுகி உயர் கதி காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-19, 3:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

மேலே