அமைதியுளம் மேவினோ மேவாதது இல் - அமைதி, தருமதீபிகை 403

நேரிசை வெண்பா

எய்திய வாழ்வு இனிய அமைதியேல்
தெய்வ நிலையமாய்த் தேசுமிகும் - உய்திநலம்
யாவும் அதன்கண் அமையும் அமைதியுளம்
மேவினோ மேவாத(து) இல். 403

- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தனக்கு அமைந்த வாழ்வு நல்ல அமைதி உடையதாயின் தெய்வ நிலையமாய் அது சிறந்து விளங்கும்; உய்திகள் யாவும் அதன்கண் உளவாம்; அந்தச் சாந்த வாழ்க்கையை அடைந்தவன் அடையாதன யாதும் இல்லை என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனித வாழ்க்கை பலவகைத் தொடர்புகளோடு படர்ந்துள்ளது. எவ்வழியும் இடர்கள் நீங்கி இனிது வாழ்வதையே எவரும் விரும்பி வருகின்றனர்.

மனைவி, மனை, பொருள் முதலியன வாழ்வின் அனுகூல சாதனங்களாய் அமைந்துள்ளன. புறத்தே எவ்வளவு வசதிகள் வாய்த்திருந்தாலும் அகத்தே இனிய அமைதி இல்லையாயின் யாவும் துனிகளாய்த் தோன்றி நிற்கும்; யாதும் இலனாயினும் மன அமைதியாளன் எல்லாம் உடையனாய் இன்பம் மிகப் பெறுகின்றான்.

சுகம் புறப்பொருள்களில் இல்லை; அகத் திருவாகிய அமைதியில் அமைந்துள்ளது. பண்பு படிந்த மனம் இன்ப நிலையமாகின்றது; அது படியாதது துன்ப இருள் சூழ்ந்து கொடிதாய் இழிகின்றது. மோன இதயம் முத்தி உதயம் ஆகும்.

பல கோடிப் பொருள்கள் வெளியே புடை சூழ்ந்திருப்பினும் தன் உள்ளத்தில் நிம்மதி இல்லையானால் அந்த மனிதனுடைய வாழ்க்கை பரிதாபம் ஆகின்றது. ஆகவே மன அமைதியின் மகிமையை உணர்ந்து கொள்கின்றோம்.

எய்திய வாழ்வு இனிய அமைதியேல்
தெய்வ நிலையமாய்த் தேசுமிகும்.

என்றது கையகமாய் வந்த வையக வாழ்வின் வகையைத் தொகையாக உணர்த்தி நின்றது. சக வாழ்வு புண்ணியத்தால் அமைகின்றது. புண்ணியம் நல்ல எண்ணங்களால் உளவாகின்றது. அந்த எண்ணங்கள் மனத்திலிருந்து விளைகின்றன. தரும விளைவுக்குக் தனி மூலமான மனம் இனிய அமைதியுடையதாயின் எல்லா இன்ப நலங்களும் அங்கே பொங்கி வந்து குவிகின்றன.

கிடைத்ததைக் கொண்டு தன் வாழ்வைச் சாந்தமாக நடத்துகின்றவன் மாந்தருள்ளே தெய்வமாய் இந்த உலகத்திலேயே சுவர்க்க நிலையைக் காண்கின்றான்.

அதி மேதையான திருவள்ளுவப் பெருந்தகையின் தினசரி வரவு ஒரு பணமே. அது கொண்டு சீர்மை நீர்மைகளோடு தம் வாழ்க்கையை நேர்மையாக அவர் இனிது நடத்தினார். பொருள் வளம் குறைந்திருப்பினும் அவ்வாழ்வு அருள் வளம் நிறைந்து எவ்வழியும் இனிமையும் இதமும் சுரந்து, புனிதமும் புலமையும் பொலிந்து, அருமையும் பெருமையும் அமைந்து, மானமும் ஞானமும் மருவித் தானமும் தவமும் கனிந்து, மதிப்பும் மாண்பும் விளைந்து, அறநலங்கள் மிளிர்ந்து, புகழ் மணங் கமழ்ந்து எங்கும் உயர் நிலையில் ஒளி மிகுந்து நின்றது. அவருடைய விழுமிய மொழிகள் மனித சமுதாயத்திற்கு வழிவழியே தெளிவருளி வருகின்றன. உறுதி உண்மைகளை உலகம் உவந்து கொள்கின்றது.

பெரிய அரச திருவினாலும் அடைய முடியாத இனிய வாழ்வை வள்ளுவர் எய்தியிருந்தது அவரது புனிதமான மன அமைதியினாலேயாம்.

பெரும் பொருளுடையராய் மாட மாளிகைகளில் உள்ளவரும் மன அமைதியின்மையால் அவலக் கவலைகளில் ஆழ்ந்து அல்லல்களில் வீழ்ந்து அலமந்து உழலுகின்றனர்.

இனிய வாழ்வு செல்வத்தில் இல்லை; உள்ளத்தில் உள்ளது என்பதை உலகம் அறிய இவர் உணர்த்தி நிற்கின்றனர்.

’போதும் என்ற மனமே பொன் மனம்’ என்னும் பழமொழி அரிய உண்மையை மருவி அறிவு போதித்துள்ளது.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே
அல்கா நல்குரவு அவாஎனப் படுமே. (குமரகுருபரர்) என்னும் இது இங்கே நன்கு சிந்தனை செய்யத்தக்கது.

Poor and content is rich. - Othello, 3-3

வறியனாயினும் மன நிறைவுடையவன் பெரிய செல்வனே' என மேல் நாட்டுக் கவிஞரும் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

சித்த சாந்தியுடையவன் தனது வாழ்வை அழகிய பூஞ்சோலைபோல் இனிமை செய்து கொள்கிறான். அந்த மனப்பண்பு இல்லாதவன் கொடிய காடாகத் தன் வாழ்க்கையைக் கடினம் ஆக்கி எவ்வழியும் மிடியனாய் அவலமடைந்து நிற்கின்றான்.

உள்ளத்தில் வீணாக நசை மண்டிய பொழுது பசி கொண்ட நாயும், வெறி கொண்ட பேயும் போல் ஆவலாய் மனிதன் அலமந்து திரிய நேரவே அவன் வாழ்வு கோரமாகின்றது.

Some have too much, yet still do crave!
I little have, and seek no more.
They are but poor, though much they have;
And I am rich with little store.
They poor, I rich; they beg, I give;
They lack, I leave; they pine, I live. - Sir Edward Dyer

'செல்வம் மிகுந்துள்ளவர் மேலும் அவாவித் திரிகின்றார், எனக்கு ஒன்றும் இல்லை; ஆயினும் நான் எதையும் விரும்பேன்; பொருள் நிறைந்திருந்தும்.அவர் ஏழைகளே; யாதும் இலனாயினும் நான் செல்வன்; அவர் இழிந்த வறியர்; நான் உயர்ந்த பாக்கியவான்; அவர் அலமந்து யாசிக்கின்றார்; நான் உவந்து கொடுக்கின்றேன்; அவர் குறையுடையராய் அலைகின்றார், நான் நிறைவுடன் நிற்கின்றேன்; அவர் பதைத்துப் பரிதபித்து உழல்கின்றார்; நான் பதைக்காமல் இனிது வாழ்கின்றேன்' என சர் எட்வர்டு டயர் என்பவர் இங்ஙனம் பாடியிருக்கிறார்.

இற்றைக்கு முந்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் எலிசபெத் ஆட்சியில் உயர்ந்த பதவியில் இருந்தவர். திருப்தியான மன அமைதியைக் குறித்து இவ்வாறு கூறியிருத்தலால் அவரது உள்ளப் பண்பையும் உணர்வு நிலையையும் நாம் இங்கே உணர்ந்து மகிழ்கின்றோம்.

’அமைந்தது கொண்டு அமைதியாய் வாழ்’ என்றால்’ யாதும் முயலாமல் மடி மண்டியிரு என்றதாகப் பொருள் கண்டு கொள்ளாதே; பேராசையால் நெஞ்சைப் பஞ்சரிக்காதே என்பதாம்.

உள்ளம் அமைதியுறின் உறுதி நலங்கள் பல உளவாகின்றன. புனிதமான அந்தப் பாக்கியத்தை அடைய மனிதன் இனிமையாகத் தன்னைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-19, 3:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே