நானும் ஒரு பாடகன்

நானும் ஒரு பாடகன்

தொலைக்காட்சிகளிலெல்லாம் “பாட்டுக்கு பாட்டு”, “பாட்டுக்கு வேட்டு” என்று பல நிகழ்ச்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வலம் வந்த பின்னால் பலருக்கும் தாங்களும் ஒரு ‘பாடகராய்’ ஆகி விடலாம் என்னும் நம்பிக்கை வந்து விட்டது.
அதுவும் தங்களை புகழ் பெற்ற பாடகர்கள் அமந்து நடுவர்களாய் கவனித்து கொண்டிருக்க, அங்கு பாடி கொண்டிருக்கும் குழந்தைகளை போலவோ அல்லது பாடகர்களை போலவோ, தாங்களே அந்த இடத்தில் மைக்கை பிடித்தபடி பாடுவது போல கனவுகள் கண்டவர்கள் எத்தனை பேர்?
அட இதுவெல்லாம் போகட்டும் ‘யூ டியூப்’ சேனல்கள் ஏராளமாய் கொட்டி கிடக்கிறது, நீங்களும் பாடராக வேண்டுமா? வாய்ப்பு கொடுப்பதற்கும் காத்து கிடக்கிறார்கள். என்று யாரோ சொல்ல நானும் ஏகமாய் முயற்சித்து ஒருவரை பிடித்து அவரும் என்னை பாட சொல்லி சோதித்து விட்டு அடுத்தவாரம் பாடிவிடலாம் என்று சொல்லி போனவர், அதன் பின் இந்த பக்கம் ஆளை காணவேயில்லை.
எல்லாம் சரி, இத்தனை வாய்ப்புக்கள் இருந்தும் நாங்கள் இன்னும் ஒரு பாடகனாக ஆக முடியவில்லையே என்னும் ஏக்கத்தில் பலர் இருக்கலாம், அந்த பலரில் முதலாவதாக நான் இருக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த சங்கதி.
காரணம் முதலாவது நான் ஒரு பாடகன் என்பதையே ஒப்புகொள்ளாத பலர் என் அருகிலேயே இருப்பதால். அதுவும் என் வீட்டில் முதலாவது எதிர்ப்பு என் மனைவி, அதை தொடர்ந்து என் குழந்தைகள். அவர்களுக்கு இனிமையான குரலில், ராகத்தில் பலர் பாடுவதை கேட்கும் போது என் பாடல், கேட்க சகிக்காமல் இருந்தது, சரி அலுவலக நண்பர்களுக்காவது நம்முடைய பாடும் திறனை காட்டுவது போல யாரும் இல்லாத (தெரிந்தே அருகில் இருக்கிறார்கள்) சமயமாக ஒரு பாட்டை ‘ஹம்மிங்’ செய்து பார்ப்பேன். அங்கு வரும் (ஏதேச்சையாய்) நண்பர்கள் ஒருவர் கூட அருமையாய் பாடுகிறாய், என்று ஒரு வார்த்தை சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தால்..!
எனது பாட்டை பற்றி ஒரு வார்த்தை கூட மூச்சு விடாதவாறு வேறு ஏதோ ஒன்றை பற்றி விசாரிப்பார்கள். அப்படி என்ன இவர்களுக்கு என் பாட்டின் மீது கோபம்?
இதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது, நான் பாடிய பாட்டை முழுவதுமாய் பாடு என்று சொல்லி விட்டால் சத்தியமாய் நான்கு வரிக்கு மேல் தெரியாது. அதனால் அவர்கள் என் பாட்டை(அதாவது என் பாடும் திறமையை) கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு விதத்தில் நன்மைதான்.
பாடகனாய் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறாய், ஒரு பாட்டை முடுவதுமாய் தெரிந்து கொள்வதுதானே? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் எல்லா பாட்டும் ஆரம்ப வரிகள் பாடுவதற்கு சுல்பமாக தோன்றுவதால் சட்டென்று ஆரம்பித்து விடுவேன், இரண்டு மூன்று வரிகள் பாடிய பின்னால் தான், அடுத்து வரும் வரிகள் ஒரே குழப்பமாக தெரியும், வரிகளை ராகமாக எப்படி பாடுவது? என்ன ராகம்? இப்படி ஒரு குழப்பம். அதை விட சிரமபட்டு அதை பாட முயற்சிக்கும் போது அது உண்மையிலேயே படிப்பது போலவே தெரியும். இதனால் சட்டென்று அடுத்த பாட்டுக்கு தாவி விடுவேன். அதுவும் ஆரம்பத்தில் சுலபமான வரிகளாக தென்படும். அடுத்தடுத்து வரும் வரிகள் இதே போல தடுமாற்றம்தான்.
இப்படியாக என் சிறுவயது முதல் இன்று வரை என்னை ஒரு கனவு பாடகனாகவே ஆக்கி விட்டது. பாத்ரூம் பாடகனாவது ஆகியிருக்கலாமே என்று கேட்டீர்களானால், நான் இருப்பது வாடகை வீடு, பொது பாத்ரூம், மூன்று குடியிருப்புக்கள். அத்தனை பேருக்கும் பாத்ரூம் வேலை முடிந்து வேலைக்கு செல்லும் அவசரம், அப்படி இருக்கும் போது என் பாட்டை கேட்க அவர்களுக்கு என்ன தலையெழுத்தா? அப்படியும் மீறி இரண்டு வரி பாடி இரண்டு கப் தண்ணீரை ஊற்றியிருக்கமாட்டேன், அதற்குள் நேரமாச்சு, நீங்க பாட்டுக்கு பாடிகிட்டு..! குரல் உயர்த்தி கூப்பாடு போடும் அக்கம்பக்கத்தார்கள். அதுவும் அடுத்து பாத்ரும் செல்ல காத்திருப்பவர்கள்.
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அல்லது கண்டிப்பாய் அனுபவமாவது பட்டிருக்கவேண்டும், கல்யாண சாப்பாட்டு பந்தியில் அடித்து பிடித்து இடம் பிடித்து இலைமுன் உட்கார்ந்து சாம்பாரில்தான் ஆரம்பித்திருப்போம், அதற்குள் பின்னால் வந்து நம் இலையையே உற்று பார்த்தபடி நின்றிருப்பார்கள். இவன் எப்போ ரசம், தயிர், சாப்பிட்டு இடத்தை காலி பண்ண போகிறான்? என்னும் சிந்தனையில். அது போலத்தான் எங்கள் பொது பாத்ரூமில் இப்படி ஒரு போட்டி, இதில் நான் பாடி…?
இப்படியாக நான் எதிர்பார்த்து காத்திருந்த அதிர்ஷ்டம் ஒரு நாள் என்னை தேடி வந்தது. ஒரு நாள் நண்பன் அழைத்தான் என்று அவன் வீடு சென்றபோது அங்கு நான்கைந்து வயதான தம்பதியர்கள் உட்கார்ந்திருந் தார்கள். என் நண்பனின் வீட்டில் ஒரு சில விருந்தாளிகளை அழைத்திருப்பதாகவும், அவர்களுக்க்காக ஒரு சில கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருப்பதாகவும், என்னையும் ஒரு பாடகனாகவே வர சொல்லியிருந்தான். (அவனுக்கு என்னுடைய ஆதங்கம் தெரியும்)
நான் போன போது அவர்களுக்கு விருந்து தயாரித்து எல்லாம் தயாராய் வைத்திருந்தார்கள். உணவு உண்பதற்கு செல்லும் முன்னால் அவர்களை உட்காரவைத்து, முதலாவது கலி நிகழ்ச்சியாக நண்பன் ஒரு சில மேஜிக்குகளை செய்து காட்டினான். அதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாய் சிரித்தார்கள். அடுத்து என்னை பாடகனாக அறிமுகப்படுத்தி பாட சொன்னான்.
எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி, ஓரளவு தெரிந்த பாட்டுக்களை ராகமிட்டு பாடிகாட்டினேன். அவர்கள் அதற்கு எந்த பிரதிபலிப்பையும் முகத்தில் காட்டா விட்டாலும் நான் முடித்தவுடன் கைதட்டியது எனக்கு ஆறுதலாய் இருந்தது. வரிசையாக மூன்று பாட்டுக்களாவது பாடியிருப்பேன்.
இன்னொரு நண்பன் தன்னுடன் வந்திருந்த நால்வருடன் ஒரு ஊமை நாடகத்தை நடித்து காட்டினான். அதில் நகைச்சுவை செய்கைகள் மட்டுமே அதிகம் இருந்தது. நாடகம் முடிந்ததும் வந்திருந்த முதிய தம்பதிகள் வாய் விட்டு சிரித்து கைதட்டினர்.
பிறகு வந்தவர்களுடன் நாங்கள் விருந்து சாப்பிட்டோம். எல்லாம் முடிந்த போது ஒரு வேன் வந்தது. அவர்கள் அனைவரையும் அந்த வேனில் ஏற்றி அனுப்பி வைத்த பின்னால் என் நண்பன் சொன்னான்,
இவர்கள், பிறவி குறைபாடு உள்ளவர்கள் சரியாக காது கேட்காது, பார்வை குறைபாடும் உண்டு. ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வைத்து தெரிந்த தொழிலதிபர் ஒருவர் பாரமாரித்து வருகிறார். இவர்களை மாதம் ஒரு முறை என் வீட்டுக்கு வரவழைத்து இது போல நிகழ்ச்சியை நடத்தி விருந்தும் கொடுத்து அனுப்புவேன். அவர்களை முழுவதுமாக வைத்து பராமரிக்க என்னிடம் வசதி இல்லை என்றாலும், இதுபோல எனக்கு இருந்த இந்த மேஜிக் கலையை அவர்களுக்கு காட்டி மகிழ்விப்பேன். அதனால்தான் உன்னை பாடகனாக்கி அவர்கள் முன்னால் பாடவைத்தேன். அது போல இன்னொரு நண்பனையும் அவனது சிறுகுழுவையும் வைத்து நாடகம் போட வைத்தேன் என்றான். அவர்களை இந்த சமூகத்தில் மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். ஆதற்கு ஏதோ நம்மால் ஆன உதவி..!
அவர்கள் யாராய் இருந்தால் என்ன? நானும் ஒரு பாடகனாக பாடியதே அவர்களை மகிழ்வித்ததே என்னை பொருத்த வரை ஒரு சந்தோசம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Jul-25, 4:20 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : naanum oru ppadakan
பார்வை : 34

மேலே