அதீதமான நம்பிக்கை அல்லது வழிபாடு
அதீதமான நம்பிக்கை அல்லது வழிபாடு
வழிபாடு என்பது நம்முடைய செயல்பாடுகளில் தொன்று தொட்டு வருவது. காலம் காலமாக முன்னோர்கள் கடைபிடித்ததை அதற்கு பின் வந்த சந்ததிகள் தொடர்ந்து கடைபிடித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
வழிபாடு என்பது இறைவனை வழிபடுதல் என்னும் வகையில் எல்லா மதத்தவர்களும் அவரவர்களுக்குரிய வகையில் அவரவர் மதங்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கொள்கிறார்கள். இந்த இறைவழிபாட்டை பற்றி இந்த கட்டுரை பேசப்படுவதில்லை.
தனிமனித வழிபாடு, குழுவின் வழிபாடு, மற்றும் தாங்கள் கண் மூடித்தனமாக நம்பும் ஒரு சில எண்ணங்களையும், முடிவுகளையும், தலை மேல் தூக்கி வைத்து வழிபடும் நம்மை போண்ர ஒரு சில மக்களை பற்றி பேசுவதாகும்.
தனி மனித வழிபாடு இது உலகம் முழுக்க இருக்கும் மனிதர்களின் பழக்கம்(ஆண் பெண்) என்றே வைத்து கொள்ளலாம். இது ஐரோப்பிய நாடாகாட்டும், ஆப்பிரிக்க நாடாகாட்டும், ஆசிய நாடாகட்டும், எல்லா மனிதர்களிடத்தும் காணப்படும் பழக்கம் அல்லது வழக்கம்.
இது சில நேரங்களில் அளவுக்கு மீறி சென்று எதிர்பாராத நிகழ்வுகளின் மூலம், அவர்களது வாழ்க்கையில் ஒரு சில அசம்பாவிதங்களை சந்திக்கும்படி கொண்டு போய் விட்டு விடுகிறது.
திரைப்படமாகட்டும், விளையாட்டு துறையாகட்டும், அல்லது எந்த ஒரு கலை நிகழ்வுகள் ஆகட்டும், ஆரம்பத்தில் அதை சாதாரணமாக பார்த்து இரசிக்க செல்லும் மனிதர்கள் (ஆண்கள் பெண்கள்) நாட்கள் செல்ல, செல்ல அந்த கலைகளையோ, திரைப் படங்களையோ, இரசிப்பது மட்டுமே வாழ்க்கை என்று அதனுடன் ஒன்றிப் போகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையில் தேவையற்ற நிகழ்வுகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் தடுமாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கிறது. விவாதங்கள், சண்டைகள் போன்றவைகள் அவரவர்களின் இல்லங்களில், வாழ்க்கை துணையிடமும், இளம் தலைமுறைகளாக அவர்கள் வீட்டில் வளர்ந்து வரும் அவர்களது வாரிசுகளிமும் தலைகாட்ட ஆரம்பிக்கிறது.
இத்தகைய கலை நிகழ்வுகளின் போக்கு இப்படி இருக்க தனி மனித வழிபாடுகள், மனிதர்களின் வாழ்க்கையில் இதை விட ஆபத்துக்கு கொண்டு போய் விடுகிறது.
திரைப்படத்துறையில் நடிக்கும் ஒருவரை தங்களது ஆஸ்தானவராக எண்ண ஆரம்பித்து நாளடைவில் அந்த திரைப்பட கலைஞரின் எல்லாவித செயல்பாடுகளையும் கண்மூடித்தனமாய் பின்பற்றும் அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது. இதில் ஆண் பெண் பேதமில்லை. ஆண் திரைப்பட நடிகர்களோ, நடிகைகளோ, அவர்களை இவர்கள் தெய்வமாக பார்க்கும் அளவுக்கு கொண்டு போய் விடுகிறது.
இதனால் அத்தகைய நடிகர்களூம், நடிகைகளும் கூட தர்ம சங்கடத்தில் சிக்கி கொள்கிறார்கள். அவர்களை பொருத்தவரை புகழ், பணம் இவைகளுக் காக தங்களது உழைப்பை கொடுக்கிறார்கள். அதன் பின் அவர்கள் நினைத் தாலும் சாதாரண வாழ்க்கைக்கு அவர்களால் திரும்பி வர முடியாது. காரணம் அவர்களை பின் தொடர்ந்து வழிபட்டு வரும் மனித (இரசிக)கூட்டம் அவர்கள் சாதாரண மனிதர்கள்தான் என்னும் எண்ணத்தையே தாங்கள் இவர்களுக்கு கொடுக்கும் அதீத முக்கியத்துவத்தால் மறக்க செய்து விடுவார்கள். இத்னால் அத்தகைய கலைஞர்கள், மனித கூட்டங்களில் வேற்பட்டவர்கள் போல தங்களை வித்தியாசபடுத்தி காட்டும் அளவுக்கு கொண்டு போய் விடுகிறார்கள்.
இதே கதைதான் அரசியல், ஆன்மீகம், மற்றும் இதர துறைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. இறைவழிபாட்டில் அதீத அளவுக்கு செல்லும் மனிதன் நாளடைவில் தனக்கும் கடவுளுக்கும் இணைப்பை எற்படுத்த யாராவது கிடைக்கமாட்டார்களா? என்று ஏங்குகிறான். அத்தகைய சக்தி மிக்கவர்களை தேடி செல்பவன் “சாமியார்கள்” என்று தங்களை அல்லது பிறரால் கூறப்படுபவர்களிடம் சரணாகதி அடந்து அவர்களை வழிபட ஆரம்பிக்கிறான். அவர் தனக்கும் கடவுளுக்கு பாலமாக இருப்பார் என்று கண்மூடித்தனமாக நம்புகிறான்.
அப்படி நம்பும் ஒரு சில சாமியார் ஆகிய நபர்கள் தாங்களும் இறை வழிபாடு செய்யும் சாதார பக்தன் தான் என்னும் உண்மை நிலை உணர்ந்து அதன்படி நடக்க முயற்சிக்கிறரகள். கண் மூடித்தனமாய் தன்னை வழிபடும் மக்களிடமும் உணர்த்த முயற்சிக்கிறார்கள்.
ஆனால் மற்ற சாமியார்கள் இந்த மனிதர்களின் கண்மூடித்தன வழிபாட்டை தங்களுக்கு சாதகமாக்கி பல விசயங்களில் அவர்களிடம் இருந்து ஏராளமான பொருட்களையும், பொருளாதார ஆதாரங்களையும் கொளையடிக்க முயற்சி செய்கிறார்கள்.
அரசியலிலும் இத்தகைய நிலைமைதான் இருக்கிறது.தாங்கள் விரும்பும் நபர் தவறே செய்யாதவர், உலகத்திலேயே நியாயமாக நடப்பவர் என்று நம்புகிறான். அவருக்கு எப்படி திரைப்படநடிகருக்கு காட்டும் அவர்களது புகைப்படங்களுக்கு பால் ஊற்றுதல், தீபம் காட்டுதல் போன்ற செயல்களை போலவே இத்தகைய அரசியல் தலைவருக்கும் காட்டுகிறான். இதை உபயோகப்படுத்தி கொண்டு, இவன் கண்மூடித்தனமாய் வழிபாடு செய்யும் அரசியல்வாதி தனது வசதிகளையும் பொருளதாரத்தையும் பெருக்கி கொள்ள் முயசிக்கிறான்.
பொதுவாகவே மனித வாழ்க்கையில் எதையும் சாதாரண நிகழ்வாக நினைத்தபடி கடந்து செல்பவர்கள் குறைவு. மற்றபடி எல்லா விசயங்களிலும், அல்லது மனிதர்களிடத்தில், அவைகளை அல்லது அவர்களை பற்றிய உண்மைகளை தாண்டி, அவர்கள் மீது அதீத நம்பிக்கை கொள்ளுதல், பாசம் கொள்ளுதல், கோபம் கொல்லுதல், இப்படி பலவித உணர்ச்சிகளை காட்டுவார்கள்.
புதிது புதிதாய் ‘சாமியார்கள்’ தோன்றுவதற்கும், ‘அரசியல்வாதிகள்’ வருவதற்கும் இத்தகைய மனிதர்களின் வழிபாட்டு எண்ணங்கள் கொண்டவர்களே காரணம்.
ஆரம்பத்தில் இருந்தே ‘மனித வளர்ப்பு’ என்பது அறிவு சம்பந்தபட்டதாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல, உணர்ச்சிகள் சம்பந்தபட்டதாக மாறிவிடுகிறது. அதனால் கூட இந்த வழிபாடுகள் தோன்றுவதற்கு வாய்பிருக்கிறது.
பிறரின் மீது வன்முறை கொண்ட கோபம், அளவு கடந்த காதல், அத்து மீறிய பாசம், இப்படி ஏதாவது ஒன்றை பிறர் மீது வலுக்கட்டாயமாக செலுத்த முற்படுகிறான். செலுத்தப்படவர்கள் தன் மீதும் இப்படி வைத்திருக்கிறரகளா என்றெல்லாம் சிந்திப்பதுமில்லை, கிரகிப்பதுமில்லை. இதனால் இவனது வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களில் தானாக சிக்கி கொள்கிறான். இதற்கும் காரணம் அவர்கள்தான் என்றும் சில நேரங்களில் அர்த்தமற்ற கோபமும் கொள்கிறான்.
வாழ்க்கை என்பது ஒவ்வொரு நிகழ்வையும் தாண்டி செல்லும் ஒரு தடை ஓட்டம் என்பது பல நேரங்களில் மறந்து விடுகிறது. இதனால் “தாண்டும் அளவுக்கு தடைகள்” கண் முன்னால் தெரிந்தவுடன், தாண்டி செல்ல நினைக்கும் முன் “ஐய்யோ” என்னும் மன நிலையில் சலித்து விடுகிறான்.
வழிபாடு என்பது நமக்குள் ஏற்படுத்தும் ஒரு இறை நம்பிக்கை மட்டுமே என்னும் அளவில் அளவோடு அதனை எற்றுக்கொண்டு மற்ற எல்லா இன்ப துக்க நிகழ்வுகளையும் தாண்டி கொண்டே செல்பவனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். நம்மால் அப்படி செல்ல முடியாமல் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் ஏதோ ஒரு உணர்வை (கோபம், தாபம், பாசம், நம்பிக்கை, காதல், காமம், இப்படி பல உணர்வுகளை பிறர் மீது செலுத்திக்கொண்டே, அவர்களை நமக்கு உதார புருஷர்களாக்கி நம் வாழ்க்கையை நாம் கடந்து கொண்டிருக்கிறோம்.
என்ன செய்வது? வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அடிப்படையில்தானே..! இப்படி சொல்லி இதே போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.