துனைவுகள்
நினைவுகளே துணையாக வருதலை வேறெப்படி அழைப்பது?
நூலாசிரியர் கி. இளம்பிறை அவர்கள் எழுதிய இந்தத் துனைவுகளில் சங்க கால பெண்பாற் கவித்துளியும், வள்ளுவ வாளியும், தத்துவ நுரைகளும், பெண்ணியக் குவளையும், பேரண்டப் பெருங்கடலும் விரவிக் கிடக்கின்றன.
‘கோல் சிந்தும் எழுத்துகளால்
தாள் முழுமை பெற்றது.
அவனும் நானும் அப்படியே’
எனும்போது ‘செம்புலப்பெயல் நீரின்’ தெறிப்புகளை உணர முடிகிறது.
‘வழித்துணை நினைவுகள்’ என்ற தலைப்பில் வரும் தொகுதியில் இசையும் நூலும் இசைந்து வர இசையாமற் போகுமா?
‘இசையும் புத்தகமும்
அமைதியான தோழர்கள் போல!
தேர்ந்தெடுக்கும் போது மட்டும்
கவனம் தேவை.
வாழ்நாள் முழுவதும் ஆதரவு தரும்.’ …
என்று பேசுகிறார்.
மற்றொரு இடத்தில், வெடிக்கிற கோணம் ஒன்று திறவு பெற, பிளவுகள் தெரிகின்றன.
‘புத்தன் என்று ஒருவன்
இல்லவே இல்லை
என்பது தான் உண்மை’
சினத்தைக் கடந்தவரே புத்த இலக்கைத் தொட்டு விட்டவர்கள் ஆவார்கள். அதனால் சினக்க மாட்டார்கள். அப்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது வேறு உலகம் தோன்றலாம்.
இது துனைவுகள் ஆனபடியால் பெண் பார்வையில் காதல் நூலெங்கும் உலா போகின்றன. அவற்றில் குறிப்பிடத்தகுந்ததாக நான் கண்டெடுத்தது பிரிவின் வடு ஏறிய இந்த வரிகளே…
‘இல்லை என்ற பிறகும்
இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
அந்தக் கைப்பேசி,
அவனுடைய முகநூல்,
அவனுடைய, அவனுடைய
என அடுக்கிக் கொண்டே போகலாம்’
இவ்வரிகளில் பாரதியையும் காணலாம்.
எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ!- புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!…
ஒரு குறும்பாவின் கூர்மையைத் தாங்கி வருகிற வரிகளும் இந்த நூலில் உட்கார்ந்திருக்கின்றன.
‘உன் சூடு தணிய
என் நிழலைப் பற்றிக் கொள்
தோழனே!’
இந்த இறுகிய வடிவம் இவரது கவிதைச் சோலைக்கு உகந்த பூ எனலாம்.
இதற்கு மாறாக, நேரடியாக வினையாற்றும் முடிச்சில்லா மொழிகளும் இதில் உள்ளன.
‘தவிக்க வைக்கும்
அன்பைத் தவிர்த்திடுவோம்!
தக்க வைக்கும்
அன்பைப் பற்றிக் கொள்வோம்…’
அதைப் போல, மாற்றுக் கோணங்களுக்கு இதில் நிறைய இடமுண்டு.
‘சிற்றின்பம் தவிர்த்து பேரின்பம் அனுபவிக்க இயலாது’ என்கிறார். பேரின்பநிலையை எட்டியதாகச் சொல்லப்பட்டிருக்கும் துறவிகளுக்கு இவ்வரி தள்ளுபடி செய்யப்பட வேண்டியது.
உணர்வுகளை நுட்பப் பையினுள் மடித்து வைத்துத் தரும்போது கனம் கூடுகிறது.
‘பாட்டியின் பல்லக்கு
மணம் பரப்பிக் கொண்டே சென்றது’
என்ற வரிகளில் நிலையாமைத் தத்துவம் உணர்வலையை வீசிச் செல்கிறது.
மற்றொன்றைத் தாழ்த்தாது ஒன்றை ஏற்றுகிற திறன் வல்லமைவரம்.
ஆசிரியர்,
‘பொழுதைக் கழிக்க
ஆண் குழந்தை போதும்
பொழுதுகள் யாவும் களிக்க
பெண் குழந்தை வேண்டும்’ என்கிறார். ஆன போதும் , ‘வாழிய பெண் சூழ் ஞாலம்’ என்ற ஒளிர்வரியில் மிளிர்கிறார்.
‘புரிதலும் பரிவும் கலந்து
பொதிந்த அறமே பேரறம்.’
இந்த வரி தான் இந்நூலின் தனிப்பெருங்கடவுள் என்றும், நூலாசிரயர் கி. இளம்பிறை அவர்கள் இனி பயணிக்கவிருக்கும் ‘துனைவுகள்’ என்றும் தோன்றுகிறது.
ஆசிரியருக்குப் ‘படைப்பு சூழ் வாழ்வு’ மிளிர எனது தமிழ் வாழ்த்துகள்.

