முத்தொள்ளாயிரம் சேரன் 12 நேரிசை வெண்பா

முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா

மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்
சொல்லவே வேண்டும் நமகுறை - நல்ல
திலகங் கிடந்த திருநுதலாய்! அஃதால்
உலகங் கிடந்த இயல்பு! 12

பொருளுரை:

இது தலைவி தோழிக்குக் கூறியது.

சிறந்த திலகம் அணிந்த அழகிய நெற்றியையுடைய தோழியே! நீர்வளம் மிக்க மாந்தை நகரத்தாரின் பெருமை மிக்க மன்னவனாகவே இருப்பினும் அச்சேர மன்னனிடம் அஞ்சாதே சென்று என் மனக்குறையை நீ அவனிடம் சொல்லத்தான் வேண்டும். அஃதல்லவா உலகில் உயர்ந்தோரிடம் அமைந்திருக்கும் நற்பண்பாகும்?

உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே,
இடுக்கண் களைவதாம் நட்பு!

என்பதைத் தன் தோழிக்கு நினைவூட்டி, சேரனிடம் சென்று தன் குறையைக் கூறுமாறு தலைவி வேண்டுகிறாள். ம

ல்லல் - வளப்பம்; மாந்தை - சேரனது நகரங்களில் ஒன்று; கடுங்கோ - சேரனது பெயர்களுள் ஒன்று,

“செல்வக் கடுங்கோ வாழியாதன்” என வருதல் காண்க. நமகுறை - நம்+அ+குறை; ‘அ’ - ஆறாம் வேற்றுமை பன்மை உருபு;

திலகம் - நெற்றியிலிடும் பொட்டு; திரு - அழகு; நுதல் - நெற்றி;

உலகம் - உயர்ந்தோர், “உலகெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே” என்பது தொல்காப்பியம்.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (10-Jul-25, 10:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே