செவப்பி - அத்தியாயம் 8

செவப்பி - அத்தியாயம் 8
=======================

நடுங்கிப் போய் கெடந்தார் பண்ணையார்..

ஒழுங்கா போயிட்டு இருந்த வாழ்க்கையில, தேவையில்லாம ஏதேதோ செய்யப்போயி, இப்ப செவப்பி கைல வசமா மாட்டிக்கிட்டாரு..

இப்பெல்லாம் அவரு வேற மாதிரி ஆயிட்டார்..

ஒழுங்கா ஏதாவது விஷயம் பேசிட்டே இருப்பார், திடீர்னு பயந்த மாதிரி உலற‌ ஆரம்பிச்சிடுவார்.

அவருக்குத்தான் அந்த ஊரிலேயே ஆறுதல் சொல்ல யாருமில்ல..

ரெண்டு நாளைக்கு முன்னாடி அவரோட பிறந்தநாள். அவங்க வீட்டு ஆளுங்க எல்லாம் சேர்ந்து அவர சந்தோஷமா வச்சிருக்க என்னென்னவோ முயற்சி பண்ணினாங்க...

ஆனா.. அவரு தான் ஒரு மாதிரியே இருந்தார்...

கேக்க வெட்டும் போதும் சரி.. எல்லோரும் ஹேப்பி பர்த்டே பாட்டு பாடின போதும் சரி.. கேக் சாப்பிடுங்கனு அவரோட மனைவி ஊட்டி விட்ட போதும் சரி.. எங்கேயோ வெறிச்சு பாத்துக்கிட்டே இருந்தார்..

அப்ப அவருக்கு ஒரு போன் வந்துச்சு..

'அவரோட ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு ஒன்னு முழுசா எரிஞ்சி போச்சுனு'

கலங்கிப்போனவர் மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டார்..

'செவப்பி பழி வாங்க ஆரம்பிச்சுட்டா'

அடுத்த ரெண்டு மூணு நாளைக்கு அவர் அடிக்கடி செவப்பியோட கோவத்தப் பார்க்க‌ ஆரம்பிச்சாரு..

ஒழுங்கா இருந்த அவரோட மொபைல் சுக்கு நூறா உடைஞ்சுப் போச்சு..

நல்லா ஓடிக்கிட்டிருந்த ஏசி, கார், தண்ணி மோட்டர்னு ஒவ்வொன்னா மக்கர் பண்ண ஆரம்பிச்சது..

துவண்டு போயிட்டாரு பண்ணையார்..

விஷயம் மெள்ள‌ ஊருக்குள்ள பரவ ஆரம்பிச்சுச்சு..

'செவப்பி சாகல.. இன்னும் நம்ம கூடத்தான் இருக்கா.. மறுபடியும் எப்ப‌வும் போல தப்பு செஞ்சா தண்டனை உண்டுனு'

இது மொத்த ஊரையே மகிழ்ச்சியில ஆழ்த்துச்சு சில பேரைத் தவிர..

கிலி பிடிச்ச அவங்கெல்லாம் வெலவெலத்துக் கெடந்தாங்க..

'என்ன! மறுபடியும் பழைய மாதிரியா..! இந்த கிராமத்துல‌ இருந்தா எப்பவும் பயந்துட்டே தான் வாழனும் போல.. என் நெனச்சவங்க அந்த ஊர‌ காலி பண்ணிட்டு வேற ஊருக்கு கெள‌ம்பி போக ஆரம்பிச்சாங்க..

பண்ணையார் வீட்டம்மா தான் பாவம்..

அவங்க என்ன தப்பு பண்ணாங்க..? தப்பு பண்ணியது பண்ணையாரு தானே!

இப்ப தண்டனை அவங்க வீட்ல எல்லாருக்குமா?

இதுக்கு ஒரு தீர்வே இல்லையா..! அப்படினு யோசிச்சு குழம்பிப் போய் இருந்தாங்க..

பண்ணையாரோட‌ மாமாவும் அவங்க வீட்டுல தான் இருந்தாரு, கொஞ்சம் வயசானவரு.. எல்லோரும் அவரை பெரியவருனு தான் கூப்பிடுவாங்க..

அவரே பண்ணையாரு பொஞ்சாதி கற்பகத்தைக் கூப்பிட்டார்..

"என்ன கற்பகம் இப்படி ஆகிப்போச்சு நம்ம நெலம? இத‌ மாத்த‌ வேண்டாமா? மறுபடியும் சந்தோஷத்த இந்த வீட்டுக்குள்ள கொண்டுட்டு வர வேணாமா...?"

"ஆமா பெரியவரே! இப்பெல்லாம் இந்த வீட்ல இருக்கவே பயமா இருக்கு.. அவர் திடீர்ன் திடீர்னு பெணாத்தா ஆரம்பிச்சிடுறார்.. பசங்கெல்லாம் பயந்து போய் கெடக்காங்க.. சீக்கிரமா ஏதாவது செய்யணும்"

"நானும் அதத்தாம்மா யோசிச்சிட்டே இருக்கிறேன்... எனக்கு ஒரு மந்திரிவாதியத் தெரியும்.. அவனுக்கு இந்த விஷயம் எல்லாம் அத்துப்படி.. கொஞ்சம் பணம் அதிகமாக கேப்பான்.. பாத்துக்கலாம்.."

"அவனைப் போய் பார்த்து பேசி, நம்ம‌ வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஏதாவது பூஜை போடச் சொல்லலாம்.. கெட்ட ஆத்மாவெல்லாம் நம்ம வீட்ட விட்டு மட்டுமல்ல, நம்ம‌ ஊரையே விட்டுப் போயிடும்.. சரியா..?"

"சரிங்க பெரியவரே.. அப்படியே செய்யுங்க.."

உடனே கிளம்பி அந்த மந்திரவாதியைக் கூட்டி வரச் சென்றார் பெரியவர்..

(முயற்சி பலிக்குமா.... தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (1-Oct-19, 8:22 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 128

மேலே