ஒலி

மூன்று நாட்கள் ஆகிறது.

இறுக்க மூடிய அந்த அறைக்குள் விசனமுற்று கீழ்ப்படியாத காற்றுடன் அவன் இருந்தான்.

சுவற்றில் திகைத்து கொண்டிருந்த கடிகாரத்தில் ஒவ்வொரு நொடியின் அசைவும் பிழை பொறுக்காத ஆசிரியனை போல் சினத்துடன் உதிர்ந்தது.

விக்கித்து நின்ற நாட்காட்டியில் செத்த நாட்களின் பெயர்கள் அன்று பிறந்த நாளை வன்மத்துடன் கொறித்து கொண்டிருந்தன.

அறை நிறமின்றி குமைந்து கொண்டிருந்தது. உலறியது. அழுதது.

சமையல் அறையில் ஒவ்வொரு பாத்திரமும் கனத்த மௌனத்தில் முங்கி விளக்கின் மஞ்சள் ஒளியை பிளந்து கொண்டிருந்தன. வெட்டுப்பட்ட ஒளி சுவரில் தங்கி திண்டாடி சுருங்கின.

அவன் வெளிச்சமாக்கி கொண்ட அறையை மறுநொடிப்பொழுதில் இருளாக்கி கொண்டதும் அது நத்தையை போல் ஊர்ந்து செல்ல துவங்கியது. தள்ளாடும் அதன் கால்களை மரங்களின் வேர் பற்றி இழுத்து தடை செய்தன.


நேர்மையான அசௌகர்யமான எந்த எண்ணமும் மனதின் கூச்சலுக்குள் திமிறி ஒளிந்தது.

மனம் பொறுமையற்ற பறவையை போல் சிறகுகள் கொண்டு விசிறி விசிறி அடித்து கொண்டன.

அவன் கட்டிலில் இருந்து இறங்கி தேநீர் அருந்த விரும்பினான். அவன் உடல் எந்த சப்தங்களையும் தாங்கும் திறன் அற்று அவன் நிழலை பற்றி கொண்டே நடந்தது.

மொழி அவன் வசமற்று தடுமாறியது. குழப்பங்களை சீவிக்கொண்டே இன்னொரு மூலையில் இருந்த அடுப்பின் கருப்பு பொத்தானை திருகினான்.

நீலமாய் ஒளிர்ந்த நெருப்பில் காடுகள் உருகும் காட்சியை பார்த்தபோது அதை அணைத்தான்.

மீண்டும் கட்டிலில் அமர்ந்தான்.

கொலையின் பசி அவன் உதிரத்தில் பச்சை நதியாய் பெருகி மிதந்தது.

பசியின் கர்வம் உணர்ந்தான்.

மீண்டும் தேநீர் பருக ஆசை வந்தது.

மலையை பிளப்பது போல் ஓசை...

யாரோ கதவை தட்டினார்கள்.

பிரபஞ்சத்தின் அந்த ஒரே கடைசி மனிதன் கதவை நெருங்கினான்.

(Fredric Brown எழுதிய knock கதையின் தழுவல்)

எழுதியவர் : ஸ்பரிசன் (1-Oct-19, 10:58 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 144

மேலே