தினம் தினம் காதலர் தினம்…

#தினம் தினம் காதலர் தினம்…

காதல்புகும் நுழைவாசல்
கண்கள் தானே
கணநேரத் திறப்பில்கதை
பேசும் தானே
மோதலிலும் இன்பமுண்டு காதல் என்றால்
முடிவதில்லை உண்மையன்பு கொண்டி ருந்தால்..!

மென்பனியும் அனலாகும் பார்வை கலந்தால்
வெயில்கூட சிலிர்ப்பூட்டும்
வெட்கம் மறந்தால்..!
கன்னிக்கால காதல்சொர்க்க
வாசல் திறக்கும்
கனிந்தகாதல் இல்லத்திலே இன்பம் மணக்கும்..!

ஆழ்மனதில் வேரூன்றி ஆழம் பார்க்கும்
அடிமைசெய்து அன்பெனும்கை விலங்கைப் பூட்டும்
தாழ்திறந்த மனதுள்ளே
தகதிமி யாடும்
தன்னிலையை மறந்துமதுர கானம் பாடும்..!

விழிக்கடலில் அலைப் பார்வை
வீசும் வீசும்
விழுந்தவர்கள் எழுந்ததில்லை
காதல் தேசம்..!
மொழியில்லா சொற்களுக்குச் சொந்தம் காதல்
ஒலியில்லா பேச்சுக்கு
சொந்தம் காதல்..!

காதலுக்குத் தினமென்று
வைத்தார் யாரோ
காணாது போவாரோ
அடுத்த நாளே
தோதாகத் துணையென்றால்
தினம் திருநாளே
தூயஅன்பை சூடியோர்க்கு
தினம் பெருநாளே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (15-Feb-25, 11:48 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 43

மேலே