மருத்துவ வெண்பா - கழுதைப் பால் - பாடல் 1

ஒரு கழுதை தன் குட்டிக்குக் கொடுத்தது போக எவ்வளவு பால் கறக்கும்?
1 லிட்டர் பால் பெற எத்தனை தாய்க் கழுதையிடம் பால் கறக்க வேண்டும்?

மருத்துவ நேரிசை வெண்பா

கழுதைப் பால்

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர்களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

வெண்பாக்கள்:

கழுதைப்பால் வாதங் கரப்பான் விரணந்
தழுதளையுள் வித்திரதி தானே – யெழுகின்ற
ஒட்டியபுண் சீழ்மேக மோடு சொறி சிரங்கு
கட்டியிவை போக்குங் கழறு. 1

கர்த்தவத்தின் பாற்குக் கரிய கிரந்தியறுஞ்
சித்தப் பிரமைபித்தந் தீருங்காண் – தத்திவரும்
ஐயம் ஒழியும் அதிக மதுரமுமாஞ்
செய்ய மடமயிலே செப்பு. 2

கர்த்தவம் - கழுதை

கழுதைப் பால் வாதநோய், கரப்பான், ரணம், தழுதளை ரோகம், உள்வித்திரிதிக்கட்டி, உருவாகும் ஒட்டுக்கிரந்தி, சீழ்ப்பிரமேகம், சொறி, சிரங்கு, அற்புத விரணம் ஆகியவற்றைப் போக்கும் எனப்படுகிறது.

கழுதைப் பால் கருங்கிரந்தியை முற்றிலும் நீக்கிவிடும்.
சித்தப்பிரமையும், பித்தமும் தீர்ந்து விடும்.
மெதுவாகத் தொடர்ந்து வரும் கபநோயை (Tuberculosis in the lungs) அழிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சுவையில் இப்பால் மிகுந்த மதுரம் உடையது என்று அழகிய மயில் போன்ற பெண்ணே சொல்! என்கிறார் இவ்வாசிரியர்..

தழுதளை ரோகம், உள்வித்திரிதிக்கட்டி (அநேகமாக Lymphadenitis, Lymphoma, Hodgekins disease ஆக இருக்கலாம்) என்ற நோய்களின் தகுந்த ஆங்கிலப் பெயர் அறிந்து சொல்கிறேன்.

உபயோகிக்கும் முறை: கழுதைப் பாலை தனியாகவும், மருந்துகளுடன் சேர்த்தும் கொடுக்கலாம். அதிகமாக அழுகின்ற குழந்தைகளுக்கு கொடுக்க அழுகை நிற்கும்.

நாம் விளையாட்டாகச் சொல்லும் வேடிக்கையான சொலவடைக்குப் பொருள் இன்றுதான் புரிந்தது!

’அழுத பிள்ளை சிரிச்சுதாம்! கழுதைப்பாலைக் குடிச்சுதாம்’.

வயிற்றில் எரிச்சல் இருந்தால், கழுதைப்பால் கொடுத்தால் ‘soothing effect‘ அதிகமாக இருக்கலாம்; எரிச்சல் நீங்கிக் குழந்தை மகிழ்வாகச் சிரிக்கலாம்.

இன்றும் பல கிராமத்தின் தெருக்களில் கழுதையை ஓட்டியபடி வந்து அங்கங்கே கறந்து ‘கழுதைப் பால்’ குழந்தைகளுக்கு விற்பார்களாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Oct-19, 10:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

மேலே