கஜல் கவிதைகள் 1

(கஜல் கவிதைகள் தனித்தனி கண்ணிகளால் ஆனவை. ஒவ்வொன்றும் தனித்தனி கவிதைகள் ஆனாலும் ஒன்றுக்கொன்று ஊடே ஒரு மெல்லிய உறவுப் பாலம் விரிவதை உணரமுடியும்)


கண்ணில் விழுந்த தூசி போல்
கண்ணீரோடு செல்லும் காதலியே!

வார்த்தைகளை வேர்களில் ஒளித்து வைத்தேன்.
பூக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டேன்.

உன் நினைவை எழுதினேன்.
ஒரு வார்த்தை அழுகிறது.
ஒரு வார்த்தை சிரிக்கிறது!

உன் பேரில் நீ இல்லை!
தீ இருக்கிறது!


ரமலானில் நோன்பிருக்கலாம்.
உணவு தண்ணீர் தவிர்த்து!
சுவாசம் உன் நினைவுகளை
என்ன செய்ய?


என் இதயம் என்ன உன் இரவா?
சலனமின்றி அமைதியாய் இருக்க!

ஓடிச் சென்றோம், யாரும் அறியாமல்!
நானும் உன் நினைவும்!


காற்றடிக்க கண் விழுந்த தூசி நீ !
கண்ணோடு நீ !
கண்ணீரில் நான்!

தொழுகை விரிப்பை விரித்தேன்!
தொழுகையில் நீ சிரித்தாய்!

நெஞ்சில் உன் ஏகாதிபத்தியம்!
கண்ணில் உப்புச் சத்தியாகிரகம்!


என் நெஞ்சில் உன் நினைவலாரம்!
நான் தூங்காமலிருக்க!

மரம் தரமறுத்த நிழலை,
உன் நினைவுகள் தந்தன.

எழுதியவர் : பாபுகனி மகன் (11-Oct-19, 8:03 am)
சேர்த்தது : Babu Ganison
பார்வை : 262

மேலே